சிவராம் நினைவுக் கருத்தரங்கு-3
11 செப்டெம்பர் 2011
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர்
த.தே.கூ. வன்னி மாவட்டம்
தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்
சிவராமின்
மறைவின் பின்னர் அவர் நினைவாக நடாத்தப்படும் நினைவு நிகழ்வில் நான் உரையாற்றுவது
இதுவே முதன்முறை. நாட்டிலே இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த முடியாத சு10ழல் தற்போது உள்ளது. அவரின் இறப்பின் பின்னர்
நான் பங்குபற்றும் இந்நிகழ்வை எனக்குக் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க
வாய்ப்பாகக் கருதுகிறேன்.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன்னரான சிவராமுடனான எனது உறவு சாதாரண நட்புக்கும்
அப்பாற்பட்டது. இங்கே சமூகமளித்துள்ள ஊடகவியலாளர்களுட் பலர் பல்வேறு
சந்தர்ப்பங்களிலும் என்னுடன் பயணித்திருக்கின்றார்கள். பல நெருக்கடிகளைச்
சந்தித்திருக்கின்றார்கள். ஆனால், து}ரதி;ஸ்டவசமாக சிவராம் எம் மத்தியில் இல்லை.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற மையக் கருத்தை முதலில் முன்வைத்தவர்
சிவராம். இதைப் பற்றி இன்று பலபேர் பலவாறாகக் கூறிக் கொண்டாலும் அது தொடர்பிலான
வரலாற்றுப் பதிவை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது. ஏனெனில் நானும்
அதில் நேரடியாகச் சம்பந்தப் பட்டிருக்கின்றேன்.
இன்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு ஒரு பரந்துபட்ட மக்கள் சக்தியாகத் தோற்றம் பெற்றிருக்கின்றது
எனில் அதற்கு முக்கிய காரணம் சிவராம் தலைமையில் செயற்பட்ட கிழக்கு மாகாணப்
பத்திரிகையாளர்கள் ஒரு சிலரே. அந்த உருவாக்கத்தின்போது பல்வேறு பிரச்சினைகளை
அவர்கள் சந்திக்க நேரிட்டது. மக்களின் விடுதலை பற்றிப் பேசும் பலர், அந்த விடுதலைக்காக ஒற்றுமைப்பட வேண்டும் என
நினைக்கவில்லை. பல்வேறுவகையான மிரட்டல்களைச் சந்தித்தும், இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கும்
ஊடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின்
அத்திவாரத்தை இட்டவர்கள் சிவராம் தலைமையிலான கிழக்கு மாகாண பத்திரிகையாளர் சமூகமே
என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஆணித்தரமாகக் கூறி வைக்க விரும்புகிறேன்.
தமிழ் மக்களின்
அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஒரு வலுவான மக்கள் சக்தியாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. அத்தகைய ஒரு நிலையை நாம் உருவாக்கி
இருக்கின்றோம். எமது ஆயத பலம் தணிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே
மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இன்று அது பரந்து விரிந்திருக்கின்றது.
எனினும் மக்களின் எதிர்பார்ப்புக்களோடு ஒப்பிடுகையில் அதன் வளர்ச்சி போதாமல்
உள்ளது.
தேசியத்தை ஆதரிக்கும்
அனைத்துக் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பலம்பொருந்திய சக்தியாக வளர்ச்சி கண்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அமைதியாக இருந்த தமிழ்நாடு
தற்போது தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களை ஆதாரங்களுடன் பார்த்த பின்னர் கொதிநிலைக்கு
மாறியுள்ளது. அடுத்ததாக புலம்பெயர்ந்த தமிழர்கள். இந்த மூன்று சக்திகளையும்
பார்த்து இலங்கை அரசாங்கம் அஞ்சுகின்றது.
போராட்டக்
காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பும் உத்வேகமுமே களத்தில் வெற்றியைத்
தந்தது. இதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இன்று அரசாங்கம் அஞ்சிக் கொண்டிருக்கும்
புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மூன்று நான்கு பிரிவுகளாகப் பிளவுண்டு இருப்பதைப்
பார்க்கும்போது வேதனை ஏற்படுகின்றது. இது அரசாங்கத்துக்கு வாய்ப்பை வழங்குவதற்கு
ஒப்பானது.
ஒரு அரசியல்
தீர்வை, சுதந்திரமான ஒரு
நாட்டிலே தமிழ் மக்கள் வாழக்கூடிய தன்மையை நோக்கி சர்வதேசம் சென்று
கொண்டிருக்கையில் தமிழர் சக்திகளை எவ்வாறு உடைக்கலாம் என அரசாங்கம் சிந்தித்து
வருகின்றது. தனது து}துவராலயங்கள்
மூலமாக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு எம்மவர் சிலரும் பலியாகி
வருகின்றனர்
ஒற்றுமையை
வலியுறுத்தும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்கள். கூட்டமைப்பின்
ஒற்றுமையை வலியுறுத்தும் புலம்பெயர் சமூகம் மூன்று நான்கு பிரிவுகளாகப் பிளவுண்டு
கிடப்பது அரசாங்கத்திற்கே சாதகமாக அமைகின்றது. போரின் இறுதிக் கட்டத்தின் போது
புலம்யெர் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள், அதன் பின்னரான காலகட்டத்தில் அவர்கள்
வழங்கிவரும் அழுத்தங்கள் என்பவற்றின் காரணமாகவே சர்வதேச சமூகம் இன்று உண்மையை
உணர்ந்துள்ளது.
முள்ளிவாய்க்காலில்
எமது மக்கள் அழிந்த வரலாறு இன்று எம்முன்னே இருக்கின்றது. தகப்பனை இழந்த குடும்பம்,
பெற்றோர் இல்லாத
பிள்ளைகள், முடமாக்கப்பட்ட
இளைஞர் யுவதிகள், கண் இல்லாமல்,
கால் இல்லாமல், இவ்வாறு எத்தனையோ… எத்தனையோ.. இன்றும் கூட நடந்த சம்பவத்தை
நினைவுகூரும் எம்மக்கள் ‘ஓ’வென அழுகின்றார்கள். அத்தகைய வரலாற்றைக்
கண்டும் நாம் பிரிந்திருப்பதற்கு என்ன காரணம்?
ஆயுதபலம்
இழக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தமிழர்களையே பலமான அச்சுறுத்தலாக அரசாங்கம்
கருதுகின்றது. போராட்டத்தை மீண்டும் தொடர்வதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றே
அங்கு பேசப்படுகின்றது. இந்நிலையில் எம்முன்னே உள்ள வரலாற்றைச் சீர்து}க்கிப் பார்த்து எம்மிடையே நிலவும்
முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
மூன்று சக்திகளான
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர்
சமூகம் மற்றும் தமிழ்நாட்டு உணர்வாளர்கள் ஆகியோருக்கு இடையே முறையான தொடர்புகள்
அற்ற நிலை உள்ளது. தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம்
முனையும் இன்றைய காலகட்டத்தில் அரசாங்கமே அச்சப்படும் இந்த மூன்று சக்திகளும்
ஐக்கியப்பட்டேயாக வேண்டும்.
இன்று இலங்கையில்
கிராமிய மட்டத்தில் எமது சமூகம் அரசாங்கத்தினால் பிளவுகளுக்கு இலக்காக்கப்
பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் மாமன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் சகோதரன்
வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிடும் நிலை உள்ளது. இதனால் கட்டுக் கோப்பான
குடும்ப உறவு விரிசல் கண்டுள்ளது. மக்களின் இயலாமை, வறுமை, சொந்தக் காலில் நிற்பதற்குக் கனவு கண்டு இன்று கையேந்தி நிற்கும் நிலைமை
என்பவற்றை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றது.
இதேபோன்று,
ஈழவிடுதலையைப்
பெற்றுத்தரப் போராடிய புலம்பெயர் சக்திகள் தமக்கிடையே பிரிந்து நிற்பதை ஜீரணிக்க
முடியவில்லை. விடுதலை உணர்வைத் தாங்கி நிற்கும் அவர்கள் யாவரும் ஐக்கியப்பட
வேண்டும். அவர்கள் ஒன்றுபடும்போது புலம்பெயர்ந்த மக்களும் ஒன்றுபடுவார்கள்.
இன்று
கிராமங்களைச் சுற்றி இராணுவ முகாம்கள். மீள்குடியேற்றம் என்ற பெயரில் வீடுகள்
கட்டப்படுகின்றன. ஆனால், மலசலகூடங்கள்
கட்டப்படுவதில்லை. இயற்கைக் கடனைக் கழிப்பதற்கு வயதுவந்த பெண்பிள்ளைகள்
சந்திக்கும் அவலம் சொல்லில் வடிக்க முடியாதது.
தேசம் பெற்றிபெற
வேண்டும் என்ற நோக்கில் புலம்பெயர் மக்களை அணிதிரட்டிய உங்கள் மத்தியில் ஏன் பிளவு?
பலத்தை இழந்துவிட்டால்
பிளவுபட வேண்டுமா?
நாம் எமது
உறவுகளை இழந்து நிற்கின்றோம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர்.
50,000 மக்கள் துடிக்கத்
துடிக்க உயிரோடு புதைக்கப்பட்ட வரலாறு உள்ளது. இதற்குப் பின்னரும் எம்மிடையே
ஒற்றுமை இல்லாதுவிடின் என்ன அர்த்தம்? எதற்காக இன்னும் அரசியல்? சுதந்திரக்
கோரிக்கை? அரசாங்கம்
தருகின்ற பஞ்சாயத்துத் தீர்வையே வாங்கிக் கொண்டு இருந்துவிட முடியுமே? ‘தருவதைத் தா’ எனக் கோரிப் பெற்றுக் கொண்டு இருந்துவிட
முடியுமே? அல்லது ஜனாதிபதி
கூறுவதைப் போன்று ‘இலங்கைக்குள்
சிறுபான்மை இனம் என எதுவுமே இல்லை. நாமெல்லாம் ஒருதாய் மக்கள்’ என்பதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவிட முடியுமே?
உண்பதற்காக மாத்திரம்
வாய்களைத் திறந்து கொண்டு இருந்து விடலாமே?
இன்று ‘கிறிஸ் பூதம்’ எதற்காக? எமது மக்களைத் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்
வைத்திருப்பதற்காகவே. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு அரசபடைகளுக்கு அதிகாரம் இல்லை
என்ற நிலை வந்தபிறகு அரசபடைகளைத் தமிழ்ப் பிரதேசங்களில் தொடர்ந்தும்
வைத்திருப்பதற்காகவே ‘கிறிஸ் பூதம்’
உருவாக்கப்
பட்டிருக்கின்றது. ஆனால், ‘கிறிஸ் பூதத்’தினாலும் ஒரு நன்மை விளைந்திருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறியபோது விடுதலைப் புலிகளை விமர்சித்த மக்கள்
இன்று அவர்களே வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறும் நிலை உருவாகியுள்ளது.
வெற்றி மமதையில்
இருக்கும் அரசாங்கம் தமிழர்களின் கடந்தகால வாழ்வின் அடையாளங்களை அழித்துவிட
முயற்சிக்கிறது. மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இடம்பெறும் சிங்களக்
குடியேற்றங்கள், சிங்கள மீனவர்கள்
வந்து தொழில் புரியும் நிலைமை….
புதுக்குடியிருப்புக்குச்
செல்வதற்கு எமது மக்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சிங்கள உல்லாசப் பயணிகள் தாராளமாகச் சென்று
வருகின்றார்கள். தமிழர்கள் தமது உடைமைகளை அங்கிருந்து எடுத்துவர அனுமதியில்லை,
ஆனால் அவர்களின் உடைமைகள்
யாவும் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் தெருவோரங்களில் வைத்து விற்பனை
செய்யப்படுகின்றன. ஒரு நீரிறைக்கும் இயந்திரம் ஆயிரம் ரூபாவுக்குக் கூட
விற்கப்படுகின்றது.
தேசத்தில்
நிகழும் இத்தகைய அவலங்களைப் பார்த்துக் கொண்டும் அவை பற்றிப் பேசிக் கொண்டும் நாம்
எமக்குள் ஒற்றுமையாக இல்லையென்றால் எமது இலட்சியத்தில் எம்மால் ஒருபோதும்
வெற்றிபெற முடியாது. இவ்வாறுதான் நாம் வாழப் போகின்றோம் என்றால் இதுவரை நாம்
புரிந்த தியாகங்களுக்கும் சந்தித்த இழப்புக்களுக்கும் அர்த்தமில்லாமற் போய்விடும்.
எனவே, தேசத்தின் பெயரால் நாம்
ஐக்கியப்படுவோம். இல்லாதுவிடில் பரிதாபகரமாக மடிந்து போன எமது மக்களுக்கோ, கனவுகளோடு சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளுக்கோ
நாம் நன்றிக்கடன் செலுத்தியவர்களாக விளங்க மாட்டோம்.
ஆயதப் போராட்;டம் நடைபெற்ற காலத்தில் புலம்பெயர் நாடுகளில்
நிலவிய உற்சாகம் தற்போது இல்லை. அரசாங்கமோ திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு
வருக்ன்றது. பலர் விலைபோயுள்ளனர். ஒருசிலர் காட்டிக் கொடுக்கின்றனர். இத்தகைய நிலை
புலம்பெயர் மண்ணிலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட
சிவராமை நினைவுகூரும் இந்நாளில் நாமும் ஒற்றுமைப் படுவோம் எனச் சபதமேற்றுக்
கொள்வோம். புலம்யெர் மக்கள் சக்தியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்நாட்டு எழுச்சியும் ஒன்றாகும் போதே நாம் நினைக்கின்ற ஜனநாயக
அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். இது விடயத்தில் காலந் தாழ்த்தினால்
எமது இலட்சியத்தைச் சாதிக்க முடியாத நிர்க்கதி நிலைக்கு ஆளாகி விடுவோம்.
அரசாங்கம்
நிமிடத்துக்கு நிமிடம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. நாம் இதுவரை ஓட
ஆரம்பிக்கவேயில்லை. கண்களை மூடிக் கொண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலத்தை ஒரு
ஐந்து நிமிடங்கள் நினைத்துப் பார்த்தால், எமது முரண்பாடுகள் யாவற்றையும் மறந்து ஐக்கியப்பட்டு விடலாம். எனவே நாம் ‘ஒற்றுமைப்படுவோம்’ என இன்றே சபதமெடுப்போம்.
No comments:
Post a Comment