Thursday, 10 December 2015

தாய்த் தமிழக உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டுவோம்


 தாய்த் தமிழகத்தின் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ள தீவிர பருவமழைத் தாக்கம் புலம்பெயர் தமிழ் மக்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையின் சீற்றம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பழிவாங்குகின்றதோ என நினைக்கத் தோன்றும் வகையில் நிலைமைகள் உள்ளன.

யுத்தப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஆறு ஆண்டுகளாகப் போராடி வரும் தாயக மக்கள் இயற்கைச் சீற்றம் காரணமாக மற்றொரு 'போர்முனை"யைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. தாய்த் தமிழக உறவுகளின் நிலையோ கண்ணில் நீரை வரவழைப்பதாக உள்ளது. தொலைக்காட்சிகள் மூலம் காணக்கிடைக்கும் காட்சிகள் மனதை உருக்குகின்றன.

ஈழத் தமிழருக்குத் துயரம் நேரும் போதெல்லாம் நேசக்கரம் நீட்டும் தாய்த் தமிழக மக்கள், எமது துயரத்தைத் தமது துயரமாக நினைத்து உயிரையே துச்சமென நினைத்துப் போராடும் மக்கள் இயற்கையோடு மல்லுக்கட்டி நிற்கும்போது எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது அவசியம் அல்லவா?

வல்லரசு நாடான இந்தியாவிற்கு வெளியில் இருந்து உதவியோ, நிவாரணமோ செல்ல வேண்டிய தேவை இல்லை. ஆனாலும், தொப்புள் கொடி உறவுகளான நாம் சொந்தச் சகோதரர்களின் துயரத்தில் பங்கு கொள்ள வேண்டாமா? இந்த வேளையில், 'காலத்தால் செய்த உதவி ஞாலத்தில் மாணப் பெரிது" என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஒப்ப காலத்தால் உதவி செய்ய ஒவ்வொரு புலம்பெயர் பொது அமைப்புக்களும், இயலுமான தனிநபர்களும் முன்வர வேண்டும் என சிவராம் ஞாபகார்த்த மன்றம் - சுவிஸ் கேட்டுக் கொள்கிறது.

அதேவேளை, அரச இயந்திரம் செயற்படும் வரை காத்திராது தாமாகவே முன்வந்து மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்ட பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தனி நபர்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஈழத் தமிழர்களும் தாய்த் தமிழகத் தமிழர்களும் அரசியல் ரீதியாக ஒன்றுபடுவதை பல சக்திகள் பன்னெடுங் காலமாகவே எதிர்த்து வருவதை அனைவரும் அறிவோம். இன்று தாய்த் தமிழக உறவுகள் துயரத்தில் இருக்கும் போது நாம் நேசக்கரம் நீட்டத் தவறுவோமேயானால் அத்தகைய சக்திகள் பிரித்தாளும் தந்திரத்தை உபயோகித்து எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிட முயலலாம்.

எனவே, அதற்கு இடங்கொடாது எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தக் கொள்ள வேண்டும் என அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

சண் தவராஜா
இனைப்பாளர்

Monday, 26 January 2015

Tamil journalists firmly believe ?

A new government has come to power in Sri Lanka, after the recent Presidential Election. It is hailed that the sufferings of the all communities living in the country have come to an end and a corrupt-free government is established. Meanwhile, the new government invited all the exiled journalists, human rights defenders and anti-government activists to return.
We understand that one or two Sinhala journalists have already returned. And some are planning to return in the near future.
As far as Sinhala journalists are concerned, they faced threats only from the government and its armed forces. But, Tamil journalists apart from them, faced the wrath of the Tamil para militaries too. Hence, exiled Tamil journalists are not in a position to return forthwith.
In the past, a great number of journalists have been killed in Sri Lanka. But, many speaking about those killings mention only about the Sinhala journalists. Few speak about the slain Tamil journalists like M. Nimalarajan, G. Nadesan, D. Sivaram, etc.
How can the exiled Tamil journalists return while those who have killed their colleagues still roaming around scot-free?
If the new government is honestly wants the exiled Tamil journalists to return, Sivaram Memorial Society requests the rulers to immediately conduct impartial investigations on the killings of Tamil journalists and attacks on Tamil media in the past and punish the perpetrators.
By doing so only, we firmly believe, that a conducive environment could be created for the exiled Tamil journalists to consider returning home in future.

Shan Thavarajah
Coordinator

தமிழ் ஊடகவியலாளர்கள் நம் பிக்கையோடு நாடு திரும்ப!

நடந்து முடிந்த அரசுத் தலைவர் தேர்தலை அடுத்து சிறி லங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. சகல இன மக்களும் அனுபவித்து வந்த கொடுமைகள் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு ஊழல் அற்ற புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேளையில், நாட்டைவிட்டு வெளியேறச் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசாங்க அதிருப்தியாளர்கள்  ஆகியோரை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு புதிய அரசாங்கத்தின் சார்பில் அழைப்புவிடுக்கப் பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஒரு சில சிங்கள ஊடகவியலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக அறிகிறோம். இன்னும் சிலர் கிட்டிய எதிர்காலத்தில் நாடு திரும்ப உள்ளதாகவும் அறிகிறோம்.
சிங்கள ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் முன்னைய அரசாங்கங்களதும், அரச படைகளதும் அதிருப்திக்கு மாத்திரமே ஆளாகி இருந்தனர். ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் இதற்கும் அப்பால் தமிழ் இராணுவக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. எனவே, தமிழ் ஊடகவியலாளர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இப்போது முடிவு எடுக்க முடியாத சூழலே உள்ளது.
கடந்த காலங்களில் சிறி லங்காவில் அநேக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப் பட்டிருந்தார்கள். இன்று ஊடக சுதந்திரம் பற்றிப் பேசும் அநேகர் இவ்வாறு கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களைப் பற்றியே அதிகம் பேசுகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களான  நிமலராஜன், ஜி.நடேசன்மற்றும்  டி.சிவராம் போன்றவர்களைப் பற்றிப் பேசுவது குறைவு.
இத்தகையோரின் கொலைகளைப் புரிந்தவர்கள் இன்னமும் சமூகத்தில் சுதந்திரமாக உலாவரும் நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நாடு திரும்புவது?
எனவே புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்களை சிறி லங்காவிற்கு மீள அழைத்துக் கொள்வதில் புதிய அரசாங்கம் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்குமானால், கடந்த கால ஆட்சிகளின் போது கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பாகவும், ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நீதியான விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க உடனடி  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிவராம் நினைவு மன்றம் கேட்டுக் கொள்கிறது.
இதன் மூலமே இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலவுகின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் புலம்பெயர்ந்த ஊடகவிலாளர்களும் நம்பிக்கையோடு நாடு திரும்ப முன்வருவார்கள் என்ற சேதியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
சண் தவராஜா
இணைப்பாளர்

அறிக்கை

Sunday, 14 April 2013

உதயன் அலுவலகம் மீண்டும் தாக்கப் பட்டுள்ளமையை சிவராம் நினைவுப் பணிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.சிறி லங்காவில் ஊடகங்களுக்கு எதிராகத் தொடரும் அச்சுறுத்தலின் மற்றொரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாழிதழின் அலுவலகம் மீண்டும் தாக்கப் பட்டுள்ளமையை சிவராம் நினைவுப் பணிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

உதயன் பத்திரிகை வெளிவருவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறி லங்கா இராணுவத்தின் கரங்களே நேரடியாகத் தொடர்பு பட்டிருக்கின்றது என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமல்ல.

சிறி லங்காவில் இன்றுவரை அதிக எண்ணிக்கையில் தாக்குதலுக்கு இலக்கான ஒரு பத்திரிகை நிறுவனம் எனப் பட்டியல் இட்டோமேயானால் அதில் முதலிடம் உதயன் பத்திரிகை நிறுவனத்துக்கே கிடைக்கும். உதயன் பத்திரிகை நிறுவனம் மாத்திரமன்றி அதன் சகோதரப் பத்திரிகையான சுடரொளி கூட கடந்த காலங்களில் பல்வேறுவிதமான தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இலக்காகி வந்துள்ளது.

இந்த இரு ஊடகங்களும் தொடர்;ச்சியாகத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதன் காரணம், அவை தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் தந்து வருகின்றமையும் அத்தகைய செயற்பாடு சிறி லங்கா அரசாங்கத்தின் பேரினவாத நடவடிக்கைகளைத் தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தடங்கலாக அமைந்;துள்ளமையுமே. வடபுலத்தில், குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல், சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்றம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தொடர்ச்சியான அச்சுறுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அவலம் என்பவற்றுக்கு எதிராக உதயன் தொடர்ச்சியாகவும் காத்திரமாகவும் குரல் எழுப்பி வருகின்றது. இதனைத் தடுத்துவிடவும், விரைவில் எதிர்பார்க்கப்படும் வட மாகாணத் தேர்தல் சமயத்தில் தமிழ் மக்களின் குரலை ஒடுக்கிவிடுவதற்குமான முன்னேற்பாடாகவுமே இத்தாக்குதல் நடாத்தப் பட்டிருக்கின்றது.

அண்மைக் காலமாக உதயன் நாளிதழுக்கு எதிராகத் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்க சார்பு சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சேறு பூசும் வகையிலான பிரசாரத்தின் ஒரு அங்கமாகவும் இத்தாக்குதல் கருதப்பட வேண்டும்.

உதயன் நாழிதழ் மீதான தாக்குதல் தொடர்பில் சிறி லங்கா அரசாங்கத்திடம் முறையிடுவதாலேயோ அன்றி குற்றவாளிகளைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்துமாறு கோருவதாலேயோ பயன் ஏதும் விளையாது என்பது உலகறிந்த உண்மை. எனவே, இது விடயத்தில் சர்வதேச சமூகமே காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஊடக நலன்பேணும் உலகளாவிய நிறுவனங்கள் இவ்விடயத்தை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் சென்று சிறி லங்காவில் ஊடக சுதந்திரத்தை உறுதிப் படுத்தவும், ஊடகவியலாளர்களினதும் ஊடகப் பணியாளர்களினதும் உயிர்களைக் காக்கவும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அரசாங்கத்தின் சார்பு அற்ற, சுதந்திரத் தமிழ் ஊடகங்கள் மீது கிட்டிய கடந்த காலத்தில் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவை விரைந்து தடுக்கப்படாது விட்டால் சிறி லங்கா மற்றுமொரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு இந்த நிலைமையைத் தடுப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

சண் தவராஜா
இணைப்பாளர்

Wednesday, 2 May 2012

"தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பயணம்"

FILM TRAILER சிவராம் நினைவு நிகழ்வு மற்றும் தராக்கி ஆவணப்படம் திரையிடல் சென்னையில் ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்றது. திரைப்படத்துறையினர் சென்னை ஊடகவியலாளர்கள் ஆய்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சென்னை எம் எம் திரையரங்கில் தராக்கி ஆவணப்படம் திரையிடப்பட்டது. சிவராம் கொல்லப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இந்த ஆவணப்படம் வெளியிடப்படுகிறது. சிவராம் கொல்லப்பட்டபோது சென்னையில் ஒரு சில கண்டனக் கூட்டங்கள் நடைபெற்ற பின்னர் முதல் தடவையாக இந்த நினைவு நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆவனப்படதினை ஊடவியலாளரும் ஆவணப்பட இயக்குனருமான சோமிதரன் தயாரித்திருந்தார். சிவாரம் கொலைக்கு பின்னர் சரிநிகர் பத்திரிகை ஆசிரியர் சிவகுமாருடன் இணைந்து இலங்கை தமிழ் ஊடவியாலாளர்கள் மற்றும் ஊடகவியல் குறித்து ஒரு ஆவணப்படத்திற்கான ஓளிப்பதிவை ஆரம்பித்து தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் அதில் ஒரு பகுதியாக சிவராம் நினைவாக "தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பயணம்" ஆவணப்படம் சுவிஸ் சிவராம் ஞாபகார்த மன்றத்தின் அனுசரணையுடன் திரையடப்பட்டது. இந்த படத்தில் சிவராமுடன் நெருக்கமாக இருந்தவர்கள் சிவராமின் மனைவி மற்றும் பிள்ளைகள் எனப் பலரும் சிவராம் குறித்து இந்த படத்தில் பேசியிfருக்கிறார்கள். ஒரு ஊடகவியலாளனின் பயணமும் மரணத்துள்ளான வாழ்வும் கண்ணெதிரே தெரியும் மரணத்தை எதிர்கொண்டு ஊடகப் பணியாற்றியதும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Taraki a journalist journey . 55 min Tamil and English. direction by Someetharan . editing by P kamalakannan

சிறி லங்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானமும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமும்


சிவராம் நினைவுக் கருத்தரங்கு 4
29 ஏப்ரல் 2012
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர்
த.தே.கூ. வன்னி மாவட்டம்
நாடாளுமன்ற கொறடா, த.தே.கூ.
தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்

அன்பு நண்பர்களே,

நண்பர் சிவராம் அவர்களின் ஏழாவது நினைவு தினத்தில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம். தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தமது அரசியல் பயணத்தை மேற்கொண்ட வேளையில் அவர்களோடு சேர்ந்து பயணித்தவர் அவர். ஒரு பயணத்தின் சக பயணியாக மட்டுமன்றி சில வேளைகளில் பயணத்தின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவராக, வழிகாட்டுனராக, வழிநடத்துனராக எனப் பல்வேறு பரிமாணங்களில் அவரது பயணம் அமைந்திருந்தது. அவரது வரலாற்றுப் பரிமாணமே ஏழு ஆண்டுகளின் பின்னரும் அவரது பெயரால் நாம் இங்கு கூடியிருக்கக் காரணமாகின்றது.

தூரதிர்ஷ்டவசமாக தமிழ் மக்களின் இக்கட்டான அரசியல் சூழல் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எத்தகைய திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்? நாம் செல்லுகின்ற திசை சரியானதா? எம்மை அத்தகைய திசையில் அழைத்துச் செல்பவர்கள் அதற்குத் தகுதியானவர்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே நாம் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இத்தகைய பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய வரலாற்றுச் கூழல் உருவாகியுள்ளது.

விடுதலையை நோக்கிப் பயணம் செய்த மக்கள் தம்மை வழிநடத்தி வந்த சக்தியைத் தொலைத்துவிட்டு நிற்கும் சூழலில், ஒரு அரசியல் கட்சியின் சக்திகளுக்கு அப்பாற்பட்டுச் சகல முனைகளிலும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த மூன்று வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றது. இந்தக் காலகட்டத்தில் எம்மோடு வந்து புதிதாக இணைந்து கொண்டோர் பலர். எம்மை விட்டுச் சென்றோர் சிலர். அடுத்தடுத்துப் பல தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைமை. உள்ளும் புறமும் பல அவதூறுகள், குற்றச் சாட்டுக்கள், வசைபாடல்கள், புறக்கணிப்புக்கள் என அலைமோதும் கடலில் எமது பயணம் அமைந்துள்ளது.

மறுபுறம், பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படுவதைத் தாமதப்படுத்தும் நோக்கம் கொண்டதே என நன்கு தெரிந்து கொண்டும் தொடர்ந்தும் சிறி லங்கா அரசுடன் பேச்சுக்களை நடாத்த வேண்டிய நிலைமை. அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகள் அறிவிப்புக்களாக வெளிவரும் முன்னரேயே அதற்கான மறுப்புக்கள் அரசாங்கத்தின் உள்ளேயே மற்றொரு தரப்பிடம் இருந்து வெளிப்படும் அவலம்.

ஆனாலும் நாங்கள் தொடர்ச்சியாக, சகிப்புத் தன்மையோடு பேச்சுக்களில் கலந்து கொள்வதால் அரசாங்கத்தின் பொய் முகத்தை எம்மால் தோலுரித்துக் காட்ட முடிந்திருக்கிறது. காலங்காலமாகத் தமிழ்த் தலைமைகளுக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்றாது விடும் சிங்களத் தலைவர்களின் போக்கு மகிந்த ராஜபக்~ ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தம் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. அது மாத்திரமன்றி தொடரவிருக்கின்ற பேச்சுக்களில் ஒரு நடுநிலையான மத்தியஸ்தர் அவசியம் என்பதுவும் உணர்த்தப் பட்டுள்ளது. எனவேதான் நாங்கள் தற்போது மூன்றாந் தரப்பின் மத்தியஸ்தம் தொடர்பாக பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கை என்னவென நன்கு தெரிந்து வைத்துள்ள போதிலும் தெரியாதது போல் நடித்துக் கொண்டு சிங்கள மக்களுக்கு ஒன்றும் சர்வதேசத்துக்கு மற்றொன்றும் எனப் பொய்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஒரு மாயக் கோட்டையை அரசாங்கம் கட்டிக் கொண்டிருக்கின்றது. என்றோ ஒருநாள் இடிந்துவிழப் போகும் இந்தக் கோட்டையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு விரிசலே தற்போது ஐ.நா. மனித உரிமைச் சபையில் சிறி லங்கா அரசாங்கத்துக்கு எதிராக நிறைவேற்றப் பட்ட தீர்மானம்.

இந்தத் தீர்மானம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்களைக் கொண்ட ஒன்றல்ல. அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்த, தொடர்ந்தும் முன்வைத்துக் கொண்டுவரும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்;டவையும்; அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நாமும், புலம்பெயர் அரசியற் சக்திகளும், தாய்த் தமிழக உறவுகளும் சர்வதேசத்தோடு நடாத்திய பேச்சுக்களின் போது எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டவையும் அல்ல. தவிர, இது சிறி லங்கா அரசாங்கத்துக்குப் பலமான நெருக்குதலைக் கொடுத்து தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வைப் பெற்றுத்தர விழையும் ஒரு காத்திரமான ஆயதமும் அல்ல.

ஆனாலும் சிறி லங்கா அரசாங்கம் இந்தத் தீர்மானத்துக்கு அஞ்சியது. தீர்மானம் கொண்டுவரப் படுவதைத் தடுத்துவிடப் பல வழிகளிலும் முயன்றது. ஏனைய நாடுகளில் உள்ள தனது நண்பர்கள் அனைவரதும் ஆதரவைக் கோரியது. பெருந்தொகைப் பணத்தை வாரியிறைத்துப் பல்வேறு பிரசாரங்களையும் மேற்கொண்டது. இவ்வளவு தூரம் அரசாங்கம் அஞ்சக் காரணம் என்ன?

தனது பிடி நாட்டில் தளர்ந்து விடும் என்றோ, தனது இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்றோ மாத்திரம் அல்ல. மாறாக, சிறி லங்காவில் சகல இடங்களிலும் ஆயுதப் படைகளைக் குவித்து வைத்துக் கொண்டும், சட்டத்துக்குப் புறம்பான ஆயுதக் குழுக்களின் உதவியுடன் கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டவாறும், தமிழர் தாயகத்தில் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் மக்களின் விகிதாசாரத்தைக் குறைத்துவிடும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டும், புதிது புதிதாக பௌத்த விகாரைகளை நிர்மாணித்தும் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்த எடுத்துவரும் முயற்சிகள் தடைப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இது. சிறுபான்மை மக்கள் என அரசாங்கத்தினால் விளிக்கப்படுவதற்குக் கூடத் தகுதியற்ற நிலையில் வைத்திருக்க நினைக்கும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதே அரசாங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாடு.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. அதேவேளை, சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான தமது ஐந்து தசாப்த காலத்துக்கும் மேலான போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் தந்த விலைக்கு ஈடாக ஒரு நியாயாமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் திடமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்.

சமரசங்களுக்கு இடமற்ற இத்தகைய கொள்கைகளை வலியுறுத்தியே நாம் அரசாங்கத்துடனோ அன்றி வேறு பன்னாட்டு நிறுவனங்களுடனோ அல்லது உலக நாடுகளுடனோ பேச்சுக்களில் கலந்து கொண்டு வருகின்றோம்.

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாம் கடந்த காலங்களில் முன்வைத்த எத்தகைய கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதாக இல்லை. எமது மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளின் அருகில் கூட அத் தீர்மானம் வரவில்லை.

ஆனாலும் இந்தத் தீர்மானத்தில் வரவேற்கத்தக்க ஒருசில அம்சங்கள் இல்லாமல் இல்லை. முதன்முதலாக ஈழத் தமிழர்களின் அரசியல் விவகாரம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றிருக்கின்றது. இந்த விவகாரம் உலக மன்றங்களில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பல காலமாக நாம் செய்த முயற்சி தற்போதுதான் நிறைவேறி இருக்கின்றது. தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் அநீதி இழைக்கப் பட்டிருக்கின்றது.  அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் குரல்தரும் யாவரும் ஓர் அடிப்படையாகக் கொள்ளக்கூடிய ஒரு ஆவணமாக இந்தத் தீர்மானம் விளங்குகின்றது.

அது மாத்திரமன்றி இலங்கைத் தீவில் நடைபெற்ற யுத்தத்தில் மனித நேயத்;துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் இத் தீர்மானம் கூறுகிறது.

தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள தேவைக்கும் அதிகமான இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் இறுதிப் போரின்போது உறவினர்களால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான எமது உறவுகளின் விடுதலை தொடர்பாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.

மேற்படி விடயங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சாதகமாகத் தென்பட்டாலும் கூட அடிப்படையில் கபடத் தனமானவை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்குச் சமாதிகட்டிவிடக் கூடியவை. தமிழ் மக்களின் உரிமைக்கான அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தைப் பற்றி எதுவும் இந்த அறிக்கையில் கூறப்படவில்லை. தமிழர்கள் இலங்கைத் தீவில் தனியான தேசிய இனம் என்றோ, அவர்களுக்கான ஒரு மரபுவழித் தாயகம் உண்டு என்பதைப் பற்றியோ, அந்த மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளானமைக்கு இன ரீதியான ஒடுக்குமுறையே காரணம் என்றோ, அவர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தப் பட்டுள்ளது என்றோ  இந்த அறிக்கை ஒரு இடத்திலேனும் குறிப்பிடவில்லை.

ஆகவே, நாம் இந்த அறிக்கையை மனப்பூர்வமாக வரவேற்க முடியாது. ஆனாலும் இந்த அறிக்கையை நிறைவேற்றியதன் ஊடாக உலக நாடுகள் தெரிவித்துள்ள நல்லெண்ணத்தையும் முற்றாக உதாசீனம் செய்துவிட முடியாது. இதுவே எமது நிலைப்பாடு. இதுதான் சாணக்கியமான முடிவும் கூட. ஏனெனில் எமது கோரிக்கைகளை வென்றெடுக்க எமக்கு ஏனைய நாடுகளின் அனுசரணை மிகவும் அவசியம். இன்று தட்டிக் கழித்து விட்டால் பிற்காலத்தில் எமக்குத் தேவைப்படும்போது இந்த ஆதரவைப் பெறுவதற்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டி ஏற்படும்.

ஆனால், எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் பலர் எம்மையும், எமது கட்சியையும் வாய்க்கு வந்தபடி விமர்சித்து வருகின்றார்கள். அவர்களை நினைக்கும்போது பாவமாக உள்ளது.

அதேவேளை, எம்மை அழித்துவிட நினைக்கும் எமது எதிரிகளுக்கு அது ஆனந்தத்தையும் தருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்துடன் ஒழிந்து போய்விடும் என அவர்கள் மனப்பால் குடிக்கின்றார்கள். இத்தகைய எண்ணம் கொண்டொருக்கு நான் ஒன்றை ஆணித்தரமாகக் கூறி வைக்க விரும்புகிறேன். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்று தரும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளோ ஒரு போதும் பின்வாங்க மாட்டாது: சோரம் போகவோ, எம்மை நம்பியிருக்கும் மக்களுக்குத் துரோகம் செய்யவோ மாட்டாது என்பதையும் ஆணித்தரமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இதேவேளை இந்தத் தீர்மானம் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் நடைபெற்று வருகின்றன. சாதகமாகவும் பாதகமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. மறுபுறம் தமிழ் மக்களிடையே ஒருவித உற்சாகம் ஏற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

அதீத நம்பிக்கை வைத்தல் எதற்குமே நல்லதல்ல. இன்றைய சூழலையும் அவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும். அதீத நம்பிக்கை கொள்வதால் நாம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும் அபாயம் உள்ளது. அவ்வாறான ஒரு நிலையில், சென்றடைய வேண்டிய இலக்கை அடைவதில் சிரமம் ஏற்படும்.

தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டே ஐ.நா. மனித உரிமைச் சபையில் உலக நாடுகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என யாராவது நினைத்துக் கொண்டால் அவர்களது அரசியல் அறிவை நினைத்து எம்மால்  அனுதாபப்படவே முடியும்.

தீர்மானத்தின் பின்னான காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறி லங்கா அரசாங்கம் திறந்த மனத்துடன் பேச்சுக்களை நடாத்துவதன் ஊடாக மாத்திரமே தமிழ் மக்களுக்கான ஒரு அரசியற் தீர்வு சாத்தியம் என்ற உலக நாடுகளின் எண்ணம் மேலும் வலுப் பெற்றிருக்கின்றது. இது தொடர்பான கருத்துப் பகிர்வுகளை அவை எம்மோடு நடாத்தியிருக்கின்றன.

தொடர்ந்தும் தனது கபடத் தனமான போக்கிலேயே சென்று தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம்: தீர்வு எதனையும் வழங்காது அவர்களை வஞ்சித்து விடலாம் என சிறி லங்கா அரசாங்கம் நினைக்குமானால் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலக நாடுகளின் அழுத்தத்தையும், விமர்சனங்களையும், கண்டனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படக் கூடும்.

சிறி லங்கா அரசாங்கம் தொடர்ந்தும் விடாப்பிடியான போக்கிலேயே செயற்படுமானால் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கோரிவரும் தமிழ் மக்கள்; வெளியக சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கும் நிலையை உலக நாடுகள் ஏற்படுத்தித் தர முன்வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஆனால், இத்தகைய நிலையைத் தோற்றுவிக்க நாம் இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டும். இன்றைய நிலையில் எம்மிடையே உள்ள பேதங்களை மறந்து ஒன்றுபடுதலே எம்முன்னே உள்ள ஒரேயொரு தெரிவு. ஆனால், ஒன்றுபடுதல் என்பது இலேசான விடயமல்ல.

போரின் இறுதி நாட்களில் வன்னியிலும், கடைசியாக முள்ளிவாய்க்காலிலும் எமது மக்கள் அனுபவித்த உயிரிழப்புக்கள், துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. என்றென்றும் மறக்க முடியாதவை. நாம் மறந்து விடவும் கூடாதவை. அன்று நடைபெற்ற அவலங்களை நாம் ஆத்மார்த்தமாகச் சிந்தித்தோமேயானால், எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பது ஒன்றே எமது நோக்கம் என எண்ணிச் செயற்படுவோம்.

எம்மிடையே உள்ள பேதங்கள் அடிப்படையில் கொள்கை ரீதியிலானதல்ல. மாறாக, நான் பெரிதா, நீ பெரிதா என்பதை அடிப்படையாகக் கொண்டவையே. இத்தகைய முரண்பாடுகள் எமது மக்களுக்கு நன்மை எதனையும் விளைவிக்காது. மாறாக எதிரிக்கே அது உவப்பான விடயம். இன்று நாம் ஒற்றுமைப்படத் தவறினோமானால் எமது மக்களின் விடுதலையைப் பின் தள்ளியவர்கள் என்ற வரலாற்றுப் பிழையை இழைத்தவர்கள் ஆவோம்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியற் போராட்டம் இன்று மூன்று தளங்களில் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. தமிழர் தாயகத்தில் எமது மக்களும், புலம்பெயர் நாடுகளில் எமது உறவுகளும், தாய்த் தமிழகத்தில் எமது தொப்புள் கொடி உறவுகளும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் இணைந்த வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகின்றது. இந்த மூன்று மகா சக்திகள் இடையே உருவாகக் கூடிய பரஸ்பர புரிந்துணர்வே தமிழ் மக்களின் இலட்சியத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமையும். இந்தச் செயற்பாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு நல்ல தளமாகக் கொள்ளப்பட முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது எமது கரங்களிலேயே உள்ளது.

ஐ.நா. அறிக்கையைச் சரியாக மதிப்பிடாமல் அது தமிழர்களுக்கு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்கும் என நினைத்துச் செயற்படாமல் இருந்தோமேயானால் எமது மக்களின் இலட்சியப் போராட்டம் வெல்லப் படுவதற்கு இன்னமும் காலம் எடுக்கும் என்பதே யதார்த்தம்.

எனவே, புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் உங்களால் முடிந்தவரை நீங்கள் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஐனநாயக ரீதியிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு எமது மக்களின் இலட்சியத்தை வென்றெடுக்க உழைக்க வேண்டும் என்பதே எனது வேண்;டுகோள். அதேவேளை தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படும் உங்கள் சகோதரர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் நிதியாதாரங்களை வழங்கி அவர்கள் தமது வாழ்வில் முன்பிருந்த சுபீட்ச நிலையை அடையக் கரங் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, 15 September 2011

மாறிவரும் சர்வதேசச் சூழலில் அவசியமாகும் புலம்யெர் தமிழரின் ஒற்றுமை!


சிவராம் நினைவுக் கருத்தரங்கு-3
11 செப்டெம்பர் 2011
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர்
த.தே.கூ. வன்னி மாவட்டம்
தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்

சிவராமின் மறைவின் பின்னர் அவர் நினைவாக நடாத்தப்படும் நினைவு நிகழ்வில் நான் உரையாற்றுவது இதுவே முதன்முறை. நாட்டிலே இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த முடியாத சு10ழல் தற்போது உள்ளது. அவரின் இறப்பின் பின்னர் நான் பங்குபற்றும் இந்நிகழ்வை எனக்குக் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பாகக் கருதுகிறேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன்னரான சிவராமுடனான எனது உறவு சாதாரண நட்புக்கும் அப்பாற்பட்டது. இங்கே சமூகமளித்துள்ள ஊடகவியலாளர்களுட் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் என்னுடன் பயணித்திருக்கின்றார்கள். பல நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றார்கள். ஆனால், து}ரதி;ஸ்டவசமாக சிவராம் எம் மத்தியில் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற மையக் கருத்தை முதலில் முன்வைத்தவர் சிவராம். இதைப் பற்றி இன்று பலபேர் பலவாறாகக் கூறிக் கொண்டாலும் அது தொடர்பிலான வரலாற்றுப் பதிவை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது. ஏனெனில் நானும் அதில் நேரடியாகச் சம்பந்தப் பட்டிருக்கின்றேன்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பரந்துபட்ட மக்கள் சக்தியாகத் தோற்றம் பெற்றிருக்கின்றது எனில் அதற்கு முக்கிய காரணம் சிவராம் தலைமையில் செயற்பட்ட கிழக்கு மாகாணப் பத்திரிகையாளர்கள் ஒரு சிலரே. அந்த உருவாக்கத்தின்போது பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிட்டது. மக்களின் விடுதலை பற்றிப் பேசும் பலர், அந்த விடுதலைக்காக ஒற்றுமைப்பட வேண்டும் என நினைக்கவில்லை. பல்வேறுவகையான மிரட்டல்களைச் சந்தித்தும், இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கும் ஊடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவேதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் அத்திவாரத்தை இட்டவர்கள் சிவராம் தலைமையிலான கிழக்கு மாகாண பத்திரிகையாளர் சமூகமே என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஆணித்தரமாகக் கூறி வைக்க விரும்புகிறேன்.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஒரு வலுவான மக்கள் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. அத்தகைய ஒரு நிலையை நாம் உருவாக்கி இருக்கின்றோம். எமது ஆயத பலம் தணிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இன்று அது பரந்து விரிந்திருக்கின்றது. எனினும் மக்களின் எதிர்பார்ப்புக்களோடு ஒப்பிடுகையில் அதன் வளர்ச்சி போதாமல் உள்ளது.

தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பலம்பொருந்திய சக்தியாக வளர்ச்சி கண்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அமைதியாக இருந்த தமிழ்நாடு தற்போது தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களை ஆதாரங்களுடன் பார்த்த பின்னர் கொதிநிலைக்கு மாறியுள்ளது. அடுத்ததாக புலம்பெயர்ந்த தமிழர்கள். இந்த மூன்று சக்திகளையும் பார்த்து இலங்கை அரசாங்கம் அஞ்சுகின்றது.

போராட்டக் காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பும் உத்வேகமுமே களத்தில் வெற்றியைத் தந்தது. இதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இன்று அரசாங்கம் அஞ்சிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மூன்று நான்கு பிரிவுகளாகப் பிளவுண்டு இருப்பதைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுகின்றது. இது அரசாங்கத்துக்கு வாய்ப்பை வழங்குவதற்கு ஒப்பானது.

ஒரு அரசியல் தீர்வை, சுதந்திரமான ஒரு நாட்டிலே தமிழ் மக்கள் வாழக்கூடிய தன்மையை நோக்கி சர்வதேசம் சென்று கொண்டிருக்கையில் தமிழர் சக்திகளை எவ்வாறு உடைக்கலாம் என அரசாங்கம் சிந்தித்து வருகின்றது. தனது து}துவராலயங்கள் மூலமாக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு எம்மவர் சிலரும் பலியாகி வருகின்றனர்

ஒற்றுமையை வலியுறுத்தும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்கள். கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தும் புலம்பெயர் சமூகம் மூன்று நான்கு பிரிவுகளாகப் பிளவுண்டு கிடப்பது அரசாங்கத்திற்கே சாதகமாக அமைகின்றது. போரின் இறுதிக் கட்டத்தின் போது புலம்யெர் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள், அதன் பின்னரான காலகட்டத்தில் அவர்கள் வழங்கிவரும் அழுத்தங்கள் என்பவற்றின் காரணமாகவே சர்வதேச சமூகம் இன்று உண்மையை உணர்ந்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அழிந்த வரலாறு இன்று எம்முன்னே இருக்கின்றது. தகப்பனை இழந்த குடும்பம், பெற்றோர் இல்லாத பிள்ளைகள், முடமாக்கப்பட்ட இளைஞர் யுவதிகள், கண் இல்லாமல், கால் இல்லாமல், இவ்வாறு எத்தனையோஎத்தனையோ.. இன்றும் கூட நடந்த சம்பவத்தை நினைவுகூரும் எம்மக்கள் வென அழுகின்றார்கள். அத்தகைய வரலாற்றைக் கண்டும் நாம் பிரிந்திருப்பதற்கு என்ன காரணம்?
ஆயுதபலம் இழக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தமிழர்களையே பலமான அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுகின்றது. போராட்டத்தை மீண்டும் தொடர்வதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றே அங்கு பேசப்படுகின்றது. இந்நிலையில் எம்முன்னே உள்ள வரலாற்றைச் சீர்து}க்கிப் பார்த்து எம்மிடையே நிலவும் முரண்பாடுகளைக் களைய வேண்டும்.

மூன்று சக்திகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் சமூகம் மற்றும் தமிழ்நாட்டு உணர்வாளர்கள் ஆகியோருக்கு இடையே முறையான தொடர்புகள் அற்ற நிலை உள்ளது. தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் முனையும் இன்றைய காலகட்டத்தில் அரசாங்கமே அச்சப்படும் இந்த மூன்று சக்திகளும் ஐக்கியப்பட்டேயாக வேண்டும்.

இன்று இலங்கையில் கிராமிய மட்டத்தில் எமது சமூகம் அரசாங்கத்தினால் பிளவுகளுக்கு இலக்காக்கப் பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் மாமன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் சகோதரன் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிடும் நிலை உள்ளது. இதனால் கட்டுக் கோப்பான குடும்ப உறவு விரிசல் கண்டுள்ளது. மக்களின் இயலாமை, வறுமை, சொந்தக் காலில் நிற்பதற்குக் கனவு கண்டு இன்று கையேந்தி நிற்கும் நிலைமை என்பவற்றை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றது.

இதேபோன்று, ஈழவிடுதலையைப் பெற்றுத்தரப் போராடிய புலம்பெயர் சக்திகள் தமக்கிடையே பிரிந்து நிற்பதை ஜீரணிக்க முடியவில்லை. விடுதலை உணர்வைத் தாங்கி நிற்கும் அவர்கள் யாவரும் ஐக்கியப்பட வேண்டும். அவர்கள் ஒன்றுபடும்போது புலம்பெயர்ந்த மக்களும் ஒன்றுபடுவார்கள்.

இன்று கிராமங்களைச் சுற்றி இராணுவ முகாம்கள். மீள்குடியேற்றம் என்ற பெயரில் வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால், மலசலகூடங்கள் கட்டப்படுவதில்லை. இயற்கைக் கடனைக் கழிப்பதற்கு வயதுவந்த பெண்பிள்ளைகள் சந்திக்கும் அவலம் சொல்லில் வடிக்க முடியாதது.
தேசம் பெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் புலம்பெயர் மக்களை அணிதிரட்டிய உங்கள் மத்தியில் ஏன் பிளவு? பலத்தை இழந்துவிட்டால் பிளவுபட வேண்டுமா?

நாம் எமது உறவுகளை இழந்து நிற்கின்றோம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர். 50,000 மக்கள் துடிக்கத் துடிக்க உயிரோடு புதைக்கப்பட்ட வரலாறு உள்ளது. இதற்குப் பின்னரும் எம்மிடையே ஒற்றுமை இல்லாதுவிடின் என்ன அர்த்தம்? எதற்காக இன்னும் அரசியல்? சுதந்திரக் கோரிக்கை? அரசாங்கம் தருகின்ற பஞ்சாயத்துத் தீர்வையே வாங்கிக் கொண்டு இருந்துவிட முடியுமே? ‘தருவதைத் தாஎனக் கோரிப் பெற்றுக் கொண்டு இருந்துவிட முடியுமே? அல்லது ஜனாதிபதி கூறுவதைப் போன்று இலங்கைக்குள் சிறுபான்மை இனம் என எதுவுமே இல்லை. நாமெல்லாம் ஒருதாய் மக்கள்என்பதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவிட முடியுமே? உண்பதற்காக மாத்திரம் வாய்களைத் திறந்து கொண்டு இருந்து விடலாமே?

இன்று கிறிஸ் பூதம்எதற்காக? எமது மக்களைத் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு அரசபடைகளுக்கு அதிகாரம் இல்லை என்ற நிலை வந்தபிறகு அரசபடைகளைத் தமிழ்ப் பிரதேசங்களில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே கிறிஸ் பூதம்உருவாக்கப் பட்டிருக்கின்றது. ஆனால், ‘கிறிஸ் பூதத்தினாலும் ஒரு நன்மை விளைந்திருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறியபோது விடுதலைப் புலிகளை விமர்சித்த மக்கள் இன்று அவர்களே வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறும் நிலை உருவாகியுள்ளது.

வெற்றி மமதையில் இருக்கும் அரசாங்கம் தமிழர்களின் கடந்தகால வாழ்வின் அடையாளங்களை அழித்துவிட முயற்சிக்கிறது. மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மீனவர்கள் வந்து தொழில் புரியும் நிலைமை….
புதுக்குடியிருப்புக்குச் செல்வதற்கு எமது மக்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சிங்கள உல்லாசப் பயணிகள் தாராளமாகச் சென்று வருகின்றார்கள். தமிழர்கள் தமது உடைமைகளை அங்கிருந்து எடுத்துவர அனுமதியில்லை, ஆனால் அவர்களின் உடைமைகள் யாவும் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் தெருவோரங்களில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நீரிறைக்கும் இயந்திரம் ஆயிரம் ரூபாவுக்குக் கூட விற்கப்படுகின்றது.

தேசத்தில் நிகழும் இத்தகைய அவலங்களைப் பார்த்துக் கொண்டும் அவை பற்றிப் பேசிக் கொண்டும் நாம் எமக்குள் ஒற்றுமையாக இல்லையென்றால் எமது இலட்சியத்தில் எம்மால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. இவ்வாறுதான் நாம் வாழப் போகின்றோம் என்றால் இதுவரை நாம் புரிந்த தியாகங்களுக்கும் சந்தித்த இழப்புக்களுக்கும் அர்த்தமில்லாமற் போய்விடும். எனவே, தேசத்தின் பெயரால் நாம் ஐக்கியப்படுவோம். இல்லாதுவிடில் பரிதாபகரமாக மடிந்து போன எமது மக்களுக்கோ, கனவுகளோடு சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளுக்கோ நாம் நன்றிக்கடன் செலுத்தியவர்களாக விளங்க மாட்டோம்.

ஆயதப் போராட்;டம் நடைபெற்ற காலத்தில் புலம்பெயர் நாடுகளில் நிலவிய உற்சாகம் தற்போது இல்லை. அரசாங்கமோ திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருக்ன்றது. பலர் விலைபோயுள்ளனர். ஒருசிலர் காட்டிக் கொடுக்கின்றனர். இத்தகைய நிலை புலம்பெயர் மண்ணிலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சிவராமை நினைவுகூரும் இந்நாளில் நாமும் ஒற்றுமைப் படுவோம் எனச் சபதமேற்றுக் கொள்வோம். புலம்யெர் மக்கள் சக்தியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்நாட்டு எழுச்சியும் ஒன்றாகும் போதே நாம் நினைக்கின்ற ஜனநாயக அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். இது விடயத்தில் காலந் தாழ்த்தினால் எமது இலட்சியத்தைச் சாதிக்க முடியாத நிர்க்கதி நிலைக்கு ஆளாகி விடுவோம்.

அரசாங்கம் நிமிடத்துக்கு நிமிடம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. நாம் இதுவரை ஓட ஆரம்பிக்கவேயில்லை. கண்களை மூடிக் கொண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலத்தை ஒரு ஐந்து நிமிடங்கள் நினைத்துப் பார்த்தால், எமது முரண்பாடுகள் யாவற்றையும் மறந்து ஐக்கியப்பட்டு விடலாம். எனவே நாம் ஒற்றுமைப்படுவோம்என இன்றே சபதமெடுப்போம்.

Wednesday, 14 September 2011

விரியும் சர்வதேசப் பரப்பில் மீண்டும் மிடுக்குடன் எழவல்ல ஈழத் தமிழர் விடிவு!


சிவராம் நினைவுக் கருத்தரங்கு-3

11 செப்டெம்பர் 2011

கௌரவ சிவஞானம் சிறிதரன்

நாடாளுமன்ற உறுப்பினர்

த.தே.கூ. யாழ் மாவட்டம்


இது சோதனையும், வேதனையும் மிகுந்த காலமே ஆயினும் வரலாறு எம்மைச் சாதனைக்கு அழைப்புவிடும் காலமும் இதுவேயாகும்.
கதவுகள் இறுகப் பூட்டப்பட்டுள்ள போதிலும் யன்னல் திறந்திருக்கிறது, முற்றம் விசாலமாய் விரிந்திருக்கிறது. மேற்கொண்டு நாம் பணியை ஆரம்பிக்க இவை போதும். முற்றத்;தில் கூடுவோம். சமையல் அறை பூட்டுண்டு கிடக்கின்றதே ஆயினும், முற்றத்தில் கற்களை வைத்து சமையல் செய்வோம். சாளரத்தால் வீடு சுவாசிக்கட்டும். கதவை விரைவில் திறப்போம்.

எல்லாம் முடிந்துவிட்டது, இனி எதுவுமேயில்லை என்று சோம்பிக் கிடப்பதற்கு தமிழ்ப் பண்பாட்டில் இடமில்லை. கோடை வெயிலில் கருகும் புல் கூட மீண்டும் மிடுக்குடன் எழவல்ல வரலாற்றையும், மண்ணையும் கொண்ட மக்கள் நாங்கள். கோடையில் தவிக்கின்றோமே ஆயினும் எமது முள்முருக்குகள் விரிந்து மலரத் தவறுவதில்லை. இலையுதிர்ந்தாலும் மலர்கள் விரியத் தவறாத மண்ணும், மரமும், வாழ்வும் எங்களுடையது.  அனைத்தையும் கருக்கப் போவதாக கோடை ஆணையிட்டாலும், பணிய மறுக்கும் தன் திடசித்தத்தை முள்முருக்குகள் பூத்துக் காட்டும். வசந்தம் வரும், குயில்கள் கூவும், முருக்கின் திடசித்தத்தில் நிமிர்ந்து கோடை மடியும், வசந்தம் பிறக்கும். கோடையும்;, வசந்தமும் மாறிமாறி வந்தாலும், சூரியனும், சேவலும் நிலைத்து நிற்கும். இருளில் நின்று கொண்டும்;, கிழக்கில் எழப்போகும் வான வெளிப்பை அறிவிக்க சேவல் தவறுவதில்லை.

எல்லாம் முடிந்த கதையல்ல. ஒவ்வொரு முடிவிலும் இன்னொரு தொடக்கம் உண்டு. இலங்கைத் தீவில் ஈழத் தமிழருக்கு எல்லாமே அடைபட்டு விட்டது போன்ற ஒரு நிலை உண்டேயாயினும், சர்வதேச முற்றம் பரந்து விரிந்து கிடக்கிறது. இப்போது ஈழத் தமிழரின் அரசியலானது முன்னெப்போதையும்விட முற்றிலும் சர்வதேச மயப்பட்டு விட்டது. இப்போது ஈழத் தமிழருக்கு முற்றிலும் சாதகமான ஓரு சர்வதேசச் சூழல் தோன்றியிருக்கிறது. இன ஓடுக்குமுறையின் கொடூரம், இழப்பு, தோல்வி, தியாகம்அர்ப்பணிப்பு இவையனைத்தும் சேர்ந்து சர்வதேசக் கதவை அகலத் திறந்துவிட்டுள்ளன. அகலத் திறக்கப்பட்டுள்ள இந்தச் சர்வதேச அரங்கை புத்திபூர்வமான அணுகுமுறையாலும், குறைவற்ற உழைப்பாலும், உயர்ந்த அர்ப்பணிப்பாலும் நாம் மகிமைப்படுத்த வேண்டியுள்ளது. தன்னை மகிமைப்படுத்துவற்கான பொறுப்பை வரலாறு இதன் வாயிலாக எம்மிடம் ஓப்படைத்துள்ளது.  சர்வதேச அரங்குதான் இப்போது எமது ஆடுகளம். வரலாறு அந்தக் களத்தை எமக்குத் திறந்து விட்டிருக்கிறது. ஆதலால் ஒன்றுமில்லை என்று ஓயாது, தோல்வி மனம் கொள்ளாது, மீண்டும் எழும் மிடுக்குடன் சர்வதேசக் களத்தில் வீறுநடை போடுவோம்.

கையால் ஆகாதவன் மூடுண்ட கதவைக் கண்ணால் காட்டுவான். செயல் திறன் உள்ளவன் கதவை உடைப்பான், அல்லது ஓட்டைப் பிரிப்பான், அதுவுமில்லையேல் நீக்கலுக்குள்ளால் தும்புச் செய்தியையாவது சூரியனில் கலப்பான், வானம் விடிவைக் கக்கும் காலமிது என்று வானத்தை நிரப்புவான்.

புத்திமான்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவார்கள் வளர்ச்சிக்கான விதியைத் தேட. ஓடுகாலிகள் வரலாற்றைப் புரட்டுவார்கள் எதிரிக்கு அடிபணியும் வழி தேட. இதில் நாங்கள் முதல் வகை ஆகவேண்டும்.

மாமனிதரும், புகழ்பெற்ற பத்திரிகையாளருமான டி.சிவராமின் நினைவுப் பேருரையில் ஈழத் தமிழரின் சில வரலாற்று அம்சங்களையும், இன்றைய சர்வதேச அரசியல் நிலைமைகளையும், இணைத்து எடைபோடுதல் பொருத்தம் உடையதாகும். ஒருபுறம் சிவராமைப் படுகொலை செய்ததில் ஒரு வரலாற்றுச் செய்தியை எதிரி உலகிற்குச் சொல்லியது போல மறுபுறம் சிவராமின் நினைவு தினத்தில் நாம் கற்கவேண்டிய வரலாற்றுப் பாடங்களைக் கற்குமாறும் வரலாறு எமக்கு ஆணையிடுகிறது.

தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்குள் வரலாறு புதையுண்டு போகமாட்டாது. சில மனிதர்களால் சிலவேளைகளில் வரலாற்றுச் சக்கரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமே ஆயினும் வரலாற்றுத் தேரோட்டத்தைத் தடுக்க அவர்களால் முடியாது. தற்போது சிங்களப் பேரினவாதம் ஓர் அழிப்பின் வழியில் வெற்றி மமதை கொண்டாட முடிகிறதேயாயினும், அதுவே அவர்களின் தோல்விக்கான கருவறையாகவும் அமையும் என்பதை வரலாறு நிரூபிக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நாம் விடுதலை அடையப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லையென்று தீர்க்கதரிசனம் உரைப்போர் எம்மத்தியில் உண்டு. கிழக்கில் உதித்த சிவராம் தமிழ் மக்களின் விடுதலையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர். இத்தகைய முக்கியத்துவம் மிக்;க சிவராம் நினைவுப் பேருரையை நிகழ்த்த என்னை அழைத்தமைக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாவதுடன், இதனை எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகவும் கருதுகிறேன்.

இச்சந்தர்ப்பத்தில் விரியும் சர்வதேசப் பரப்பில் மீண்டும் மிடுக்குடன் எழவல்ல ஈழத் தமிழர் விடிவுஎன்ற பொருளில் இன்றைய உள்நாட்டு சர்வதேச சூழலை இணைத்து நான் இங்கு உரையாற்ற உள்ளேன்.

முதலில் சிவராம் பற்றிச் சில வார்த்தைகளை நான் இங்கு கூறியாக வேண்டும். அவர் ஆங்கிலக் கல்விப் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர். பல்கலைக்கழக அனுமதி பெற்றுப் பட்டப்படிப்பில் ஈடுபட்டபோதிலும், அவரிடம் காணப்பட்ட இயல்பான போர்க்குணம் காரணமாகப் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டுத் தமிழீழப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் ஆங்கில இலக்கியத்திலும், தமிழ் இலக்கியத்திலும் ஒருங்கு சேர பரந்த வாசிப்பறிவைக் கொண்டவர். இந்த இரு மொழி, இரு இலக்கிய அறிவுகளுடன் கூடவே அவர் அரசியல் கோட்பாட்டு விடயங்களிலும், பத்திரிகைத் துறையிலும் புலமை கொண்;டவராய்க் காணப்பட்டார். இவரது போர்க்குணம் இவரை தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துடன் இணைத்தது. முதலில் இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முற்பட்டார். அதற்கான பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்களுடன் ஈடுபட்டார். அன்றைய 1984 ஆம் ஆண்டுச் சூழலில் விடுதலைப் புலிகள்  இவரைச் சிறிது காலம் காத்திருக்குமாறு கூறியிருந்தனர். ஆனால் அதன் இடைக் காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினருடன் (Pடுழுவுநு) ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இவர் அவ்வியக்கத்தில் இணைந்து கொண்டார். பின்னாளில் அவ்வியக்கத்திலிருந்து விலகியதுடன் கால ஓட்டத்தில் தன்னை ஓர் ஆங்கில, தமிழ் பத்திரிகையாளனாக ஆக்கிக் கொண்டு பத்திரிகைத் துறையில் மிகவேகமாகப் பிரகாசிக்கத் தொடங்கினார். தமிழனாகவும், ஆயுதம் ஏந்திய போராட்ட இயக்க அனுபவம் கொண்டவராகவும் காணப்பட்ட ஒருவரது அறிவை ஆங்கிலம் கற்ற சிங்கள உயர் குழாம் விருப்புடன் அணைத்துக் கொண்டது. வெளியிலிருந்து முற்றிலும் அந்நியராக தமிழரின் பிரச்சினைகளையும், போராட்டத்தையும் எழுதி வந்த சிங்களப் பத்திரிகையாளர்களைக் கொண்ட சிங்கள உயர் குழாத்தினருக்கு போராட்ட அனுபவம் மிக்க ஒருவரின் உள்ளார்ந்த பார்வையை அறிய வேண்டிய அவசியம் இருந்த காலத்தில் சிவராம் மிக விரைவாகவே பிரகாசிக்கத் தொடங்கினார்.

பத்திரிகை உலகில் இவருக்குக் கிடைத்த பிரபல்யமும், இவரது போராட்ட அனுபவமும் இவர் பால் வெளிநாட்டவர்களையும், ராஜதந்திரிகளையும் ஈர்த்தது. அதன் வாயிலாக இவர் பரந்த அளவில் வெளியுலகத் தொடர்பும் முக்கியத்துவமும் மிக்கவரானார்.

கிளிநொச்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இவருக்கான முதலாவது அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய ஒருவர் இவர் பற்றிப் பின்வருமாறு கூறிய வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சிவராமின் இழப்பை வரும் 15 ஆண்டுகளுக்கு யாராலும் இட்டு நிரப்ப முடியாது. ஏனெனில் அவருக்குக் கிடைத்த தொடர்புகளும், அங்கீகாரமும் தனி விசேடமான வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தைக் கொண்டவை. தமிழீழப் போராட்டத்தை ஏற்று, அதை நியாயப்படுத்தி எழுதும் ஒருவரை சிங்கள உயர் குழாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனால், அன்றைய சூழலில் சிவராமை ஏற்க வேண்டிய அவசியமும், அதனை அவர்கள் ஏற்க வைப்பதற்கான திறனும் சிவராமிடம் இருந்தது. இப்பின்னணியில் அவர் சிங்கள உயர் குழாத்தின் மத்தியில் பெற்ற அங்கீகாரம் தனி விசேடமானது. ஒரு தமிழன் ஆங்கிலம் கற்ற சிங்கள உயர் குழாத்தில் ஏற்புடையவன் ஆக முடியாது. இது சிவராமிற்கு மட்டும் கிடைத்திருந்த சிறப்பான வரலாற்று வாய்;ப்பு. அத்துடன் அவருக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களினதும், ஆய்வறிஞர்களினதும், ராஜதந்திரிகளினதும் தொடர்பு இன்னொரு பரிமாணமாகும். எனவேதான் இவரது இந்த இடத்தைக் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு யாராலும் நிரப்ப முடியாது என்று கூறுகிறேன்என்று அவர் தனது உரையில் கூறியிருந்தார்.

2005 ஏப்ரல் 28 ஆம் திகதி இவர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் அவரது இடத்தை நிரப்பவல்ல அறிகுறிகள் இன்னும் தோன்றவில்லை என்பது கண்ணுக்குத் தெரிகிறது. அப்படியாயின் 15 ஆண்டுகளையும் தாண்டி இந்த இடைவெளி நீளுமோ என்ற அச்சம் என் மனதில் எழுகிறது. ஆனால்  பல்துறை அறிவுடன் இவ் இடைவெளியை விரைவில் நிரப்ப எம் மத்தியில் உள்ள இளைஞர் தலைமுறை முன்வர வேண்டுமென வேண்டுகிறேன். தமிழ் மக்கள் சளைக்காதவர்கள்” (வுயஅடைள யசந pநசளநஎநசiபெ  Pநழிடந) என்ற கூற்றுக்கிணங்க இடர்களின் மத்தியிலும் இலக்கை நோக்கி அயராது நாம் பயணிக்க வேண்டும். சிவராமின்  இடத்தை நாம் விரைவில் நிரப்ப வேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இத்துடன் அவரைப்பற்றிக் கூறுவதை நிறுத்திக் கொண்டு அவரது பெயரால் நாம் வரலாற்றில் மனங்கொள்ள வேண்டிய விடயங்களுக்கு வருவோம்.

ஈழத் தமிழரைக் காலமெல்லாம் சிக்குண்டு தவிக்க வைக்கும் பொறியாக சர்வதேச அரசியல் நிலைமைகள் இருந்து வந்துள்ளன. நான் நின்று உரையாற்றும் இந்த சுவிற்சர்லாந்து தேசத்திற்கும் எம்வாழ்வு பற்றி மிகுந்த பொறுப்புணர்வு மிக்க கடமையுண்டென நினைக்கிறேன்.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த சூழலில் ஆசிய நாடுகள் விடுதலை பெறவல்ல பின்னணியில் தனது இந்து சமுத்திர ஆதிக்க நலன் கருதி இலங்கையில் இராணுவத் தளங்களை வைத்திருக்க பிரித்தானிய அரசு முடிவெடுத்தது. அன்றைய நிலையில் இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாக இலங்கைத் தீவில் இராணுவத் தளங்களை அமைப்பதற்குச் சிங்கள ஆட்சியாளரின் மனமார்ந்த ஆதரவைப் பெறவேண்டிய தேவை பிரித்தானிய ஆட்சியாளருக்கு இருந்தது. இதற்காகச் சிங்கள ஆட்சியாளரைத் திருப்திப் படுத்த வல்லதும்;, தமிழருக்குப் பாதகமானதுமான அரசியல் யாப்பை உருவாக்க பிரித்தானிய ஆட்சியாளர் தயாராகினர்.

இதனால் யாப்பை உருவாக்க பிரித்தானியரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான சோல்பரிப் பிரபுவால் கையெழுத்திட்டு நீட்டப்பட்ட வெற்றுக் காசோலையில் (டீடயமெ ஊhநஙரந) சிங்களத் தலைவரான டி.எஸ். செனநாயக்க தமக்கு வேண்டிய தாரளமான தொகையை எழுதியது போல அரசியல் யாப்பை தமக்கு வேண்டியவாறும் தமிழருக்குப் பாதமாகவும் உருவாக்கிக் கொண்டார். இதுவே தமிழ் மக்களின் உரிமைக்கு விழுந்த பேரடியாய் அமைந்தது. யாப்பை உருவாக்கிய சோல்பரிப் பிரபு, தாம் பெரும் தவறை இழைத்து விட்டதாக பிற்காலத்தில், அதாவது 1961 ஆம் ஆண்டு, வருத்தம் தெரிவித்திருந்தார். ஆதலால் அந்தத் தவறுக்குப் பரிகாரம் காணவேண்டிய பொறுப்பு இப்போது பிரித்தானியாவிற்கு உண்டு என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சோல்பரி யாப்பில் பெயரளவில் சிறுபான்மை இனங்களுக்கான காப்பீடாக 29 ஆவது சரத்து என்பது மட்டுமே காணப்பட்டது. ஆனால், அதனைச் சி;ங்கள ஆட்சியாளர்கள் நடைமுறையில் ஒருபோதும் பொருட்படுத்தியது கிடையாது என்பதுடன் அதனை மீறியே செயற்பட்டார்கள் என்பதனையும் பின்பு அவதானிப்போம். இன அளவால் பெரும் எண்ணிக்கையைக் கொண்ட சிங்களவர்களின் கையில் தமிழ்த் தேசிய இனத்தின்  தலைவிதியைத் தாரைவார்த்த ஒரு யாப்பாகச் சோல்பரி யாப்பு அமைந்தது. தலைகளை எண்ணும் இனநாயக ஆதிக்கத்தையே ஜனநாயகம்என்று சிங்கள ஆட்சியாளர்கள் வியாக்கியானம் அளிப்பதற்குப் பொருத்தமான யாப்பாய் அது அமைந்தது.

தலைகளை எண்ணும் னநாயக ஆதிக்கத்திலிருந்து தேசிய இனம் சார்ந்த ஜனநாயக உரிமைக்கு இலங்கை மாறவேண்டும்;. ஆனால் அவ்வாறு மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. இன்று காணப்படும் இலங்கையின் அரசியல் சட்ட யாப்பு அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானது என்று அரசாங்கத் தரப்பில் கடந்த இரண்டு மாதங்களாக வெளிப்படையாகக் கூறப்பட்டு வருகிறது.

கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போது சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய தேசிய முன்னணித் தலைவி திருமதி சோனியா காந்தி அவர்கள், தமிழரின் உரிமைகளை நிலைநிறுத்தத் தேவையான அரசியல் யாப்பு மாற்றத்தை இலங்கையில் உருவாக்க இந்திய அரசு பாடுபடுமெனத் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு எதிராக அரசியல் யாப்பு மாற்றங்கள் தேவையில்லை என்ற செய்திகள் இலங்கை அரச தரப்பின் உயர் மட்டத்திலிருந்து கடந்த சில மாதங்களாய் முழு அளவில் வெளியாகி வருகின்றன.

இப்பொழுது இருக்கும் இந்த யாப்பே போதும் எனக் கூறிவரும் சிங்களத் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்காக இந்த யாப்பை எத்தனை தடவைகள் மாற்றியுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்;த யாப்புப் போதுமானது என்று கூறும் இன்றைய ஜனாதிபதி, தனது பதவிக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு மேல் நீடிக்க வகைசெய்யும் அரசியல் யாப்பு மாற்றத்தைத் தானே கொண்டு வந்திருந்தார் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது சிங்கள ஆட்சியாளர்கள் தம் தேவைக்காக யாப்பை எந்த வகையிலும் மாற்றி அமைப்பார்கள் ஆனால் தமிழர்களின் தேவை என்று வரும் பொழுது ஒடுக்குமுறைக்கு ஏதுவான யாப்பைச் சரியென்று சொல்வார்கள்.

1972 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பை யாழ்நகர நாவலர் மண்டபத்தில் வைத்து எரித்துத் தீக்கிரையாக்கியதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார். அதாவது அந்த யாப்பை அடிமைச் சாசனம்என அவர் வர்ணித்தார். இந்த யாப்பினாற்தான் தமிழரின் கால்களில் விலங்கு மாட்டப்படுகிறது. ஆதலால் அந்த விலங்கை நாம் எதிர்க்கிறோம். தமிழ் மக்களின் உரிமைக்கான யாப்பு மாற்றங்களைச் சிங்களத் தலைவர்கள் மேறகொள்வார்கள் என்று நாம் ஒருபோதும் மனப்பால் குடிக்க முடியாது.

சோல்பரி யாப்பின் கீழ் சிறுபான்மை இனங்களுக்கான காப்பீடாகக் கூறி உருவாக்கப்பட்ட 29 ஆவது சரத்தைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் நடைமுறைப் படுத்தியது கிடையாது. அதேவேளை அதனை மிக வெளிப்படையாக 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் மீறினார்கள். அதாவது அந்த 29 ஆவது விதியை யாப்பில் வைத்துக் கொண்டே அதை மீறிய தனிச் சிங்களச் சட்டத்தை  நிறைவேற்றியதன் மூலம் இனவாத அடிப்படையில் யாப்பை மீறியவர்கள் என்ற தொடக்கத்தை ஆரம்பித்தார்கள். பின்பு 1972 ஆம் ஆண்டு யாப்பில் அந்த விதியை முற்றாகவே நீக்கினார்கள். அதாவது ஒருபுறம் தமிழருக்குச் சாதகமான அம்சம் ஏதாவது சட்டத்தில் இருந்தால் அதை நடைமுறைப்படுத்த மாட்டார்கள், மறுபுறம் இனவாத தேவைக்கேற்ப சட்டங்களையும், யாப்பு விதிகளையும் மீறுவார்கள். யாப்பின் எழுத்துருவிலான ஒடுக்குமுறை விதிகளைச் சுட்டிக்காட்டும் போது தமது யாப்பின் புனிதம் பற்றிப் பேசுவார்கள். ஏதாவது திருத்தம் வேண்டும் என்று கோரும் போது இருக்கும் யாப்பே போதும் என்பார்கள். இதுதான் இலங்கையின் அரசியல் யாப்பு பற்றிய இனவாதத்தின் கதை.

இலங்கையில் உள்ள பிரச்சினை எழுதப்பட்ட சட்டங்கள், யாப்புகள் பற்றியானவை மட்டுமல்ல. நடைமுறை பற்றியதும் ஆகும். பொலிஸ், இராணுவம், நிர்வாகம், நீதித்துறை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் ஒருமுகமாகப் பேரினவாத மயப்பட்டுள்ளன. எனவே இத்துறை சார்ந்த அனைவரும் சிங்கள இனவாதக் கண்கொண்டே அனைத்தையும் நடைமுறைப் படுத்துவார்கள். சட்டமும் அவர்களின் கையில், நீதித்துறையும் அவர்களின் கையில், பொலிசும் அவர்களின் கையில், சிறைச்சாலையும் அவர்களின் கையில், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் அவர்களின் கையில், வெள்ளைத் துணியும் அவர்களின் கையில் நாம் என் செய்வோம் என்ற அவல நிலையில் ஈழத் தமிழர்கள் உள்ளனர்.

இத்தகைய சிங்கள அரச, நிர்வாக, இராணுவ, நீதி, ஊடக இயந்திர அமைப்பைப் புரிந்து கொள்ளாமல் ஈழத் தமிழர் மீதான ஒடுக்கு முறைகளைப் புரிந்து கொள்ள முடியாது. அதாவது ஜனநாயகத்தின் குரலான ஊடகங்களே சிங்கள இனவாத மயப்பட்ட நிலையில், தமிழர்களின் உரிமைகளையும், துயரங்களையும் ஓப்புக் கொள்ள மறுக்கும் நிலையில் ஏனைய சிங்கள அரச இயந்திரத்தின் இனவாதத் தன்மையை புரிந்து கொள்வதில் கஷ்டம் இருக்காது. வன்னியில் மக்கள் படுகொலைக்கு உள்ளானமை பற்றி உலகமே குரலெழுப்பும் போது சிங்கள ஊடகங்கள் இதற்கு எதிர்க் கணியமாகச் செயற்படுவதையோ, அல்லது மௌனம் காப்பதையோ எப்படிப் புரிந்து கொள்ள முடியும்;? இனவாத ஊடகங்கள் கண் திறக்க மறுக்கும் நடைமுறையைக் கொண்டிருக்கும் போது ஏனைய அனைத்து வகைச் சிங்கள அமைப்புக்களும், நிறுவனங்களும், கட்டமைப்புக்களும் இனவாத மயப்பட்டுச் செயற்படுவதில் வியப்பெதுவும் இல்லை. ஆதலால் தமிழ் மக்களின் பிரச்சினை வெறும் சட்டப் பிரச்சினை மட்டுமல்ல அதற்கும் மேலாய் நடைமுறை சார்ந்த, மனப்பாங்கு சார்ந்த, பேரினவாத ஓடுக்குமுறையை ஏற்கும் ஒரு கலாச்சாரம் சார்ந்த பிரச்சினையாகவும் உள்ளது, எனவே, இதனை இலகுவில் யாராலும் தீர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து இன்றைய உலக ஒழுங்கிற்கேற்ப மூன்றாம் தரப்பின் முன்னிலையில் பேச்சுக்களும் உடன்பாடுகளும் நடைபெற்றாலன்றி அரசியல் தீர்வு என்ற ஒன்று சாத்தியப்படப் போவதும் இல்லை.

இணக்க அரசியல் பேசி சிங்கள மக்களிடமிருந்து உரிமைகளைப் பெறலாம் என்று எழும் குரல்கள் நடைமுறையில் து}ர்ந்து போய்விடும். வரலாறு அறியாதோர் அல்லது விசமத்தனமாகப் பேசுவோர் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து இணக்க அரசியலுக்கு இடமிருப்பதாகக் கூறமுடியும். ஆனால் உண்மை எதிர்மாறானது என்பதை வரலாறு காட்டுகிறது. 1949  ஆம் ஆண்டு சமஷ்டி அரசியல் யாப்பு அமைப்பைக் கோரிய தந்தை செல்வா அதன் பெயரால் கட்சிக்குச் சமஷ்டிக் கட்சிஎனவும் பெயர் இட்டார். ஆனால் இணக்க அரசியலின் பொருட்டு அதிலிருந்து இறங்கி பிராந்திய சபைகள் அமைக்கும் ஓரு தீர்விற்கு ஓப்புக்கொண்டு பண்டாரநாயக்காவுடன் 1957 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இப்பிராந்திய சபைகளை அமைப்பதற்கான தீர்வைச் சிங்களத் தலைவர்கள் பின்பு நிராகரித்தனர். அதன் பின்பு பிராந்திய சபைகள் என்ற தீர்விலிருந்து மேலும் கீழ் இறங்கி மாவட்ட சபைகள் என்கின்ற சிறிய தீர்வுக்கு டட்லி செனநாயக்காவுடன் தந்தை செல்வா 1965 ஆம் ஆண்டு கையெழுத்திட்டார். இதனையும் சிங்களத் தலைவர்கள் நிராகரித்தனர்.

இதன் பின்பு மாவட்ட சபைத் தீர்விலிருந்தும் கீழிறங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்கின்ற தீர்விற்கு அன்றைய தமிழ்த் தலைவர் அ. அமிர்தலிங்கம் தந்தை செல்வாவின் மருமகனான பேராசியர் ஏ.ஜே. வில்சனினதும், மு. திருச்செல்வத்தின் மகனான கலாநிதி நீலன் திருச்செல்வத்தினதும் அனுசரணையுடன் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவோடு ஓர் உடன்பாட்டிற்கு வந்தார். இதில் தாம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிடம் ஏமாந்து போன கதையை ஏ. ஜே. வில்சன் தான் எழுதிய டீசநயம ரி ழக ளுசi டுயமெய  என்ற நு}லில் விபரித்துள்ளார். அந்த அனுபவத்திலிருந்து இலங்கைத் தீவு ஒருநாள் இரண்டாக உடையும் என்றும் கூறியுள்;ளார். 

இங்கு ஒரு விடயத்தை வரலாறு காட்டுகிறது. அதாவது தமிழ் மக்கள் தமது கோரிக்கையை இணக்க அரசியலின் பொருட்டு எவ்வளவுதான் குறைத்து வந்த போதிலும், சிங்களத் தலைவர்கள் அவற்றை நிராகரித்து வந்தமைதான் தொடர்கதையாக உள்ளது.

இங்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. எனினும், அவற்றை சிங்கள ஆட்சியாளர்கள் கிழித்தெறிந்தார்கள் என்பதைத்தான் பலரும் அடிக்கடி சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் ஓப்பந்தங்கள் செய்யப்பட்டன என்பதை விடவும் முக்கியமான விடயம் என்னவெனில் ஒவ்வொருமுறையும் தமிழ்த் தலைவர்கள் மேலிருந்து கீழிறங்கி தொடர்ச்சியான விட்டுக்கொடுப்புக்களுடனேயே ஓப்பந்தங்களைச் செய்துள்ளார்கள் என்பதுதான். அப்படியிருந்தும் சிங்களத் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கவில்லை என்பதுதான் இங்கு முக்கியமானது. அதாவது சமஷ்டி முறைத் தீர்விலிருந்து மேலும் கீழிறங்கிப் பிராந்திய சபைகள் அமைக்கும் தீர்வுக்கு உடன்பட்டார்கள். அதுவும் மீறப்படவே அதிலிருந்தும் கீழிறங்கி மாவட்ட சபைகள் அமைக்கும் தீர்விற்குத் தமிழ்த் தலைவர்கள் உடன்பட்டார்கள். அதுவும் மீறப்படவே அதிலிருந்து மேலும் கீழிறங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்விற்கு உடன்பட்டார்கள். இறுதியாக எல்லாமே புஷ்வாணமாகியது. ஆதலால் விட்டுக்கொடுப்பிற்கும், இணக்க அரசியலுக்கும் சிங்களத் தலைவர்கள் தயாராக இருந்ததில்லை என்பது மட்டுமல்ல அதற்கு முற்றிலும் எதிர்மாறாகவுமே நடந்தார்கள் என்பதுமே உண்மை.

1980 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட பின்பிலிருந்து தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களின் அளவினால் தமது எதிர்கால வரலாற்றை அவர்கள் அளந்து பார்க்கிறார்கள். அவர்கள் துன்பம் தந்த வலியின் அளவினால் தமக்குப் பாதுகாப்பான அரசியல் ஏற்பாட்டின் அளவை விரும்புகிறார்கள்;;. நிலைமை இப்படி இருக்க இனித் தீர்வு தேவையில்லை இருக்கும் யாப்பே போதுமென்று சிங்களத் தலைவர்கள் கூறுவது வரலாற்றின் எதிர்ப் பக்கத்தில் ஆட்சியாளர்கள் நிற்பதையே காட்டுகிறது.

யுத்தம் முடிந்து இரண்டே கால் ஆண்டுகள் கடந்த பின்பும், அரசியல் தீர்வுக்குத் தடையாக இருப்பது என்ன? அரசியல் தீர்வு காணப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய அரசாங்கம் எதுவும் தெரியாதது போல் அனைத்தையும் கைவிரித்துவிட்டு நாடாளுமன்ற தெரிவுக் குழுஎனும் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. அதேவேளை இருக்கும் யாப்பே போதுமானது என இன்னொரு பக்கம் கூறுகிறது. இது தமிழ் மக்களையும், இந்திய அரசையும், சர்வதேச சமூகத்தையும் முற்றிலும் ஏமாற்றத்தி;ல் ஆழ்த்தியுள்ளது. சிங்கள அரசு தமிழ் மக்களின் நீதியான உரிமைகளை ஏற்றுக்கொள்ளாதென சர்வதேச சமூகத்திலிருந்து தெளிவாகக் குரல்கள் எழத்தொடங்கியுள்;ளன. இந்நிலையில் ஈழத் தமிழரின் அரசியலை சர்வதேசப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும்  சர்வதேசப் பரிமாணத்தில் கையாளவேண்டிய தேவையும் எமக்கு அதிகம் உண்டு. அந்த வகையில் சர்வதேசப் பரிமாணத்தை இனி நோக்குவோம்.

சர்வதேச அரசியலைக் கையாள்வதிலும், வெளிநாடுகளை ஏமாற்றுவதிலும் சிங்களத் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர்ச்சி குன்றாத 2500 ஆண்டு கால ராஜதந்திரப் பாரம்பரியம் உண்டு. இதனால் வெளிநாடுகளை அவர்கள் மிக லாவகமாகக் கையாள்வார்கள். எதிரிகளையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதிலும், தேவைக்கேற்ப தந்திரோபாயக் கூட்டுக்களை உருவாக்குவதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள். அதாவது தமது எதிரியான ஜே.வி.பி.யினரை தற்காலிக நண்பர்கள் ஆக்கி அடையக் கூடிய நன்மைகளை அடைந்துவிட்டு இறுதியில் அவர்களை ராஜபக்ஷ  முகவரியில்லாமல் செய்துள்ளதை ஒரு மிக இலகுவான உதாரணமாகக் காட்டலாம். இவ்வாறு எதிரியை நண்பராக்கி பின்பு அழிப்பதிலோ, தோற்கடிப்பதிலோ சிங்கள ஆட்சியாளர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு ஜே.வி.பி.யின் இன்றைய நிலை நல்லதொரு எடுத்துக்கட்டு.

சர்வதேச அரசுகளை தம்பக்கம் வென்றெடுத்து ஒரு பாரிய அணியை உருவாக்கியதன் மூலமே ராஜபக்ஷாக்கள் கடந்த யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள். அவர்கள் தனித்து நின்று போராடவில்லை. நேரடியாக 20 நாடுகளின் இராணுவ உதவிகளையும், முழு உலக நாடுகளினது ஏகோபித்த ஆதரவினையும் ஒன்றுதிரட்டித் தமிழ் மக்களைச் சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்திவிட்டு இந்த யுத்தத்தை நடாத்தினார்கள். கேட்பார் யாருமின்றி பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கான பலத்தை இப்படித்தான் சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றார்கள். அவர்கள் தேவைக்கேற்பக் கூட்டுச் சேர்வதில் கைதேர்ந்தவர்;கள்.

யுத்தம் முடிந்த பின்பு அரசு தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளுக்குக் கொடுத்தார்கள். தீர்விற்குப் பயங்கரவாதம்தான் தடை, அதை ஒழித்துவிட்டால் அரசியல் தீர்வைக் காணமுடியும்என்று உலகிற்குக் காட்டி முழு உலக நாடுகளினது அனைத்துவகை ஆதரவையும் பெற்றுப் பயங்கரவாதத்தை அழிப்பது என்பதன் பெயரில் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள். யுத்தத்தின் பின் உலகம் கண் திறந்தது. 40 ஆயிரத்திற்கு மேல் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்;கை வாயிலாக உலகம் அறிந்து கொண்டது.

இவ்வாறு மக்கள் கொல்லப்பட்டதைப் புலிகள் சொல்கிறார்கள் என்றால் அதை பொய்யென்று சாட்டுச் சொல்லிவிடலாம், ஆனால் சொல்வதோ மிகப் பொறுப்பு வாய்ந்த உலக நாடுகளின் மன்றமான ஐ.நா. சபை நிபுணர் குழு அறிக்கையாகும். இத்தனைக்கும் பிறகு தீர்வுபற்றி அரசு சாதகமான நடைமுறையைக் காட்டாதது கண்டு சர்வதேச சமூகம் ஏமாந்துள்ளது.

யுத்தத்தின் பின்பு தீர்வு எனக்கூறி உலகை ஏமாற்றி முழு உலக நாடுகளின் ஆதரவையும் தன் பக்கம் திரட்டிக் கொண்ட அரசு யுத்தம் முடிந்த பின்பு தீர்வு காணப் போவதாக இரண்டு ஆண்டுகளாகப் பாசாங்கு காட்டிவிட்டு இப்போது எல்லாவற்றையும் கைவிரித்துள்ளது. இந்நிலையில் விழிப்படைந்திருக்கும் சர்வதேச சமூகத்தை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

அங்கு தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிர் அழிப்புக்களைக் கண்டு சர்வதேச சமூகம் திகைப்பில் ஆழ்ந்துள்ள இந்தச் சூழலில், தீர்வு காண அரசு மறுத்துள்ள இன்றைய நிலையில் சர்வதேச சமூகத்தை நாம் கையாள்வது மிகவும் சாத்தியமானது. தற்போது எமக்குள்ள ஒரேயொரு பலமாக அந்த சர்வதேசச் சூழலே உள்ளது.  ஆதலால் அதனை சரிவரக் கையாண்டு நாம் எமது உரிமையை வென்றெடுக்க வேண்டும். விடிவைத் தேட வேண்டும். எவ்வளவிற்கு எவ்வளவு நட்பு வட்டத்தை அதிகரிக்கிறோமோ அவ்வளவிற்கு நாம் பலமடைய முடியும்.

இலங்கை அரசிற்கு என்று சில நிரந்தரமான நட்பு நாடுகள் உள்ளன. அதுவும் வீட்டோஎனும் ரத்து அதிகாரத்தை ஐ.நா. சபையில் கொண்டுள்ள சில நாடுகளின் இறுக்கமான நட்பையும், பக்கபலத்தையும் இலங்கை அரசு வளர்த்து வைத்துள்ளது. இப்பின்னணியில் எம்முடன் கைகோர்க்கக் கூடிய நாடுகளை அடையாளம் கண்டு நாம் நட்பை வளர்த்தாக வேண்டும். அத்துடன் வென்றெடுக்க வாய்ப்பிருக்கும் நாடுகளையும் நாம் தொடர்ச்சியாக அணுகி வென்றெடுத்து எம்பக்கம் இணைத்துக் கொள்ள வேண்டும்.

யதார்த்தத்தில் சர்வதேச உறவைக் கையாள்வதிலேயே எமக்கான அனைத்துப் பலமும் தங்கியுள்ளது. எம்மைத் தனிமைப் படுத்துவதில் இலங்கை அரசு வெற்றி பெற்றிருந்தது. நாம் அதிலிருந்து மீண்டெழுவதற்கான சூழல் சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவு ஈழத் தமிழரின் அரசியலை முற்றிலும் சர்வதேச மயப்படுத்திவிட்டது. அதுவும் தமிழ் மக்களுக்கு அனுதாபமான சர்வதேசச் சூழலைத் தோற்றுவித்துள்ளது. இதனைச் சரிவரக் கையாண்டு தமிழ் மக்களை இனவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு எமக்குண்டு. ஆதலால் எமக்கு வாய்ப்பான சர்வதேச உறவுகளைச் சரிவர அடையாளம் கண்டு அவற்றை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

இலங்கை அரசு உலகில் அம்பலப்பட்டிருக்கும் இன்றைய  நிலையில் அதனை ஒரு பலமாகப் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். இந்தவகையில் ஒரு சரியான சர்வதேச வியூகத்தை வகுக்கத் தமிழ் அறிஞர்கள் முன்வர வேண்டும். அறிஞர்களின் பங்களிப்பு ஒரு இனத்தின், ஒரு தேசத்தின் விடிவிற்கும், விமோசனத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானது.

வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு எமது விடிவிற்கான சரியான பாதையை நாம் வகுக்க வேண்டும். இதில் தமிழ் அறிஞர்களின் முன்முயற்சி முதன்மையானது. அரசியலை முற்றிலும் அறிவியல் மயப்படுத்த வேண்டும்;. அர்ப்பணிப்புடனும், தீர்க்க தரிசனத்துடனும் அரசியலில் பணியாற்ற வேண்டும். அரசற்ற ஒடுக்கப்படும் ஓர் இனமென்ற வகையில் எமக்கான பிரச்சினைகள் மிகவும் பாரியவை. ஆதலால் அதிக பொறுப்புணர்வுடனும், தீர்க்கமான பார்வையுடனும் நாம் எதனையும் அணுக வேண்டும்.

எமக்கு ஒரு நல்ல தகவல் மையம் அவசியம். நம்பகமான, செயற்றிறனுள்ள ஒரு தகவல் மையத்தை நாம் கட்டி எழுப்ப வேண்டும். அதிலிருந்துதான் சர்வதேச உறவைக் கையாள்வதற்கான ஒரு அடிப்படையை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். எம்மத்தியில் பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும் இருக்கலாம். ஆனால் அனைவரும் இணைந்து ஒரு நம்பகமான தகவல் மையத்தைக் கட்டியெழுப்பப் பாடுபட வேண்டும்.

ஏனெனில், இன்றைய யுகம் ஒரு தகவல் யுகம். ஆதலால் அதற்கு நம்பகமான, ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான தகவல் அவசியம்.

தமிழ் மக்களில் குறிப்பாக கிழக்கிலும், வன்னியிலும் குடும்ப உழைப்பாளிகள் பெருமளவில் கொல்லப் பட்டிருக்கிறார்கள். சரியான தொகை யாருக்கும் தெரியாது. இது ஒரு பாரதூரமான விடயம். இத்தொகையை நம்பகமாக உலகிற்குச் சொல்ல  எமக்கொரு சிறப்பான தகவல் மையம் அவசியம். இப்படி விதவைகள் தொகை அதிர்ச்சி அளிக்கக் கூடிய எண்ணிக்கையில் உள்ளது. மேலும் வாழ்வாதாரம் அற்ற குடும்பங்களின் நிலை, மாண்டுபோன சிறுவர்களின் தொகையென அறிய வேண்டிய தகவல்கள் ஏராளம் உள்ளன. இந்தவகையில் உலகம் ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு விஞ்ஞான பூர்வமாக தகவல்களைப் பெறுவதற்கு ஏற்ற ஒரு மையத்தை நாம் அவசரமாக உருவாக்க வேண்டும். இதில்  அனைத்து வேறுபாடுகளையும் கடந்து பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படலாம்.

தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிரதான பணி; சாதமாகக் காணப்படும் சர்வதேச சூழலைப் பயன்படுத்தி எமக்குப் பொருத்தமான ஒரு சிறப்பான சர்வதேச உறவுக் கொள்கையை உருவாக்குவதே. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் எழுச்சி எமக்கு இதில் அடிப்படையான பலத்தைத் தரவல்லது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில்; கொண்டு மிக விரைவாக ஒரு சர்வதேசக் கொள்கையை வகுக்க வேண்டும். அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு நம்பகமான, செழிப்பான தகவல் மையத்தை உருவாக்க வேண்டும்.

சிவராமின் நினைவை மனதில் நிறுத்தி நாம் ஒரு தகவல் மையத்தை உருவாக்குவதும், வெளியுறவுக் கொள்கையை வகுப்பதும் அவசியமான பணிகளெனத் தீர்மானிப்போமாக.