Wednesday 1 June 2011

ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் காப்பாற்ற முன்வரவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் செ. கவிதரன் தாக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலை சுவிஸ் சிவராம் ஞாபகார்த்த மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. வழக்கம் போன்றே இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கானார் என்ற விளக்கத்துடன் இந்தச் சம்பவமும் மூடி மறைக்கப்பட்டுவிடும் என்பதை ஊகிப்பது கடினமில்லை. ‘யுத்தம் முடிவடைந்து அமைதி நிலைநாட்டப்பட்டு விட்டது’ என அரசாங்கம் பிரகடனப்படுத்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் முடிவடைந்து விடவில்லை என்பதை இச் சம்பவம் மீண்டுமொருமுறை நினைவுபடுத்தி நிற்கின்றது.
அரசாங்கத்தின் நேரடி உத்தரவின் பேரிலோ அன்றி அதன் கைக்கூலிகளாலேயோ இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்கள் ஊடகவியலாளர்கள் மீது நிகழ்த்;தப்பட்டு வரும் நிலையில் அதே அரசாங்கத்திடமே ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறோ, தாக்குதலாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறோ கோருவது நகைப்புக்கிடமானது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் இலங்கைத் தீவு முழுவதிலும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள போதிலும் இதுவரையில் ஒருவர் கூட கைது செய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிராத 35 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும்; இதுவரை படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள். பலர் கடத்தப்பட்டுக் காணமாற் போயுள்ளனர். பல ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
இத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சியாளர்கள் மீதே குற்றஞ் சாட்டப்பட்டு வந்துள்ளமையை மறைப்பதற்கில்லை. இலங்கையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்பட்டு வருகின்றமையை இது உறுதி செய்கின்றது. இந்நிலையில், சர்வதேச ஊடக அமைப்புக்களும் உள்நாட்டில உள்ள குடிசார்; அமைப்புக்களுமே ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வரவேண்டியது அவசியமாகின்றது.
ஒரு ஜனநாயக சமூகத்தில் ஊடகவிலாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஊடகவியலாளர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போதே குறித்த சமூகம் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் நிகழும் வளமான சமூகமாகப் பரிணமிக்கும். ஆரோக்கியமான சமூகத்தைக் கனவு காணும் ஒவ்வொருவரும் ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் காப்பாற்ற முன்வரவேண்டும். பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இதன் தேவை ஏனைய நாடுகளை விட அதிகம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என சிவராம் ஞாபகார்த்த மன்றம் கேட்டுக் கொள்கின்றது.

No comments: