Wednesday 22 June 2011

போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உதவி

கடந்தகால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் இணைந்து சுவிஸ் – சிவராம் ஞாபகார்த்த மன்றம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த கால யுத்தத்தின்போது வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் பாதிப்புக்கு இலக்கான 10 ஊடகவியலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு முதற் கட்டமாக தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் வை.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நகழ்வில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.பாரதி, உபதலைவர் அ. நிக்சன், ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ஆகியோர் இந்நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். அதேவேளையில், ஒன்றியத்தின் வடபகுதி உறுப்பினர்களான என். பரமேஸ்வரன், ஆர். தயாபரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வின் ஆரம்பத்தில் அறிமுக உரையை நிகழ்த்திய அ. நிக்சன், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் முதற் கட்டமாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ரஜிவர்மனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்கப்பட்டதாகவும் அதன் அடுத்த கட்டமாகவே இப்போது பத்து ஊடகவியலாளர்கள் அல்லது அவர்களுடைய குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். தற்போiது வழங்கப்படும் உதவித்தொகை அடைய இது வெறுமனே ஒரு அடையாளமாகவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், குடும்பத் தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து உரையாற்றிய ஆர்.பாரதி, யுத்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுவிட்சர்லாந்திலுள்ள சிவராம் ஞாபகர்த்த மன்றம் முன்வந்திருப்பதையிட்டுத் தெரிவித்ததுடன், காலத்தின் தேவையை உணர்ந்து அவர்கள் மேற்கொண்டுள்ள பணியைப் பாராட்டினார். தற்போது வழங்கப்படும் உதவி, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் துன்பங்களில் நாமும் பங்குகொள்கின்றோம் என்பதற்கான ஒரு அடையாளமாக மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்தக் குடுப்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கண்டு அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய ஒரு நிலையை எற்படுத்தும் வகையில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் அமைந்திருக்கும் எனவும், அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் யுத்த காலத்தில் தமது சொத்துக்களையும் இழந்து, காயமடைந்தவர்கள். அதனைவிட குடும்பத்தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பத்தினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த விபரங்களை உள்ளடக்கிய பட்டியல் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. மன்னார், கிளிநொச்சி போன்ற பகுதிகளிலுள்ள ஊடகவியலர்களின் குடும்பத்தினர் சிலர் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கான உதவிகள் வெள்ளி ஈழநாதம் ஆசிரியர் ராதேயன் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஊடகவியலாளராகப் பணியாற்றிய தனது கணவரை இழந்த பெண் ஒருவர் வவுனியா மெனிக் பாம் முகாமிலிருந்து இந்த நிகழ்வில் பங்குகொள்வதற்காக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. அதன்போது ஊடகவியலாளர்களின் குடுப்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குடும்பத் தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதையிட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாகவும், சுயதொழில்வாய்ப்புக்களுக்கான வாய்ப்புக்களைக் கண்டறிவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது

No comments: