Sunday 24 April 2011

சிவராம் நினைவுப்பேருரை-1 (24.04.2011)

சுவிஸ் சிவராம் ஞாபகார்த்த மன்றம் ஏற்பாடு செய்த
பிரபல ஊடகவியலாளர் டி.சிவராம் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவராம் நினைவுப்பேருரை-1 24ஆம் திகதி (24.04.2011) ஞாயிறு பிற்பகல் 3மணிக்கு சுவிட்சர்லாந்து பேர்ண் Bernstrasse -171, 3052 Zollikofen (BE) எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில்ஊடகவியலாளர் சண். தவராஜா தலைமையில் நடைபெற்றது.


சிவராம் மறைவின் பின் 6 வருடங்கள், சிறிலங்காவில் ஊடக சுதந்திரமும் சட்ட அமுலாக்கமும் என்ற தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுனந்த தேஷப்பிரிய ஆற்றிய உரை.
2011 IN ENGLISH
டி. சிவராம் அவர்களின் ஆறாவது நினைவுதினத்துக்கு இன்னமும் 4 தினங்கள் உள்ளன. அவர் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 இல் கொழும்பில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.

நண்பர்கள் மத்தியில் ‘சிவா’ எனவும் ஊடகப்பரப்பில் ‘தராக்கி’ எனவும் அவர் அறியப்பட்டார் என எம்மில் அநேகர் அறிவோம். இலங்கை ஊடகத்துறையின் தலைசிறந்த ஆய்வாளர்களுள் ஒருவரான அவர் ஓர் பிறவிப் புத்திசாலியுமாவார். அரசியல் மற்றும் போர் தொடர்பிலான அவரது அறிவு பொறாமை கொள்ளத்தக்கது.

சிவராமின் ஊடகப்பணியைப் பற்றி விவரிக்க நான் இங்கே வரவில்லை. இந்த நினைவுதின நிகழ்வின் தலைப்பும் அதுவல்ல.  ஆனால் சிவாவின் நினைவைச் சில நிமிடங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை ஊடகத்துறையில் சிவராம் பதித்த முத்திரையே அவரது உயிர் பறி போகக் காரணமானது. அது தொடர்ந்து வரும் காலங்களிலும் நீடிக்கும். தமிழ் மக்களின்  தன்னாட்சிக்கான போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக அவரின் எழுத்துக்கள்  நிலைத்து நிற்கும். ‘வரலாற்றின் முதல் வரைவை ஊடகவியாலாளர்களே எழுதுகின்றார்கள்’ எனும் பிரபலமான கூற்றுக்கு மிகப் பொருத்தமான சான்றாக சிவராமின் எழுத்துக்கள் உள்ளன.

அவர் மறைந்து ஒருசில நாட்களில், எனது மனதைத் தேற்றும் வகையில் சிவாவின் மரணம் தொடர்பாக ஒரு சில விடயங்களை எழுதினேன். அந்த இருண்ட இரவில் அவரது உயிரைக் காப்பதற்கான பகீரதப் பிரயத்தனத்தில் ஊடக நண்பர்களான நாம் எம்மால் முடிந்தளவு ஈடுபட்டிருந்த வேளையில் எமது கையாலாகாத் தனத்தை உணர்ந்தோம். அவர் தனது தோழர்கள் முன்னிலையிலேயே கடத்தப்பட்டார். கொலையாளிகள் தாம் அடையாளங் காணப்படுவோம், கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் சிறிதும் அற்றவர்களாகவே இந்த ஈனச் செயலில் ஈடுபட்டார்கள்.


அவரது கடத்தலுடன் ஆரம்பமான ஊடக அடக்குமுறை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அவரது கைது தொடர்பான தகவல் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு உடனடியாகவே கிடைத்தது. சுதந்திர ஊடக இயக்கத்தின் தொடர்பாளராக அப்போது பணியாற்றியவரும், சிவராமின் நெருங்கிய நண்பரும், நிழற்பட ஊடகருமான புத்திக வீரசிங்க உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கி தொலைபேசியூடாக எமது வலைப்பின்னலை உசார்படுத்தினார்.
அவரது மரணத்தின் ஒரு வாரத்தின் பின் 6 மே 2005 இல் நான் எழுதிய குறிப்பின் சில பகுதிகளை வாசிக்க விரும்புகிறேன்.

“யார் அவரைக் கடத்தினார்களோ அவர்களுக்கு காலையில் அதிகமான அழுத்தத்தைத் தருவதற்கூடாக அவரது உயிரைக் காப்பதற்கான வாய்ப்புக் கிட்டலாம் என நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.

அதிகாலை வரை மேலதிக தகவல்களைக் கோரி தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணமிருந்தன. நித்திரையற்ற இரவு கழிந்து கொண்டிருக்கையில் காலை 7:00 மணியளவில் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் பணியாற்றும் ஊடக நண்பியொருவர் எனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தொடரும் அரசியல் கொலைகளைத் தடுப்பதில் எமது இயலாமை பற்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். தொடர்ந்து சிவா பற்றியும் பேசினார்.

30 நிமிடங்களின் பின் மீண்டும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட அவர் நாங்கள் கேட்க விரும்பியிராத ஒரு செய்தியைக் கூறினார். காவல்துறைச் செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர் ஒருவர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தலங்கம காவல்துறைப் பிரிவில் சடலம் போன்ற ஒன்றைக் கண்டுள்ளமை பற்றிப் பேசுவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் தொலைபேசியைக் கீழே வைப்பதைக் கண்டுள்ளார். அவரை தலங்கம காவல்துறையுடன் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்துமாறு கேட்ட அவர், செய்தியைத் தெரிவிக்கையில் ‘அது சிவராமாக இருக்காது என நினைக்கிறேன்’ என்றார்.

ஒரு சில நிமிடங்களில் புத்திக சம்பவ இடத்தைச் சென்றடைந்தார். பின்னர் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அவரைச் சுட்டுக் கொன்று விட்டார்கள். ‘சிவராம் கொலையுண்ட நிலையில் கண்டு பிடிக்கப் பட்டார்’ என்ற எமது இரண்டாவது செய்தி அடுத்த நாள் ஏப்ரல் 29 ஆம் திகதி முற்பகல் 8.27 க்கு வெளியிடப்பட்டது.

எதிர்ப்புக் குரல்களின் இரத்தத்தைக் குடிப்பதற்காகக் கரிய சக்திகள் வெளியே உலாவுவதை அவரது கொலை உணர்த்துகிறது.
எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் வாழும் மோசமான காலத்தை அவரது மரணம் நினைவூட்டுகிறது.”

இன்று, அவரது மரணத்தின் பின்னான ஆறு வருடங்களில், நாங்கள் சிவாவை மட்டுமன்றி தொடர்ந்து வந்த வருடங்களில் கொல்லப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களையும் ஊடகப் பணியாளர்களையும் கூட நினைவு கூருகின்றோம். அவரது மரணம் உண்மையிலேயே அந்தக் கரிய சக்திகள் அன்றைய நாளில் தொடர்ந்து வந்த பல வருடங்களுக்குமாக வெற்றி பெற்று விட்டன என்பதை உணர்த்தி நிற்கின்றது. தொடர்ந்து வந்த வருடங்களில் இலங்கையில் ஆகக் குறைந்தது 35 வரையான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஊடகவியலாளர்கள் கடத்தப் பட்டுள்ளனர். ஐந்து ஊடக நிறுவனங்கள் எரியூட்டப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர், தாக்கப் பட்டுள்ளனர், அச்சுறுத்தப் பட்டுள்ளனர், எச்சரிக்கப் பட்டுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக யுத்தம் எதுவும் இல்லை.

வாக்குறுதியளிக்கப்பட்ட விடுதலையும் சுதந்திரமும் தமிழ் சிங்கள மக்களைச் சென்றடைந்து விட்டனவா? மனித உரிமைகள் மதிக்கப்படுவதுடன் ஜனநாயக ஆட்சியும் நடைபெறுகின்றதா?

வெளியாள் ஒருவருக்கு நாட்டில் அனைத்தும் சுமுகமாக நடைபெறுவதைப் போன்று தோன்றலாம். தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம் பொருளாதரச் சுட்டிகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. பெருமளவு உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். அரசியல் எதிர்ப்பு பிளவுபட்டிருக்கின்றது. சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ செல்வாக்குப் பெற்றவர் போன்று தென்படுகின்றார்.

ஆனால், இந்தப் பிரதிமை உண்மையானால் விஞ்ஞானத்துக்கோ சமூக பொருளாதார ஆய்வுக்கோ தேவை இருக்காது என நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாட்டின் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட பிரதிமையானது அந்நாட்டின் சமூக – பொருளாதார யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதில்லை என்பதை வட ஆபிரிக்கப் புரட்சிகள் உணர்த்தி நிற்கின்றன.
கடந்த 6 வருடங்களில் ஊடகவியலாளருக்கோ ஊடக நிறுவனத்துக்கோ எதிராக நடைபெற்ற எந்தவொரு சம்பவமும் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இலங்கையில் நிலவும் தண்டனையில் இருந்து பாதுகாப்பு நல்கும் கலாசாரமானது ஒரு இரும்புத் திரையாக கொலையாளிகளுக்கும் சட்டத்தை மீறுவோருக்கும் பாதுகாப்பை வழங்கி வருகின்றது.

ஊடகங்களைப் பொறுத்தவரை சுயதணிக்கை எழுதப்படாத சட்டமாக உள்ளது. குடிமக்களுக்கு பல்வேறு அபிப்பிராயங்களை வழங்கக்கூடிய எந்தவொரு பகிரங்க கலந்துரையாடலும் நடைபெறுவதில்லை. ஆளுங் கட்சியால் அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் பிரமாண்டமான அரசஊடகத்துறை நாட்டின் மிகப்பெரும் பக்கச்சார்பான ஊடகமாக விளங்குகிறது. இந்நிலையில் சக குடிமக்களின் வாழ்க்கை தொடர்பில் ஆதாரங்களுடன் கூடிய தகவல்களைக் கொண்ட தீர்ப்பை வழங்கமுடியாத நிலைக்கு குடிமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இங்கேதான் ஜனநாயகத்தின் வங்குரோத்து ஆரம்பமாகிறது.

குடிமக்கள் சமூகமானது மண்டியிடும் நிலைக்கு அல்லது மௌனிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது.  தொழிற் சங்கங்கள், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆகியவை அச்சுறுத்தப்பட்டுள்ளன, தாக்கப்பட்டுள்ளன, வெளியேற்றப்பட்டுள்ளன, மக்களின் உரிமைகளை விரிவுபடுத்தி அவற்றைப் பேணும் அவற்றின் ஆற்றல் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளது.

‘நீங்கள் எங்களுடன் இல்லையாயின் பயங்கரவாதிகளுடன் இருக்கின்றீர்கள்’ என்ற பிரபல்யமற்ற கொள்கையையே இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. இதன் விளக்கம் இலங்கை அரசுடன் முரண்படும் ஒருவர் தேசத் துரோகியாகக் கணிக்கப் படுவார் என்பதாகும். யுத்த செயன்முறையில் துரோகிகளின் தலைவிதி ஒன்றே – திகதியிடப்படாத மரண தண்டனை.
கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டத்தின் சில பகுதிகள் ஆகியவை இன்னமும் அமுலில் உள்ளன. இந்தப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினருக்கும் ஆயதப் படையினருக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பொதுவான நீதிக்கு முரணாகவும் சட்டவாட்சிக்கு அப்பாற்பட்டனவாகவும் உள்ளன.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்களாக இராணுவ தளபதிகளே உள்ளனர். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் குடிமக்கள் நிர்வாகம் இராணுவத்தின் கீழேயே உள்ளது. இப்பிரதேசங்களில் இராணுவப் பிரசன்னம் வெளியே தெரியக் கூடியதாகவும் மேலாண்மை மிக்கதாகவும் உள்ளது. வன்னியில் வாழும் மக்கள் இராணுவத்தினருக்குத் தெரியாமல் ஒரு சிறிய குடும்ப நிகழ்வைக் கூட ஏற்பாடு செய்ய முடியாது. அண்மைய அறிக்கைகளின் பிரகாரம் அவர்கள் ஒரு பெட்டிக் கடையைத் திறப்பதற்குக்கூட இராணுவத்திற்கு அறியத் தந்து அனுமதியைப் பெறவேண்டி உள்ளது. வன்னியின் சில பகுதிகளில் மக்கள் கூடுவது பற்றித் தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என குடிமக்கள் குழுக்களுக்கு உத்தியோகவூர்வமாக இராணுவம் அறிவித்துள்ளது. உண்மையில் மீளக் குடியமர்த்தப்பட்ட யுத்த அகதிகள் மூன்று நபருக்கு ஒரு படையினர் என்ற விகிதத்தில் உள்ள இராணுவ நிர்வாகத்தின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர்.   5000 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். 30,000 க்கும் அதிகமான அகதிகள் முகாம்களில் மோசமான சூழ்நிலைகளில் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.
சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்பகுதியில் காவல்துறையின் அச்சுறுத்தல் அரச ஆதரவுக் குழுக்களின் தாக்குதல்கள் என்பவற்றுக்கு மத்தியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், சுவரொட்டி இயக்கங்கள் என்பவை இடம் பெற்று வருகின்றன. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் நிலவும் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தின் விளைவாக நிலவும் அச்சநிலைமை காரணமாக அத்தகைய குடிசார் செயற்பாடுகள் அங்கே நடைபெறுவதில்லை.
இலங்கையின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு நடைமுறையில் சட்டவாட்சி மற்றும் ஜனநாயகம் என்பவை நேர்மையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய சுய ஆட்சியை வழங்கும் அரசியல் முறைமையே. யுத்தத்தின் பின்னான இலங்கை அரசு இந்த விடயத்தைக்; கவனிக்க முற்றாகத் தவறிவிட்டது. சர்வ கட்சி மாநாட்டில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவுகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு மரணித்த கடிதமாக உள்ளது. பதிலாக தமிழ் மக்கள் அளவுக்கு மீறிய இராணுவ மயமாக்கலை அனுபவித்து வருகின்றனர்.

இலங்கையில் சிங்களப் பெரும்பான்மையினருக்கு யுத்த வெற்றியின் பெருமை பற்றி இரவு பகலாகப் போதிக்கப் படுகின்றது. யுத்த வெற்றியின் விளைவு பற்றிக் கேள்வி எழுப்புவோரின் வாய்கள் பலவந்தமாக அடைக்கப் படுகின்றன. எதிர்ப்புக்கள் தென்படுமிடத்து அவை நசுக்கப்படுகின்றன, அச்சுறுத்தப் படுகின்றன. ‘கரற்றும் தடியும்’ கொள்கை சிறந்த முறையில் செயற்படுகின்றது.

முரண்பாட்டு உணர்திறன் ஊடகச் சேவையில் ஐந்து ‘று’ க்களுக்கும் அப்பால் செல்லுமாறு நாம் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கின்றோம். இந்த ஐந்து ‘று’ க்களும் ‘யாரைப் பற்றியது?’ ‘என்ன நடந்தது?’ ‘எங்கே நடைபெற்றது?’ ‘எப்போது நடைபெற்றது?’ ‘ஏன் நடந்தது?’ என நீங்கள் அறிவீர்கள்.
ஐந்து ‘று’ களுக்கும் அப்பால்; ‘எது கூறப்படவில்லை’ ‘யார் செய்தியில் உள்ளடக்கப்படவில்லை?’ ‘ஏன்  அது நடைபெறவில்லை?’ போன்ற கேள்விகளை செய்தியின் பல பங்கங்களையும் அறிவதற்காக எழுப்ப வேண்டும். இன்றைய இலங்கையைப் புரிந்து கொள்வதற்கு இதே வினாக்களையே நாமும் எழுப்ப வேண்டும்.

நாட்டுச் சூழல் தொடர்பாக நன்கு அறிந்து வைத்துள்ள சிங்கள ஊடகவியலாளரும் அறிவுஜீவியுமான நண்பர் ஒருவருடன் அண்மையில் ‘ளுமலிந’ ஊடாகக் கதைத்தேன். அவர், “மச்சான் (சிவா இவ்வாறுதான் எங்களில் அநேகரை அழைப்பார்) நீ இதை நம்பமாட்டாய் ஆனால் இது நாட்டில் இராணுவக் கட்டுப்பாடு எவ்வளவு து}ரம் உள்ளது என்பதைக் காட்டுகின்றது” என்றார். ஒரு மிகப் பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனம் மீள்கட்டுமானம் தொடர்பான ஒரு திட்ட முன்மொழிவை தொண்டு நிறுவனச் செயலகத்தின் அனுமதிக்காக அனுப்பியிருந்தது. தொண்டு நிறுவனச் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே உள்ளது. எனவே, திட்ட முன்மொழிவு குறித்த பிரதேசத்தின் பிரிகேடியரின் பார்வைக்குச் சென்றது. தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது பிரிகேடியரினால் கேட்கப்பட்ட கேள்வி திட்டத்தில் அதிக தமிழ்க் கிராமங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளமைக்கான காரணம் எதுவென்பதே. அத்துடன் திட்டத்தில் சமன்பாடு இல்லையெனவும் தெரிவிக்கப் பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்கட்டுமானத்தை இலக்காகக் கொண்டதே திட்டம் என தொண்டு நிறுவனத்தின் சார்பில் விளக்கம்தர முயற்சிக்கப்பட்ட போதிலும் ஈற்றில் தமிழ்ப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த பெரும்பாலான செயற்பாடுகளைக் கைவிடவேண்டியேற்பட்டது.

இச் செய்தி எங்கேயும் வெளிவரவில்லை. தரமான ஊடகத்துறையைப் பொறுத்தவரை இது நம்பிக்கைக்குரிய செய்தியல்ல. இச்செய்தியை நிரூபிக்க வழியுண்டா? குறித்த தொண்டு நிறுவனமோ பிரிகேடியரோ ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிப்பரா? இல்லை. இலங்கையின் யுத்தம் அமைதியான யுத்தமெனப் பெயரிடப்பட்ட ஒன்று. இன்று உரிமை மீறல்கள் தொடர்பில் மிகக் கடினமான மௌனத்தை யுத்தத்தின் பின்னான இலங்கை அனுபவித்து வருகின்றது.

இலங்கையில் இன்று நிலவும் மாற்றுக் கருத்துக்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எடுத்துக்காட்டாக ஒரு எதிர்வுகூறலைக் கூற விரும்புகிறேன். சிவராமின் நினைவாக, ஊடகச் சுதந்திரம் மற்றும் சட்ட அமுலாக்கம் பற்றிப் பேசும் நான் தேசத்துரோகியாகச் சித்தரிக்கப்படக் கூடும்.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் மாற்றுக் கருத்தாளர்களை அழித்தொழிக்கப் படவேண்டிய துரோகிகள் எனப் பட்டஞ் சூட்டும் பண்பாடு இலங்கையில் இன்னமும் பலமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வருகின்றது.  இலங்கையின் பிரபலமான இரு அரசியல்வாதிகள் நாட்டுக்கு வெளியே அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தினால் உடல் ரீதியான தாக்குதலுக்கு இலக்காகி அதிக காலம் செல்லவில்லை. கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன விமான நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்டார். வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்தனா நாடாளுமன்றத்தில் வைத்துத் தாக்கப்பட்டார். அரச மற்றும் அரச ஆதரவு ஊடகங்களின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக அவர்கள் இருவரும் மிகுந்த அழுத்தத்தை அனுபவித்து வருகின்றனர்.

யாராவது கைது செய்யப்பட்டார்களா? இல்லை. எவரும் தண்டிக்கப்படவும் இல்லை. துரோகமிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நீதியால் பாடம் புகட்டப் படுவர் என இரண்டு  அமைச்சர்கள் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்கள்.

அண்மையில் இணையசெய்திச்சேவை அலுவலகக் கதவில் ஒட்டப்பட்டிருந்த பிரசுரமொன்று பின்வருமாறு சொல்கிறது. “அந்நிய சக்திகள் மற்றும் புலி முகவர்களான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளுக்கு எதிரான புனிதப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.  லங்கா ஈ நியூஸ் சிங்களப் புலிகள் ஆயிரக் கணக்கான தேசபக்தர்களின் உயிர்களை விலையாகச் செலுத்திப் பெறப்பட்ட தாய்நாட்டின் மகத்தான வெற்றியை காட்டிக் கொடுப்பதன் ஊடாக தேசபக்தர்களிடையே ஆத்திரத்தையும் வெறுப்பையும் உருவாக்கி வருகின்றனர்.”

கைது செய்யப்பட்ட இந்த இணையச் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சார்பாக ஆஜராகிய இரு வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப் பட்டார்கள். மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவது இதுவே முதன் முறையல்ல. உச்சக் கட்டப் போர் நடைபெற்றபோது வேறு யாருமன்றி பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளமே முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணிகளைத் துரோகிகள் எனப் பெயர் சூட்டியது. அவர்களுள் ஒருவர் இன்று சட்டத்தை இயற்றுபவராக உள்ளார். அவ்வாறு குற்றஞ் சாட்டப்பட்ட சட்டத்தரணியான எம். ஏ. சுமந்திரன் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

சுதந்திரம் அல்லது ஜனநாயகத்துக்கான காட்டிகள் சகல நாடுகளுக்கும் பொதுவானவை. கருத்துச் சுதந்திரம், குழுவாகச் செயற்படும் சுதந்திரம், இடத்துக்கு இடம் செல்லும் சுதந்திரம், சகட்டு மேனிக்குக் கைது செய்யப்படல் தடுத்து வைக்கப்படல் என்பவற்றில் இருந்து விலக்கு, சித்திரவதையில் இருந்து விலக்கு, சுதந்திரமான நீதியான தேர்தல்கள், சுயாதீனமான நீதித்துறை, சட்ட அமுலாக்கம் எனப் பல உண்டு. சுதந்திரம் என்பது பிறப்புரிமை. அவை சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. சுதந்திரத்தின் காட்டிகள் இந்த உரிமைகளே. ஒரு நாடு இந்த உரிமைகளை எவ்வளவு து}ரம் கடைப்பிடிக்கின்றதே அமுல் படுத்துகின்றதோ அவையே மக்கள் சுதந்திரத்தின் காட்டியாகும்.
சிறுவர் உரிமைகள், சமூக கலாசார உரிமைகள், பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. பட்டயத்துக்கான மூன்று ஐ.நா. நிபுணர் குழுக்கள் கடந்த வருடத்தில் இலங்கையில் அமர்வுகளை நடாத்தி தமது அவதானங்களையும் பரிந்துரைகளையும் தெரிவித்து அவற்றை சகல மொழிகளிலும் அச்சிட்டு மக்களுக்கு வழங்குமாறு இலங்கை அரசைக் கோரியிருந்தது. ஆனால் இன்றுவரை அவற்றில் ஒன்று கூட வெளிப்படுத்தப்படவில்லை.
ஜனநாயக ஆட்சியின் அடிப்படை அம்சம் நீதி, நிர்வாக மற்றும் நிறைவேற்றுத் துறைகளின் சுயாதீனமே.

இலங்கையில் இன்று அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதி எனும் துறையின் கீழ் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. ஜனாதிபதியின் வகைகூறல் தொடர்பாக இருந்துவந்த அம்சங்களும் தற்போது அகற்றப்பட்டு விட்டன. 2010 ஆகஸ்டில் 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகஞ் செய்த இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றை ஜனாதிபதியின் அதிகாரங்களின் கீழ்க் கொண்டு வந்தது.

அதேவேளை ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என இருந்த தடை நீக்கப்பட்டு ஒரு சர்வாதிகாரி வாழ்நாள் முழுதும் நாட்டை ஆளக்கூடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிகாரங்கள் யாவற்றுக்கும் மேலாக சட்டத்திற்கு வகைகூறும் விலக்கு ஜனாதிபதிக்கு அளிக்கப் பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இலங்கையை அரசியலமைப்பில் கூறப்படுவது போன்று ஒரு ஜனநாயக சோசலிச நாடாக அல்லாமல் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகார நாடாக மாற்றியுள்ளன.
யுத்தத்தின் பின்னான இலங்கை பற்றி நியூயோர்க்கின் பிரபல சஞ்சிகை ஒன்று பின்வருமாறு எழுதியது, “அவரது சகோதரர்களுள் ஒருவரான கோட்டாபய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். அடுத்தவரான பசில் நிர்வாகத்துறைத் தலைவராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் உள்ளார். மூன்றாவது சகோதரரான சாமல் நாடாளுமன்ற சபாநாயகராக உள்ளார். அவரது 24 வயது மகன் நாமல் அண்மையில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  மேலும் நாற்பது வரையான சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்கள், மருமக்கள், பெறாமக்கள் என்போர் வேறுபல முக்கிய அரச பதவிகளில் உள்ளனர்.” இதே கருத்து அமெரிக்காவின் 2010 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளது.
நாட்டின் உள்ளுராட்சிக் கட்டமைப்பு முழுவதையுமே பாதிக்கக் கூடிய ஒரு பாரதூரமான செய்தி அண்மையில் வந்துள்ளது.

கொழும்பு, கோட்டை, தெகிவளை - மவுன்ட் லவேனியா மாநகர சபைகளையும் கொலன்னாவ நகரசபையையும் கொட்டியாவத்தை - முல்லேரியா பிரதேச சபையையும் உள்ளடக்கியதாக கொழும்பு பெருநகரக் கூட்டுத்தாபனம் ஒன்றை இலங்கை அரசு உருவாக்கப் போகின்றது. இந்த மாபெரும் கொழும்பு பெருநகரக் கூட்டுத்தாபனம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவின்கீழ் வரப் போகின்றது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை ஓரங் கட்டிவிட்டு இப் பிரதேசத்தின் அபிவிருத்தி அனைத்தும் இந்த கொழும்பு பெருநகரக் கூட்டுத்தாபனத்தினாலேயே மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அரசியல் அதிகாரத்தினால் ‘ஜனசபா’ எனும் அமைப்பு உருவாக்கப்பட இருக்கின்றது. இந்த அமைப்புக்களும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களைப் ஓரங் கட்டி விட்டு மத்திய அரசின் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்வதுடன் கட்டுப்படுத்தவும் போகின்றன. அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்கீழ் வரவிருக்கும் இந்த அலகிற்காக அரசியல்சார்பு அடிப்படையில் 5000 பட்டதாரிகள் பணிக்கமர்த்தப்பட உள்ளனர். இந்த ஜனசபாக்கள் பன்முக வரவுசெலவுத் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல அதிகாரங்களைக் கொண்டவையாக விளங்கும்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பது எந்தவொரு ஜனநாயக சமூகத்திலும் பிரதானமானது. சுயாதீன மனித உரிமைகள் ஆணைக்குழு குடிமக்களின் மனித உரிமைகளைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் இன்று இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவானது தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் சர்வதேச இணைப்புக் குழுவினால் “சுயாதீனம் அற்றது” என 2007 இலும் பின்னர் 2009 இலும் தரங் குறைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலம் வரை இந்த ஆணைக்குழுவிற்கு ஆணையாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான 17 ஆவது திருத்தச் சட்டம் குப்பைக் கூடையில் தூங்குகிறது.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதி புதிய ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளார். ‘வெள்ளிக்கிழமை மன்றம்’ எனும் பெயரிலான பிரமுகர் குழுவொன்று இந்த நியமனங்கள் பற்றி பின்வருமாறு கூறுகிறது.

“முதலாவதாக, நியமனம் செய்யப்பட்டோர் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை.

எங்களுக்குத் தெரிந்தவரை நியமிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் முன்னாள் காவல்துறை மாஅதிபர், மற்றொருவர் அரசாங்க ஆய்வாளரும் மருத்துவரும் ஆவார். இவர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எத்தகைய மனித உரிமைகள் அனுபவத்தையும் அங்கீகாரத்தையும் கொண்டு வர முடியும் எனக் கேட்க விரும்புகிறோம். சுருக்கமாகக் கூறின் தெரிவுக்காகக் கடைப்பிடிக்கப்பட்ட வரையறை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

காவல்துறையில் அல்லது ஆயுதப் படையில் பணியாற்றியவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாகப் பணியாற்றுவதன் பொருத்தப்பாடு தொடர்பில் நாங்கள் தீவிரமாகக் கேள்வி எழுப்புகிறோம். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கும் பெரும்பாலான முறைப்பாடுகள் காவல்துறை அல்லது ஆயுதப் படையினருக்கு எதிரானவையே. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் இரகசியம் பேணல்; பழிவாங்கல்கள் மிகவும் பிரதானமாக நடுநிலைத்தன்மை குறைபாடு என்பவை காரணமாக ஆணைக்குழு முன்னிலையில் வருவதற்கு தயங்கலாம். அனைத்துக்கும் மேலாக, நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமன்றி நீதி நிலைநாட்டப்படுவது வெளியே தெரிய வேண்டியதும் அவசியம்.”
மனித உரிமைகள் ஆணைக்குழு நியமனங்கள் இடம்பெற்ற விதமானது இலங்கையில் மனித உரிமைகளும் சட்ட அமுலாக்கமும் எவ்வாறு உள்ளன என்பதற்குத் தெளிவான சான்றாக உள்ளன. மறுபுறத்தே, மனித உரிமைகள் ஆணைக்குழு நியமனம் தொடர்பில் மனித உரிமைகளுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மௌனமாக இருப்பது அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தலின் வீதத்தைக் காட்டுகின்றது.

 ஒரு குடிமகனின் அடிப்படை மனித உரிமைகள் சகல சூழ்நிலைகளிலும் பெறுமதி மிக்கவை. அடிப்படை மனித உரிமைகள் பேணப்படாதவிடத்து மக்கள் அரச அதிகாரத்திற்கு இலக்காகும் அபாயம் ஏற்படுகின்றது. ஆனால் இன்று இலங்கையில் காவலில் இருந்து விடுவிக்கப் படுவதற்காக குடிமக்கள்; தமது அடிப்படை உரிமைகளை விலைபேச வேண்டியுள்ளது.

ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரியாகச் சித்தரிக்கும் சுவரொட்டியை அச்சிட்டதற்காக அச்சக உரிமையாளர் ஒருவர் 2010 செப்டெம்பர் 8 இல் கைது செய்யப்பட்டார். அவர் அந்தச் சுவரொட்டியை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்காக அச்சிட்டிருந்தார். செப்டெம்பர் 8 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் அச்சக உரிமையாளரின் மனைவியையும் அவரது இரு தம்பிகளையும் காவல்துறை கைது செய்தது. சகலரையும் பிணையில் விடுதலை செய்த காவல்துறை அச்சக உரிமையாளர் ஜயம்பதி புளத்சிங்கல மீதும் அச்சக ஊழியர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்தது.

பதிலுக்கு காவல்துறையினரின் சட்டவிரோத கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அச்சக உரிமையாளர் ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்து வழக்கைத் தொடர்வதற்கான அனுமதியையும் பெற்றுக் கொண்டார். அவரது கைது சட்டவிரோதமானது ஆகையால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்து நடத்த போதுமான காரணங்கள் இருந்தன. ஆனாலும் இறுதியில்  காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கில் இருந்து விடுபடுவதற்காக அவர் தனது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை வாபஸ் பெறவேண்டி ஏற்பட்டது.

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இதைப்போன்ற ஒரு விடயம் நடக்கக் கூடும் எனக் கற்பனை கூடச் செய்ய முடியாது. பரிகார நடவடிக்கைகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்யும் வழக்கம் அப்போது பலமுள்ளதாக இருந்தது. தற்போதைய நிலையில் காவல்துறையினர்  இந்த வழக்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும். குற்றஞ்சாட்டப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம் அவரது நண்பர்கள் முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு ஆலோசனை கூறலாம். சட்டத்தின் ஆட்சி அன்றி காவல்துறையின் விருப்பமே இதுவிடயத்தில் வெளிப்படுகின்றது.
சட்டவிரோத கைது மற்றும் சித்திரவதை காரணமாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்தவர்கள் தமது விடுதலைக்கு மாற்றீடாக தாம் தாக்கல் செய்த மீறல் வழக்குகளை மீளப் பெற்றுக் கொள்வது அண்மைக் காலத்தில் இதுவே முதன்முறையல்ல. ஊடகவியலாளரும் அச்சக உரிமையாளருமான வி. ஜசிகரன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சட்டவிரோதமாகக் கைது செய்யயப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டார். இறுதியில் அவரும் கூட தான் தொடர்ந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தனது விடுதலைக்காக வாபஸ் வெறவேண்டி ஏற்பட்டது.

சுடரொளி மற்றும் உதயன் ஆகிய இரு பத்திரிகைகளின் ஆசிரியரான என். வித்தியாதரன் சீருடையணிந்த காவல்துறையினரால் 2010 யனவரியில் கடத்தப்பட்டுச் சித்தரவதை செய்யப்பட்டார். ஆனால் காவல்துறையினாரால் அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை ஆகையால் அவரைக் காவலில் வைப்பதற்கான சட்ட நியாயம் இல்லை. அதேவேளை வித்தியாதரன் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை காவல்துறையினருக்கு எதிராகத் தாக்கல் செய்தார். அவரது மனு மிகச் சிறப்பாகத் தயாரிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவுக்கும் கூட விதி காத்துக் கொண்டிருந்தது. பத்திரிகையாசிரியர் வித்தியாதரன் தனது விடுதலைக்காக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை வாயஸ்பெற வேண்டி இருந்தது.

அநீதியான முறையில் சிறைச்சாலையில் வாடுவதிலிருந்து விடுதலை பெறுவதற்காக தமது அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை இலங்கை மக்கள் வாபஸ் பெறும் சந்தர்ப்பங்கள் இவை மாத்திரமல்ல. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களம் இதுபோன்ற வழக்குகளில் மறுதலையான பாத்திரத்தை வகித்து வருகின்றது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் ஆரம்பமான வேளை ஒரு ஜனநாயக நாட்டின் சுதந்திர அலகான சட்டமா அதிபர் திணைக்களம் நிறைவேற்று ஜனாதிபதியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. அண்மையில் ஆளுங் கட்சி அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தன கத்திரிஆராச்சி மீது கொலைக் குற்றச்சாட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்; சட்டமா அதிபர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள கொழும்பு மாவட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா மீதான பாலியல் வல்லுறவுக் குற்றச் சாட்டு வழக்கையும் அவர் வாபஸ் பெற்றுள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதியும் முன்னாள் தலைமை நீதிபதியும் இந்த நடைமுறையை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை வழக்குகளை வாபஸ் பெறும் உரிமை சட்டமா அதிபருக்கு இல்லை. இதனைத் திருத்துவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? குற்றஞ் சாட்டப்பட்டுள்ளவரின் அரசியல்பலம் காரணமாக எதுவுமே நடைபெறாது.

ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தண்டனையெதுவுமின்றித் தப்பிச் செல்லும் நிலையிருக்கையில் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் 14 தொடக்கம் 18 வருடங்கள் உள்ளனர். நாட்டில் இருவகையான சட்டங்கள் உள்ளமை தெளிவாகின்றது.

2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதான வேட்பாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா 40 வீதமான வாக்குகளை அதாவது 4.2 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடைபெற்று ஒருசில வாரங்களில் அவர் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தெளிவான அரசியல் நோக்கம் கொண்டது.

ஆனால் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை சட்டம் வேறு விதமாகச் செயற்படுகின்றது. தன்னுடைய சொல்லைக் கேட்கவில்லை என்பதற்காக அரசாங்க ஊழியர் ஒருவரை ஊடகவியலாளர்களின் முன்னிலையில் மரத்தோடு கட்டிவைத்த ஒரு ஆளுங்கட்சி அரசியல்வாதி மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுவொரு தண்டனையல்ல மாறாக ஒரு நாடகமே எனும் விளக்கத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

ஐ.நா.வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது கொழும்பிலுள்ள ஐ.நா. பிரதான அலுவலகத்தைக் காக்க முனைந்த உதவிக் காவல்துறை மாஅதிபரை மற்றொரு அமைச்சர் பகிரங்கமாகவே ஏசிக் கலைத்தார். அதே அமைச்சர் தொலைக்காட்சிப் பேட்டியொன்றின் போது ஐ.நா. விசேட து}துக்குழுவில் உள்ள மூவரும் புலிகளிடம் கையூட்டுப் பெற்றவர்கள் எனவும் அந்த நிபுணர்கள் மூவரும் மூடை து}க்குபவர்கள் எனவும் சாடியிருந்தார்.
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் முகமாக இரட்டைக் கொலைகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அரசாங்க அமைச்சரொருவரின் மனைவி 2009 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

மறுபுறம், நாடாளுமன்றத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தும் அரசாங்கம் தடுத்து வைத்துள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் பெயர்ப் பட்டியலைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் வன்னி மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்;. சிறிதரன் அல் ஜசீரா ஊடகக் குழுவினருடன் உரையாடுவதிலிருந்து இராணுவ அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்தில் அவரது வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப் பட்டுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் சம்மேளனம் அனுப்பி வைத்துள்ள மகஜரில் கிட்டிய கடந்த காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 300 பேர் இடைநிறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த டசின் கணக்கான அரசியற் செயற்பாட்டாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

2001 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஊர்வலம் அரசியல் குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்கானது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் கூட சேதப்படுத்தப்பட்டன. காவல்துறையின் கண்முன்னேயே அத்தனையும் நடைபெற்றபோதிலும் அவற்றைத் தடுத்து நிறுத்த அவர்கள் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. ஊர்வலத்தின் போது தாக்குதல் நடத்தவென கூலிக்கமர்த்தப்பட்ட பாதாள உலக நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் வழங்கியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு எதுவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அமைதியான முறையில் ஊர்வலமொன்றை ஒழுங்கு செய்தமைக்காக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2010 ஆகஸ்ட 15 இல் காலி காவல்துறையினரால் நையப் புடைக்கப்பட்டனர். காவல்துறையினரின் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இலங்கையில் மக்களின் கருத்துச் சுதந்திரமும் ஒன்றுகூடும் சுதந்திரமும் எவ்வாறு மறுக்கப்படுகின்றன என்பதற்கு ஒருசில உதாரணங்களே இவை. இந்தப் பட்டியல் நீளமானது முடிவற்றது.

இந்த முறைகேடுகளின் சிகரமாக தற்போது சட்டவாட்சிக்குச் சவாலாக விளங்கும் விடயம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களே. ஐ.நா. பொதுச் செயலாளரினால்; இது தொடர்பில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையானது கண்டறியப்பட்டுள்ள ஆதாரங்கள் நிரூபிக்கப்படுமிடத்து இலங்கை அரசாலும் விடுதலைப்புலிகளாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களாகவும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களாகவும் வகைப்படுத்தப்படக் கூடியவையாக உள்ள நிலையில் அவை தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. சபையையும் இலங்கை அரசாங்கத்தையும் கோரியுள்ளது. மேற்படி விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கோரியுள்ளது.

நாட்டில் சட்டவாட்சியையும் ஜனநாயக ஆட்சியையும் மீளமைப்பது தொடர்பில் சில குறுகிய கால விதப்புரைகளையும் இந்த அறிக்கை கொண்டுள்ளது. ஆனால் து}ரதிர்ஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்னர் இதைப்போலவே இலங்கைக்கான வரிச் சலுகைகளை வழங்குவதற்கு மாற்றீடாக மனித உரிமைகளை மேம்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டிருந்து.

ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கையின் பின்னான சம்பவங்களே தொடர்ந்து வரும் வருடங்களில் ஜனநாயகம், சட்ட ஒழுங்கு, நீதி பேணல் என்பவற்றை நோக்கிய பாதைக்கு மாறி இலங்கை பயணிக்கப் போகின்றதா அல்லது அநீதியான சர்வாதிகார வழியிலேயே தொடர்ந்தும் பயணிக்கப் போகின்றதா என்பதைக்  காட்டும்.

No comments: