Wednesday 14 September 2011

விரியும் சர்வதேசப் பரப்பில் மீண்டும் மிடுக்குடன் எழவல்ல ஈழத் தமிழர் விடிவு!


சிவராம் நினைவுக் கருத்தரங்கு-3

11 செப்டெம்பர் 2011

கௌரவ சிவஞானம் சிறிதரன்

நாடாளுமன்ற உறுப்பினர்

த.தே.கூ. யாழ் மாவட்டம்


இது சோதனையும், வேதனையும் மிகுந்த காலமே ஆயினும் வரலாறு எம்மைச் சாதனைக்கு அழைப்புவிடும் காலமும் இதுவேயாகும்.
கதவுகள் இறுகப் பூட்டப்பட்டுள்ள போதிலும் யன்னல் திறந்திருக்கிறது, முற்றம் விசாலமாய் விரிந்திருக்கிறது. மேற்கொண்டு நாம் பணியை ஆரம்பிக்க இவை போதும். முற்றத்;தில் கூடுவோம். சமையல் அறை பூட்டுண்டு கிடக்கின்றதே ஆயினும், முற்றத்தில் கற்களை வைத்து சமையல் செய்வோம். சாளரத்தால் வீடு சுவாசிக்கட்டும். கதவை விரைவில் திறப்போம்.

எல்லாம் முடிந்துவிட்டது, இனி எதுவுமேயில்லை என்று சோம்பிக் கிடப்பதற்கு தமிழ்ப் பண்பாட்டில் இடமில்லை. கோடை வெயிலில் கருகும் புல் கூட மீண்டும் மிடுக்குடன் எழவல்ல வரலாற்றையும், மண்ணையும் கொண்ட மக்கள் நாங்கள். கோடையில் தவிக்கின்றோமே ஆயினும் எமது முள்முருக்குகள் விரிந்து மலரத் தவறுவதில்லை. இலையுதிர்ந்தாலும் மலர்கள் விரியத் தவறாத மண்ணும், மரமும், வாழ்வும் எங்களுடையது.  அனைத்தையும் கருக்கப் போவதாக கோடை ஆணையிட்டாலும், பணிய மறுக்கும் தன் திடசித்தத்தை முள்முருக்குகள் பூத்துக் காட்டும். வசந்தம் வரும், குயில்கள் கூவும், முருக்கின் திடசித்தத்தில் நிமிர்ந்து கோடை மடியும், வசந்தம் பிறக்கும். கோடையும்;, வசந்தமும் மாறிமாறி வந்தாலும், சூரியனும், சேவலும் நிலைத்து நிற்கும். இருளில் நின்று கொண்டும்;, கிழக்கில் எழப்போகும் வான வெளிப்பை அறிவிக்க சேவல் தவறுவதில்லை.

எல்லாம் முடிந்த கதையல்ல. ஒவ்வொரு முடிவிலும் இன்னொரு தொடக்கம் உண்டு. இலங்கைத் தீவில் ஈழத் தமிழருக்கு எல்லாமே அடைபட்டு விட்டது போன்ற ஒரு நிலை உண்டேயாயினும், சர்வதேச முற்றம் பரந்து விரிந்து கிடக்கிறது. இப்போது ஈழத் தமிழரின் அரசியலானது முன்னெப்போதையும்விட முற்றிலும் சர்வதேச மயப்பட்டு விட்டது. இப்போது ஈழத் தமிழருக்கு முற்றிலும் சாதகமான ஓரு சர்வதேசச் சூழல் தோன்றியிருக்கிறது. இன ஓடுக்குமுறையின் கொடூரம், இழப்பு, தோல்வி, தியாகம்அர்ப்பணிப்பு இவையனைத்தும் சேர்ந்து சர்வதேசக் கதவை அகலத் திறந்துவிட்டுள்ளன. அகலத் திறக்கப்பட்டுள்ள இந்தச் சர்வதேச அரங்கை புத்திபூர்வமான அணுகுமுறையாலும், குறைவற்ற உழைப்பாலும், உயர்ந்த அர்ப்பணிப்பாலும் நாம் மகிமைப்படுத்த வேண்டியுள்ளது. தன்னை மகிமைப்படுத்துவற்கான பொறுப்பை வரலாறு இதன் வாயிலாக எம்மிடம் ஓப்படைத்துள்ளது.  சர்வதேச அரங்குதான் இப்போது எமது ஆடுகளம். வரலாறு அந்தக் களத்தை எமக்குத் திறந்து விட்டிருக்கிறது. ஆதலால் ஒன்றுமில்லை என்று ஓயாது, தோல்வி மனம் கொள்ளாது, மீண்டும் எழும் மிடுக்குடன் சர்வதேசக் களத்தில் வீறுநடை போடுவோம்.

கையால் ஆகாதவன் மூடுண்ட கதவைக் கண்ணால் காட்டுவான். செயல் திறன் உள்ளவன் கதவை உடைப்பான், அல்லது ஓட்டைப் பிரிப்பான், அதுவுமில்லையேல் நீக்கலுக்குள்ளால் தும்புச் செய்தியையாவது சூரியனில் கலப்பான், வானம் விடிவைக் கக்கும் காலமிது என்று வானத்தை நிரப்புவான்.

புத்திமான்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவார்கள் வளர்ச்சிக்கான விதியைத் தேட. ஓடுகாலிகள் வரலாற்றைப் புரட்டுவார்கள் எதிரிக்கு அடிபணியும் வழி தேட. இதில் நாங்கள் முதல் வகை ஆகவேண்டும்.

மாமனிதரும், புகழ்பெற்ற பத்திரிகையாளருமான டி.சிவராமின் நினைவுப் பேருரையில் ஈழத் தமிழரின் சில வரலாற்று அம்சங்களையும், இன்றைய சர்வதேச அரசியல் நிலைமைகளையும், இணைத்து எடைபோடுதல் பொருத்தம் உடையதாகும். ஒருபுறம் சிவராமைப் படுகொலை செய்ததில் ஒரு வரலாற்றுச் செய்தியை எதிரி உலகிற்குச் சொல்லியது போல மறுபுறம் சிவராமின் நினைவு தினத்தில் நாம் கற்கவேண்டிய வரலாற்றுப் பாடங்களைக் கற்குமாறும் வரலாறு எமக்கு ஆணையிடுகிறது.

தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்குள் வரலாறு புதையுண்டு போகமாட்டாது. சில மனிதர்களால் சிலவேளைகளில் வரலாற்றுச் சக்கரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமே ஆயினும் வரலாற்றுத் தேரோட்டத்தைத் தடுக்க அவர்களால் முடியாது. தற்போது சிங்களப் பேரினவாதம் ஓர் அழிப்பின் வழியில் வெற்றி மமதை கொண்டாட முடிகிறதேயாயினும், அதுவே அவர்களின் தோல்விக்கான கருவறையாகவும் அமையும் என்பதை வரலாறு நிரூபிக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நாம் விடுதலை அடையப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லையென்று தீர்க்கதரிசனம் உரைப்போர் எம்மத்தியில் உண்டு. கிழக்கில் உதித்த சிவராம் தமிழ் மக்களின் விடுதலையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர். இத்தகைய முக்கியத்துவம் மிக்;க சிவராம் நினைவுப் பேருரையை நிகழ்த்த என்னை அழைத்தமைக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாவதுடன், இதனை எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகவும் கருதுகிறேன்.

இச்சந்தர்ப்பத்தில் விரியும் சர்வதேசப் பரப்பில் மீண்டும் மிடுக்குடன் எழவல்ல ஈழத் தமிழர் விடிவுஎன்ற பொருளில் இன்றைய உள்நாட்டு சர்வதேச சூழலை இணைத்து நான் இங்கு உரையாற்ற உள்ளேன்.

முதலில் சிவராம் பற்றிச் சில வார்த்தைகளை நான் இங்கு கூறியாக வேண்டும். அவர் ஆங்கிலக் கல்விப் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர். பல்கலைக்கழக அனுமதி பெற்றுப் பட்டப்படிப்பில் ஈடுபட்டபோதிலும், அவரிடம் காணப்பட்ட இயல்பான போர்க்குணம் காரணமாகப் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டுத் தமிழீழப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் ஆங்கில இலக்கியத்திலும், தமிழ் இலக்கியத்திலும் ஒருங்கு சேர பரந்த வாசிப்பறிவைக் கொண்டவர். இந்த இரு மொழி, இரு இலக்கிய அறிவுகளுடன் கூடவே அவர் அரசியல் கோட்பாட்டு விடயங்களிலும், பத்திரிகைத் துறையிலும் புலமை கொண்;டவராய்க் காணப்பட்டார். இவரது போர்க்குணம் இவரை தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துடன் இணைத்தது. முதலில் இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முற்பட்டார். அதற்கான பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்களுடன் ஈடுபட்டார். அன்றைய 1984 ஆம் ஆண்டுச் சூழலில் விடுதலைப் புலிகள்  இவரைச் சிறிது காலம் காத்திருக்குமாறு கூறியிருந்தனர். ஆனால் அதன் இடைக் காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினருடன் (Pடுழுவுநு) ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இவர் அவ்வியக்கத்தில் இணைந்து கொண்டார். பின்னாளில் அவ்வியக்கத்திலிருந்து விலகியதுடன் கால ஓட்டத்தில் தன்னை ஓர் ஆங்கில, தமிழ் பத்திரிகையாளனாக ஆக்கிக் கொண்டு பத்திரிகைத் துறையில் மிகவேகமாகப் பிரகாசிக்கத் தொடங்கினார். தமிழனாகவும், ஆயுதம் ஏந்திய போராட்ட இயக்க அனுபவம் கொண்டவராகவும் காணப்பட்ட ஒருவரது அறிவை ஆங்கிலம் கற்ற சிங்கள உயர் குழாம் விருப்புடன் அணைத்துக் கொண்டது. வெளியிலிருந்து முற்றிலும் அந்நியராக தமிழரின் பிரச்சினைகளையும், போராட்டத்தையும் எழுதி வந்த சிங்களப் பத்திரிகையாளர்களைக் கொண்ட சிங்கள உயர் குழாத்தினருக்கு போராட்ட அனுபவம் மிக்க ஒருவரின் உள்ளார்ந்த பார்வையை அறிய வேண்டிய அவசியம் இருந்த காலத்தில் சிவராம் மிக விரைவாகவே பிரகாசிக்கத் தொடங்கினார்.

பத்திரிகை உலகில் இவருக்குக் கிடைத்த பிரபல்யமும், இவரது போராட்ட அனுபவமும் இவர் பால் வெளிநாட்டவர்களையும், ராஜதந்திரிகளையும் ஈர்த்தது. அதன் வாயிலாக இவர் பரந்த அளவில் வெளியுலகத் தொடர்பும் முக்கியத்துவமும் மிக்கவரானார்.

கிளிநொச்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இவருக்கான முதலாவது அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய ஒருவர் இவர் பற்றிப் பின்வருமாறு கூறிய வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சிவராமின் இழப்பை வரும் 15 ஆண்டுகளுக்கு யாராலும் இட்டு நிரப்ப முடியாது. ஏனெனில் அவருக்குக் கிடைத்த தொடர்புகளும், அங்கீகாரமும் தனி விசேடமான வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தைக் கொண்டவை. தமிழீழப் போராட்டத்தை ஏற்று, அதை நியாயப்படுத்தி எழுதும் ஒருவரை சிங்கள உயர் குழாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனால், அன்றைய சூழலில் சிவராமை ஏற்க வேண்டிய அவசியமும், அதனை அவர்கள் ஏற்க வைப்பதற்கான திறனும் சிவராமிடம் இருந்தது. இப்பின்னணியில் அவர் சிங்கள உயர் குழாத்தின் மத்தியில் பெற்ற அங்கீகாரம் தனி விசேடமானது. ஒரு தமிழன் ஆங்கிலம் கற்ற சிங்கள உயர் குழாத்தில் ஏற்புடையவன் ஆக முடியாது. இது சிவராமிற்கு மட்டும் கிடைத்திருந்த சிறப்பான வரலாற்று வாய்;ப்பு. அத்துடன் அவருக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களினதும், ஆய்வறிஞர்களினதும், ராஜதந்திரிகளினதும் தொடர்பு இன்னொரு பரிமாணமாகும். எனவேதான் இவரது இந்த இடத்தைக் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு யாராலும் நிரப்ப முடியாது என்று கூறுகிறேன்என்று அவர் தனது உரையில் கூறியிருந்தார்.

2005 ஏப்ரல் 28 ஆம் திகதி இவர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் அவரது இடத்தை நிரப்பவல்ல அறிகுறிகள் இன்னும் தோன்றவில்லை என்பது கண்ணுக்குத் தெரிகிறது. அப்படியாயின் 15 ஆண்டுகளையும் தாண்டி இந்த இடைவெளி நீளுமோ என்ற அச்சம் என் மனதில் எழுகிறது. ஆனால்  பல்துறை அறிவுடன் இவ் இடைவெளியை விரைவில் நிரப்ப எம் மத்தியில் உள்ள இளைஞர் தலைமுறை முன்வர வேண்டுமென வேண்டுகிறேன். தமிழ் மக்கள் சளைக்காதவர்கள்” (வுயஅடைள யசந pநசளநஎநசiபெ  Pநழிடந) என்ற கூற்றுக்கிணங்க இடர்களின் மத்தியிலும் இலக்கை நோக்கி அயராது நாம் பயணிக்க வேண்டும். சிவராமின்  இடத்தை நாம் விரைவில் நிரப்ப வேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இத்துடன் அவரைப்பற்றிக் கூறுவதை நிறுத்திக் கொண்டு அவரது பெயரால் நாம் வரலாற்றில் மனங்கொள்ள வேண்டிய விடயங்களுக்கு வருவோம்.

ஈழத் தமிழரைக் காலமெல்லாம் சிக்குண்டு தவிக்க வைக்கும் பொறியாக சர்வதேச அரசியல் நிலைமைகள் இருந்து வந்துள்ளன. நான் நின்று உரையாற்றும் இந்த சுவிற்சர்லாந்து தேசத்திற்கும் எம்வாழ்வு பற்றி மிகுந்த பொறுப்புணர்வு மிக்க கடமையுண்டென நினைக்கிறேன்.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த சூழலில் ஆசிய நாடுகள் விடுதலை பெறவல்ல பின்னணியில் தனது இந்து சமுத்திர ஆதிக்க நலன் கருதி இலங்கையில் இராணுவத் தளங்களை வைத்திருக்க பிரித்தானிய அரசு முடிவெடுத்தது. அன்றைய நிலையில் இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாக இலங்கைத் தீவில் இராணுவத் தளங்களை அமைப்பதற்குச் சிங்கள ஆட்சியாளரின் மனமார்ந்த ஆதரவைப் பெறவேண்டிய தேவை பிரித்தானிய ஆட்சியாளருக்கு இருந்தது. இதற்காகச் சிங்கள ஆட்சியாளரைத் திருப்திப் படுத்த வல்லதும்;, தமிழருக்குப் பாதகமானதுமான அரசியல் யாப்பை உருவாக்க பிரித்தானிய ஆட்சியாளர் தயாராகினர்.

இதனால் யாப்பை உருவாக்க பிரித்தானியரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான சோல்பரிப் பிரபுவால் கையெழுத்திட்டு நீட்டப்பட்ட வெற்றுக் காசோலையில் (டீடயமெ ஊhநஙரந) சிங்களத் தலைவரான டி.எஸ். செனநாயக்க தமக்கு வேண்டிய தாரளமான தொகையை எழுதியது போல அரசியல் யாப்பை தமக்கு வேண்டியவாறும் தமிழருக்குப் பாதமாகவும் உருவாக்கிக் கொண்டார். இதுவே தமிழ் மக்களின் உரிமைக்கு விழுந்த பேரடியாய் அமைந்தது. யாப்பை உருவாக்கிய சோல்பரிப் பிரபு, தாம் பெரும் தவறை இழைத்து விட்டதாக பிற்காலத்தில், அதாவது 1961 ஆம் ஆண்டு, வருத்தம் தெரிவித்திருந்தார். ஆதலால் அந்தத் தவறுக்குப் பரிகாரம் காணவேண்டிய பொறுப்பு இப்போது பிரித்தானியாவிற்கு உண்டு என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சோல்பரி யாப்பில் பெயரளவில் சிறுபான்மை இனங்களுக்கான காப்பீடாக 29 ஆவது சரத்து என்பது மட்டுமே காணப்பட்டது. ஆனால், அதனைச் சி;ங்கள ஆட்சியாளர்கள் நடைமுறையில் ஒருபோதும் பொருட்படுத்தியது கிடையாது என்பதுடன் அதனை மீறியே செயற்பட்டார்கள் என்பதனையும் பின்பு அவதானிப்போம். இன அளவால் பெரும் எண்ணிக்கையைக் கொண்ட சிங்களவர்களின் கையில் தமிழ்த் தேசிய இனத்தின்  தலைவிதியைத் தாரைவார்த்த ஒரு யாப்பாகச் சோல்பரி யாப்பு அமைந்தது. தலைகளை எண்ணும் இனநாயக ஆதிக்கத்தையே ஜனநாயகம்என்று சிங்கள ஆட்சியாளர்கள் வியாக்கியானம் அளிப்பதற்குப் பொருத்தமான யாப்பாய் அது அமைந்தது.

தலைகளை எண்ணும் னநாயக ஆதிக்கத்திலிருந்து தேசிய இனம் சார்ந்த ஜனநாயக உரிமைக்கு இலங்கை மாறவேண்டும்;. ஆனால் அவ்வாறு மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. இன்று காணப்படும் இலங்கையின் அரசியல் சட்ட யாப்பு அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானது என்று அரசாங்கத் தரப்பில் கடந்த இரண்டு மாதங்களாக வெளிப்படையாகக் கூறப்பட்டு வருகிறது.

கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போது சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய தேசிய முன்னணித் தலைவி திருமதி சோனியா காந்தி அவர்கள், தமிழரின் உரிமைகளை நிலைநிறுத்தத் தேவையான அரசியல் யாப்பு மாற்றத்தை இலங்கையில் உருவாக்க இந்திய அரசு பாடுபடுமெனத் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு எதிராக அரசியல் யாப்பு மாற்றங்கள் தேவையில்லை என்ற செய்திகள் இலங்கை அரச தரப்பின் உயர் மட்டத்திலிருந்து கடந்த சில மாதங்களாய் முழு அளவில் வெளியாகி வருகின்றன.

இப்பொழுது இருக்கும் இந்த யாப்பே போதும் எனக் கூறிவரும் சிங்களத் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்காக இந்த யாப்பை எத்தனை தடவைகள் மாற்றியுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்;த யாப்புப் போதுமானது என்று கூறும் இன்றைய ஜனாதிபதி, தனது பதவிக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு மேல் நீடிக்க வகைசெய்யும் அரசியல் யாப்பு மாற்றத்தைத் தானே கொண்டு வந்திருந்தார் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது சிங்கள ஆட்சியாளர்கள் தம் தேவைக்காக யாப்பை எந்த வகையிலும் மாற்றி அமைப்பார்கள் ஆனால் தமிழர்களின் தேவை என்று வரும் பொழுது ஒடுக்குமுறைக்கு ஏதுவான யாப்பைச் சரியென்று சொல்வார்கள்.

1972 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பை யாழ்நகர நாவலர் மண்டபத்தில் வைத்து எரித்துத் தீக்கிரையாக்கியதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார். அதாவது அந்த யாப்பை அடிமைச் சாசனம்என அவர் வர்ணித்தார். இந்த யாப்பினாற்தான் தமிழரின் கால்களில் விலங்கு மாட்டப்படுகிறது. ஆதலால் அந்த விலங்கை நாம் எதிர்க்கிறோம். தமிழ் மக்களின் உரிமைக்கான யாப்பு மாற்றங்களைச் சிங்களத் தலைவர்கள் மேறகொள்வார்கள் என்று நாம் ஒருபோதும் மனப்பால் குடிக்க முடியாது.

சோல்பரி யாப்பின் கீழ் சிறுபான்மை இனங்களுக்கான காப்பீடாகக் கூறி உருவாக்கப்பட்ட 29 ஆவது சரத்தைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் நடைமுறைப் படுத்தியது கிடையாது. அதேவேளை அதனை மிக வெளிப்படையாக 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் மீறினார்கள். அதாவது அந்த 29 ஆவது விதியை யாப்பில் வைத்துக் கொண்டே அதை மீறிய தனிச் சிங்களச் சட்டத்தை  நிறைவேற்றியதன் மூலம் இனவாத அடிப்படையில் யாப்பை மீறியவர்கள் என்ற தொடக்கத்தை ஆரம்பித்தார்கள். பின்பு 1972 ஆம் ஆண்டு யாப்பில் அந்த விதியை முற்றாகவே நீக்கினார்கள். அதாவது ஒருபுறம் தமிழருக்குச் சாதகமான அம்சம் ஏதாவது சட்டத்தில் இருந்தால் அதை நடைமுறைப்படுத்த மாட்டார்கள், மறுபுறம் இனவாத தேவைக்கேற்ப சட்டங்களையும், யாப்பு விதிகளையும் மீறுவார்கள். யாப்பின் எழுத்துருவிலான ஒடுக்குமுறை விதிகளைச் சுட்டிக்காட்டும் போது தமது யாப்பின் புனிதம் பற்றிப் பேசுவார்கள். ஏதாவது திருத்தம் வேண்டும் என்று கோரும் போது இருக்கும் யாப்பே போதும் என்பார்கள். இதுதான் இலங்கையின் அரசியல் யாப்பு பற்றிய இனவாதத்தின் கதை.

இலங்கையில் உள்ள பிரச்சினை எழுதப்பட்ட சட்டங்கள், யாப்புகள் பற்றியானவை மட்டுமல்ல. நடைமுறை பற்றியதும் ஆகும். பொலிஸ், இராணுவம், நிர்வாகம், நீதித்துறை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் ஒருமுகமாகப் பேரினவாத மயப்பட்டுள்ளன. எனவே இத்துறை சார்ந்த அனைவரும் சிங்கள இனவாதக் கண்கொண்டே அனைத்தையும் நடைமுறைப் படுத்துவார்கள். சட்டமும் அவர்களின் கையில், நீதித்துறையும் அவர்களின் கையில், பொலிசும் அவர்களின் கையில், சிறைச்சாலையும் அவர்களின் கையில், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் அவர்களின் கையில், வெள்ளைத் துணியும் அவர்களின் கையில் நாம் என் செய்வோம் என்ற அவல நிலையில் ஈழத் தமிழர்கள் உள்ளனர்.

இத்தகைய சிங்கள அரச, நிர்வாக, இராணுவ, நீதி, ஊடக இயந்திர அமைப்பைப் புரிந்து கொள்ளாமல் ஈழத் தமிழர் மீதான ஒடுக்கு முறைகளைப் புரிந்து கொள்ள முடியாது. அதாவது ஜனநாயகத்தின் குரலான ஊடகங்களே சிங்கள இனவாத மயப்பட்ட நிலையில், தமிழர்களின் உரிமைகளையும், துயரங்களையும் ஓப்புக் கொள்ள மறுக்கும் நிலையில் ஏனைய சிங்கள அரச இயந்திரத்தின் இனவாதத் தன்மையை புரிந்து கொள்வதில் கஷ்டம் இருக்காது. வன்னியில் மக்கள் படுகொலைக்கு உள்ளானமை பற்றி உலகமே குரலெழுப்பும் போது சிங்கள ஊடகங்கள் இதற்கு எதிர்க் கணியமாகச் செயற்படுவதையோ, அல்லது மௌனம் காப்பதையோ எப்படிப் புரிந்து கொள்ள முடியும்;? இனவாத ஊடகங்கள் கண் திறக்க மறுக்கும் நடைமுறையைக் கொண்டிருக்கும் போது ஏனைய அனைத்து வகைச் சிங்கள அமைப்புக்களும், நிறுவனங்களும், கட்டமைப்புக்களும் இனவாத மயப்பட்டுச் செயற்படுவதில் வியப்பெதுவும் இல்லை. ஆதலால் தமிழ் மக்களின் பிரச்சினை வெறும் சட்டப் பிரச்சினை மட்டுமல்ல அதற்கும் மேலாய் நடைமுறை சார்ந்த, மனப்பாங்கு சார்ந்த, பேரினவாத ஓடுக்குமுறையை ஏற்கும் ஒரு கலாச்சாரம் சார்ந்த பிரச்சினையாகவும் உள்ளது, எனவே, இதனை இலகுவில் யாராலும் தீர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து இன்றைய உலக ஒழுங்கிற்கேற்ப மூன்றாம் தரப்பின் முன்னிலையில் பேச்சுக்களும் உடன்பாடுகளும் நடைபெற்றாலன்றி அரசியல் தீர்வு என்ற ஒன்று சாத்தியப்படப் போவதும் இல்லை.

இணக்க அரசியல் பேசி சிங்கள மக்களிடமிருந்து உரிமைகளைப் பெறலாம் என்று எழும் குரல்கள் நடைமுறையில் து}ர்ந்து போய்விடும். வரலாறு அறியாதோர் அல்லது விசமத்தனமாகப் பேசுவோர் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து இணக்க அரசியலுக்கு இடமிருப்பதாகக் கூறமுடியும். ஆனால் உண்மை எதிர்மாறானது என்பதை வரலாறு காட்டுகிறது. 1949  ஆம் ஆண்டு சமஷ்டி அரசியல் யாப்பு அமைப்பைக் கோரிய தந்தை செல்வா அதன் பெயரால் கட்சிக்குச் சமஷ்டிக் கட்சிஎனவும் பெயர் இட்டார். ஆனால் இணக்க அரசியலின் பொருட்டு அதிலிருந்து இறங்கி பிராந்திய சபைகள் அமைக்கும் ஓரு தீர்விற்கு ஓப்புக்கொண்டு பண்டாரநாயக்காவுடன் 1957 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இப்பிராந்திய சபைகளை அமைப்பதற்கான தீர்வைச் சிங்களத் தலைவர்கள் பின்பு நிராகரித்தனர். அதன் பின்பு பிராந்திய சபைகள் என்ற தீர்விலிருந்து மேலும் கீழ் இறங்கி மாவட்ட சபைகள் என்கின்ற சிறிய தீர்வுக்கு டட்லி செனநாயக்காவுடன் தந்தை செல்வா 1965 ஆம் ஆண்டு கையெழுத்திட்டார். இதனையும் சிங்களத் தலைவர்கள் நிராகரித்தனர்.

இதன் பின்பு மாவட்ட சபைத் தீர்விலிருந்தும் கீழிறங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்கின்ற தீர்விற்கு அன்றைய தமிழ்த் தலைவர் அ. அமிர்தலிங்கம் தந்தை செல்வாவின் மருமகனான பேராசியர் ஏ.ஜே. வில்சனினதும், மு. திருச்செல்வத்தின் மகனான கலாநிதி நீலன் திருச்செல்வத்தினதும் அனுசரணையுடன் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவோடு ஓர் உடன்பாட்டிற்கு வந்தார். இதில் தாம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிடம் ஏமாந்து போன கதையை ஏ. ஜே. வில்சன் தான் எழுதிய டீசநயம ரி ழக ளுசi டுயமெய  என்ற நு}லில் விபரித்துள்ளார். அந்த அனுபவத்திலிருந்து இலங்கைத் தீவு ஒருநாள் இரண்டாக உடையும் என்றும் கூறியுள்;ளார். 

இங்கு ஒரு விடயத்தை வரலாறு காட்டுகிறது. அதாவது தமிழ் மக்கள் தமது கோரிக்கையை இணக்க அரசியலின் பொருட்டு எவ்வளவுதான் குறைத்து வந்த போதிலும், சிங்களத் தலைவர்கள் அவற்றை நிராகரித்து வந்தமைதான் தொடர்கதையாக உள்ளது.

இங்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. எனினும், அவற்றை சிங்கள ஆட்சியாளர்கள் கிழித்தெறிந்தார்கள் என்பதைத்தான் பலரும் அடிக்கடி சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் ஓப்பந்தங்கள் செய்யப்பட்டன என்பதை விடவும் முக்கியமான விடயம் என்னவெனில் ஒவ்வொருமுறையும் தமிழ்த் தலைவர்கள் மேலிருந்து கீழிறங்கி தொடர்ச்சியான விட்டுக்கொடுப்புக்களுடனேயே ஓப்பந்தங்களைச் செய்துள்ளார்கள் என்பதுதான். அப்படியிருந்தும் சிங்களத் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கவில்லை என்பதுதான் இங்கு முக்கியமானது. அதாவது சமஷ்டி முறைத் தீர்விலிருந்து மேலும் கீழிறங்கிப் பிராந்திய சபைகள் அமைக்கும் தீர்வுக்கு உடன்பட்டார்கள். அதுவும் மீறப்படவே அதிலிருந்தும் கீழிறங்கி மாவட்ட சபைகள் அமைக்கும் தீர்விற்குத் தமிழ்த் தலைவர்கள் உடன்பட்டார்கள். அதுவும் மீறப்படவே அதிலிருந்து மேலும் கீழிறங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்விற்கு உடன்பட்டார்கள். இறுதியாக எல்லாமே புஷ்வாணமாகியது. ஆதலால் விட்டுக்கொடுப்பிற்கும், இணக்க அரசியலுக்கும் சிங்களத் தலைவர்கள் தயாராக இருந்ததில்லை என்பது மட்டுமல்ல அதற்கு முற்றிலும் எதிர்மாறாகவுமே நடந்தார்கள் என்பதுமே உண்மை.

1980 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட பின்பிலிருந்து தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களின் அளவினால் தமது எதிர்கால வரலாற்றை அவர்கள் அளந்து பார்க்கிறார்கள். அவர்கள் துன்பம் தந்த வலியின் அளவினால் தமக்குப் பாதுகாப்பான அரசியல் ஏற்பாட்டின் அளவை விரும்புகிறார்கள்;;. நிலைமை இப்படி இருக்க இனித் தீர்வு தேவையில்லை இருக்கும் யாப்பே போதுமென்று சிங்களத் தலைவர்கள் கூறுவது வரலாற்றின் எதிர்ப் பக்கத்தில் ஆட்சியாளர்கள் நிற்பதையே காட்டுகிறது.

யுத்தம் முடிந்து இரண்டே கால் ஆண்டுகள் கடந்த பின்பும், அரசியல் தீர்வுக்குத் தடையாக இருப்பது என்ன? அரசியல் தீர்வு காணப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய அரசாங்கம் எதுவும் தெரியாதது போல் அனைத்தையும் கைவிரித்துவிட்டு நாடாளுமன்ற தெரிவுக் குழுஎனும் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. அதேவேளை இருக்கும் யாப்பே போதுமானது என இன்னொரு பக்கம் கூறுகிறது. இது தமிழ் மக்களையும், இந்திய அரசையும், சர்வதேச சமூகத்தையும் முற்றிலும் ஏமாற்றத்தி;ல் ஆழ்த்தியுள்ளது. சிங்கள அரசு தமிழ் மக்களின் நீதியான உரிமைகளை ஏற்றுக்கொள்ளாதென சர்வதேச சமூகத்திலிருந்து தெளிவாகக் குரல்கள் எழத்தொடங்கியுள்;ளன. இந்நிலையில் ஈழத் தமிழரின் அரசியலை சர்வதேசப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும்  சர்வதேசப் பரிமாணத்தில் கையாளவேண்டிய தேவையும் எமக்கு அதிகம் உண்டு. அந்த வகையில் சர்வதேசப் பரிமாணத்தை இனி நோக்குவோம்.

சர்வதேச அரசியலைக் கையாள்வதிலும், வெளிநாடுகளை ஏமாற்றுவதிலும் சிங்களத் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர்ச்சி குன்றாத 2500 ஆண்டு கால ராஜதந்திரப் பாரம்பரியம் உண்டு. இதனால் வெளிநாடுகளை அவர்கள் மிக லாவகமாகக் கையாள்வார்கள். எதிரிகளையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதிலும், தேவைக்கேற்ப தந்திரோபாயக் கூட்டுக்களை உருவாக்குவதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள். அதாவது தமது எதிரியான ஜே.வி.பி.யினரை தற்காலிக நண்பர்கள் ஆக்கி அடையக் கூடிய நன்மைகளை அடைந்துவிட்டு இறுதியில் அவர்களை ராஜபக்ஷ  முகவரியில்லாமல் செய்துள்ளதை ஒரு மிக இலகுவான உதாரணமாகக் காட்டலாம். இவ்வாறு எதிரியை நண்பராக்கி பின்பு அழிப்பதிலோ, தோற்கடிப்பதிலோ சிங்கள ஆட்சியாளர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு ஜே.வி.பி.யின் இன்றைய நிலை நல்லதொரு எடுத்துக்கட்டு.

சர்வதேச அரசுகளை தம்பக்கம் வென்றெடுத்து ஒரு பாரிய அணியை உருவாக்கியதன் மூலமே ராஜபக்ஷாக்கள் கடந்த யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள். அவர்கள் தனித்து நின்று போராடவில்லை. நேரடியாக 20 நாடுகளின் இராணுவ உதவிகளையும், முழு உலக நாடுகளினது ஏகோபித்த ஆதரவினையும் ஒன்றுதிரட்டித் தமிழ் மக்களைச் சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்திவிட்டு இந்த யுத்தத்தை நடாத்தினார்கள். கேட்பார் யாருமின்றி பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கான பலத்தை இப்படித்தான் சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றார்கள். அவர்கள் தேவைக்கேற்பக் கூட்டுச் சேர்வதில் கைதேர்ந்தவர்;கள்.

யுத்தம் முடிந்த பின்பு அரசு தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளுக்குக் கொடுத்தார்கள். தீர்விற்குப் பயங்கரவாதம்தான் தடை, அதை ஒழித்துவிட்டால் அரசியல் தீர்வைக் காணமுடியும்என்று உலகிற்குக் காட்டி முழு உலக நாடுகளினது அனைத்துவகை ஆதரவையும் பெற்றுப் பயங்கரவாதத்தை அழிப்பது என்பதன் பெயரில் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள். யுத்தத்தின் பின் உலகம் கண் திறந்தது. 40 ஆயிரத்திற்கு மேல் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்;கை வாயிலாக உலகம் அறிந்து கொண்டது.

இவ்வாறு மக்கள் கொல்லப்பட்டதைப் புலிகள் சொல்கிறார்கள் என்றால் அதை பொய்யென்று சாட்டுச் சொல்லிவிடலாம், ஆனால் சொல்வதோ மிகப் பொறுப்பு வாய்ந்த உலக நாடுகளின் மன்றமான ஐ.நா. சபை நிபுணர் குழு அறிக்கையாகும். இத்தனைக்கும் பிறகு தீர்வுபற்றி அரசு சாதகமான நடைமுறையைக் காட்டாதது கண்டு சர்வதேச சமூகம் ஏமாந்துள்ளது.

யுத்தத்தின் பின்பு தீர்வு எனக்கூறி உலகை ஏமாற்றி முழு உலக நாடுகளின் ஆதரவையும் தன் பக்கம் திரட்டிக் கொண்ட அரசு யுத்தம் முடிந்த பின்பு தீர்வு காணப் போவதாக இரண்டு ஆண்டுகளாகப் பாசாங்கு காட்டிவிட்டு இப்போது எல்லாவற்றையும் கைவிரித்துள்ளது. இந்நிலையில் விழிப்படைந்திருக்கும் சர்வதேச சமூகத்தை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

அங்கு தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிர் அழிப்புக்களைக் கண்டு சர்வதேச சமூகம் திகைப்பில் ஆழ்ந்துள்ள இந்தச் சூழலில், தீர்வு காண அரசு மறுத்துள்ள இன்றைய நிலையில் சர்வதேச சமூகத்தை நாம் கையாள்வது மிகவும் சாத்தியமானது. தற்போது எமக்குள்ள ஒரேயொரு பலமாக அந்த சர்வதேசச் சூழலே உள்ளது.  ஆதலால் அதனை சரிவரக் கையாண்டு நாம் எமது உரிமையை வென்றெடுக்க வேண்டும். விடிவைத் தேட வேண்டும். எவ்வளவிற்கு எவ்வளவு நட்பு வட்டத்தை அதிகரிக்கிறோமோ அவ்வளவிற்கு நாம் பலமடைய முடியும்.

இலங்கை அரசிற்கு என்று சில நிரந்தரமான நட்பு நாடுகள் உள்ளன. அதுவும் வீட்டோஎனும் ரத்து அதிகாரத்தை ஐ.நா. சபையில் கொண்டுள்ள சில நாடுகளின் இறுக்கமான நட்பையும், பக்கபலத்தையும் இலங்கை அரசு வளர்த்து வைத்துள்ளது. இப்பின்னணியில் எம்முடன் கைகோர்க்கக் கூடிய நாடுகளை அடையாளம் கண்டு நாம் நட்பை வளர்த்தாக வேண்டும். அத்துடன் வென்றெடுக்க வாய்ப்பிருக்கும் நாடுகளையும் நாம் தொடர்ச்சியாக அணுகி வென்றெடுத்து எம்பக்கம் இணைத்துக் கொள்ள வேண்டும்.

யதார்த்தத்தில் சர்வதேச உறவைக் கையாள்வதிலேயே எமக்கான அனைத்துப் பலமும் தங்கியுள்ளது. எம்மைத் தனிமைப் படுத்துவதில் இலங்கை அரசு வெற்றி பெற்றிருந்தது. நாம் அதிலிருந்து மீண்டெழுவதற்கான சூழல் சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவு ஈழத் தமிழரின் அரசியலை முற்றிலும் சர்வதேச மயப்படுத்திவிட்டது. அதுவும் தமிழ் மக்களுக்கு அனுதாபமான சர்வதேசச் சூழலைத் தோற்றுவித்துள்ளது. இதனைச் சரிவரக் கையாண்டு தமிழ் மக்களை இனவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு எமக்குண்டு. ஆதலால் எமக்கு வாய்ப்பான சர்வதேச உறவுகளைச் சரிவர அடையாளம் கண்டு அவற்றை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

இலங்கை அரசு உலகில் அம்பலப்பட்டிருக்கும் இன்றைய  நிலையில் அதனை ஒரு பலமாகப் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். இந்தவகையில் ஒரு சரியான சர்வதேச வியூகத்தை வகுக்கத் தமிழ் அறிஞர்கள் முன்வர வேண்டும். அறிஞர்களின் பங்களிப்பு ஒரு இனத்தின், ஒரு தேசத்தின் விடிவிற்கும், விமோசனத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானது.

வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு எமது விடிவிற்கான சரியான பாதையை நாம் வகுக்க வேண்டும். இதில் தமிழ் அறிஞர்களின் முன்முயற்சி முதன்மையானது. அரசியலை முற்றிலும் அறிவியல் மயப்படுத்த வேண்டும்;. அர்ப்பணிப்புடனும், தீர்க்க தரிசனத்துடனும் அரசியலில் பணியாற்ற வேண்டும். அரசற்ற ஒடுக்கப்படும் ஓர் இனமென்ற வகையில் எமக்கான பிரச்சினைகள் மிகவும் பாரியவை. ஆதலால் அதிக பொறுப்புணர்வுடனும், தீர்க்கமான பார்வையுடனும் நாம் எதனையும் அணுக வேண்டும்.

எமக்கு ஒரு நல்ல தகவல் மையம் அவசியம். நம்பகமான, செயற்றிறனுள்ள ஒரு தகவல் மையத்தை நாம் கட்டி எழுப்ப வேண்டும். அதிலிருந்துதான் சர்வதேச உறவைக் கையாள்வதற்கான ஒரு அடிப்படையை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். எம்மத்தியில் பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும் இருக்கலாம். ஆனால் அனைவரும் இணைந்து ஒரு நம்பகமான தகவல் மையத்தைக் கட்டியெழுப்பப் பாடுபட வேண்டும்.

ஏனெனில், இன்றைய யுகம் ஒரு தகவல் யுகம். ஆதலால் அதற்கு நம்பகமான, ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான தகவல் அவசியம்.

தமிழ் மக்களில் குறிப்பாக கிழக்கிலும், வன்னியிலும் குடும்ப உழைப்பாளிகள் பெருமளவில் கொல்லப் பட்டிருக்கிறார்கள். சரியான தொகை யாருக்கும் தெரியாது. இது ஒரு பாரதூரமான விடயம். இத்தொகையை நம்பகமாக உலகிற்குச் சொல்ல  எமக்கொரு சிறப்பான தகவல் மையம் அவசியம். இப்படி விதவைகள் தொகை அதிர்ச்சி அளிக்கக் கூடிய எண்ணிக்கையில் உள்ளது. மேலும் வாழ்வாதாரம் அற்ற குடும்பங்களின் நிலை, மாண்டுபோன சிறுவர்களின் தொகையென அறிய வேண்டிய தகவல்கள் ஏராளம் உள்ளன. இந்தவகையில் உலகம் ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு விஞ்ஞான பூர்வமாக தகவல்களைப் பெறுவதற்கு ஏற்ற ஒரு மையத்தை நாம் அவசரமாக உருவாக்க வேண்டும். இதில்  அனைத்து வேறுபாடுகளையும் கடந்து பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படலாம்.

தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிரதான பணி; சாதமாகக் காணப்படும் சர்வதேச சூழலைப் பயன்படுத்தி எமக்குப் பொருத்தமான ஒரு சிறப்பான சர்வதேச உறவுக் கொள்கையை உருவாக்குவதே. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் எழுச்சி எமக்கு இதில் அடிப்படையான பலத்தைத் தரவல்லது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில்; கொண்டு மிக விரைவாக ஒரு சர்வதேசக் கொள்கையை வகுக்க வேண்டும். அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு நம்பகமான, செழிப்பான தகவல் மையத்தை உருவாக்க வேண்டும்.

சிவராமின் நினைவை மனதில் நிறுத்தி நாம் ஒரு தகவல் மையத்தை உருவாக்குவதும், வெளியுறவுக் கொள்கையை வகுப்பதும் அவசியமான பணிகளெனத் தீர்மானிப்போமாக.

No comments: