Sunday 14 April 2013

உதயன் அலுவலகம் மீண்டும் தாக்கப் பட்டுள்ளமையை சிவராம் நினைவுப் பணிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.



சிறி லங்காவில் ஊடகங்களுக்கு எதிராகத் தொடரும் அச்சுறுத்தலின் மற்றொரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாழிதழின் அலுவலகம் மீண்டும் தாக்கப் பட்டுள்ளமையை சிவராம் நினைவுப் பணிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

உதயன் பத்திரிகை வெளிவருவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறி லங்கா இராணுவத்தின் கரங்களே நேரடியாகத் தொடர்பு பட்டிருக்கின்றது என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமல்ல.

சிறி லங்காவில் இன்றுவரை அதிக எண்ணிக்கையில் தாக்குதலுக்கு இலக்கான ஒரு பத்திரிகை நிறுவனம் எனப் பட்டியல் இட்டோமேயானால் அதில் முதலிடம் உதயன் பத்திரிகை நிறுவனத்துக்கே கிடைக்கும். உதயன் பத்திரிகை நிறுவனம் மாத்திரமன்றி அதன் சகோதரப் பத்திரிகையான சுடரொளி கூட கடந்த காலங்களில் பல்வேறுவிதமான தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இலக்காகி வந்துள்ளது.

இந்த இரு ஊடகங்களும் தொடர்;ச்சியாகத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதன் காரணம், அவை தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் தந்து வருகின்றமையும் அத்தகைய செயற்பாடு சிறி லங்கா அரசாங்கத்தின் பேரினவாத நடவடிக்கைகளைத் தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தடங்கலாக அமைந்;துள்ளமையுமே. வடபுலத்தில், குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல், சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்றம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தொடர்ச்சியான அச்சுறுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அவலம் என்பவற்றுக்கு எதிராக உதயன் தொடர்ச்சியாகவும் காத்திரமாகவும் குரல் எழுப்பி வருகின்றது. இதனைத் தடுத்துவிடவும், விரைவில் எதிர்பார்க்கப்படும் வட மாகாணத் தேர்தல் சமயத்தில் தமிழ் மக்களின் குரலை ஒடுக்கிவிடுவதற்குமான முன்னேற்பாடாகவுமே இத்தாக்குதல் நடாத்தப் பட்டிருக்கின்றது.

அண்மைக் காலமாக உதயன் நாளிதழுக்கு எதிராகத் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்க சார்பு சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சேறு பூசும் வகையிலான பிரசாரத்தின் ஒரு அங்கமாகவும் இத்தாக்குதல் கருதப்பட வேண்டும்.

உதயன் நாழிதழ் மீதான தாக்குதல் தொடர்பில் சிறி லங்கா அரசாங்கத்திடம் முறையிடுவதாலேயோ அன்றி குற்றவாளிகளைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்துமாறு கோருவதாலேயோ பயன் ஏதும் விளையாது என்பது உலகறிந்த உண்மை. எனவே, இது விடயத்தில் சர்வதேச சமூகமே காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஊடக நலன்பேணும் உலகளாவிய நிறுவனங்கள் இவ்விடயத்தை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் சென்று சிறி லங்காவில் ஊடக சுதந்திரத்தை உறுதிப் படுத்தவும், ஊடகவியலாளர்களினதும் ஊடகப் பணியாளர்களினதும் உயிர்களைக் காக்கவும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அரசாங்கத்தின் சார்பு அற்ற, சுதந்திரத் தமிழ் ஊடகங்கள் மீது கிட்டிய கடந்த காலத்தில் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவை விரைந்து தடுக்கப்படாது விட்டால் சிறி லங்கா மற்றுமொரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு இந்த நிலைமையைத் தடுப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

சண் தவராஜா
இணைப்பாளர்

No comments: