Wednesday 2 May 2012

சிறி லங்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானமும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமும்


சிவராம் நினைவுக் கருத்தரங்கு 4
29 ஏப்ரல் 2012
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர்
த.தே.கூ. வன்னி மாவட்டம்
நாடாளுமன்ற கொறடா, த.தே.கூ.
தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்

அன்பு நண்பர்களே,

நண்பர் சிவராம் அவர்களின் ஏழாவது நினைவு தினத்தில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம். தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தமது அரசியல் பயணத்தை மேற்கொண்ட வேளையில் அவர்களோடு சேர்ந்து பயணித்தவர் அவர். ஒரு பயணத்தின் சக பயணியாக மட்டுமன்றி சில வேளைகளில் பயணத்தின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவராக, வழிகாட்டுனராக, வழிநடத்துனராக எனப் பல்வேறு பரிமாணங்களில் அவரது பயணம் அமைந்திருந்தது. அவரது வரலாற்றுப் பரிமாணமே ஏழு ஆண்டுகளின் பின்னரும் அவரது பெயரால் நாம் இங்கு கூடியிருக்கக் காரணமாகின்றது.

தூரதிர்ஷ்டவசமாக தமிழ் மக்களின் இக்கட்டான அரசியல் சூழல் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எத்தகைய திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்? நாம் செல்லுகின்ற திசை சரியானதா? எம்மை அத்தகைய திசையில் அழைத்துச் செல்பவர்கள் அதற்குத் தகுதியானவர்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே நாம் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இத்தகைய பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய வரலாற்றுச் கூழல் உருவாகியுள்ளது.

விடுதலையை நோக்கிப் பயணம் செய்த மக்கள் தம்மை வழிநடத்தி வந்த சக்தியைத் தொலைத்துவிட்டு நிற்கும் சூழலில், ஒரு அரசியல் கட்சியின் சக்திகளுக்கு அப்பாற்பட்டுச் சகல முனைகளிலும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த மூன்று வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றது. இந்தக் காலகட்டத்தில் எம்மோடு வந்து புதிதாக இணைந்து கொண்டோர் பலர். எம்மை விட்டுச் சென்றோர் சிலர். அடுத்தடுத்துப் பல தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைமை. உள்ளும் புறமும் பல அவதூறுகள், குற்றச் சாட்டுக்கள், வசைபாடல்கள், புறக்கணிப்புக்கள் என அலைமோதும் கடலில் எமது பயணம் அமைந்துள்ளது.

மறுபுறம், பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படுவதைத் தாமதப்படுத்தும் நோக்கம் கொண்டதே என நன்கு தெரிந்து கொண்டும் தொடர்ந்தும் சிறி லங்கா அரசுடன் பேச்சுக்களை நடாத்த வேண்டிய நிலைமை. அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகள் அறிவிப்புக்களாக வெளிவரும் முன்னரேயே அதற்கான மறுப்புக்கள் அரசாங்கத்தின் உள்ளேயே மற்றொரு தரப்பிடம் இருந்து வெளிப்படும் அவலம்.

ஆனாலும் நாங்கள் தொடர்ச்சியாக, சகிப்புத் தன்மையோடு பேச்சுக்களில் கலந்து கொள்வதால் அரசாங்கத்தின் பொய் முகத்தை எம்மால் தோலுரித்துக் காட்ட முடிந்திருக்கிறது. காலங்காலமாகத் தமிழ்த் தலைமைகளுக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்றாது விடும் சிங்களத் தலைவர்களின் போக்கு மகிந்த ராஜபக்~ ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தம் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. அது மாத்திரமன்றி தொடரவிருக்கின்ற பேச்சுக்களில் ஒரு நடுநிலையான மத்தியஸ்தர் அவசியம் என்பதுவும் உணர்த்தப் பட்டுள்ளது. எனவேதான் நாங்கள் தற்போது மூன்றாந் தரப்பின் மத்தியஸ்தம் தொடர்பாக பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கை என்னவென நன்கு தெரிந்து வைத்துள்ள போதிலும் தெரியாதது போல் நடித்துக் கொண்டு சிங்கள மக்களுக்கு ஒன்றும் சர்வதேசத்துக்கு மற்றொன்றும் எனப் பொய்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஒரு மாயக் கோட்டையை அரசாங்கம் கட்டிக் கொண்டிருக்கின்றது. என்றோ ஒருநாள் இடிந்துவிழப் போகும் இந்தக் கோட்டையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு விரிசலே தற்போது ஐ.நா. மனித உரிமைச் சபையில் சிறி லங்கா அரசாங்கத்துக்கு எதிராக நிறைவேற்றப் பட்ட தீர்மானம்.

இந்தத் தீர்மானம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்களைக் கொண்ட ஒன்றல்ல. அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்த, தொடர்ந்தும் முன்வைத்துக் கொண்டுவரும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்;டவையும்; அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நாமும், புலம்பெயர் அரசியற் சக்திகளும், தாய்த் தமிழக உறவுகளும் சர்வதேசத்தோடு நடாத்திய பேச்சுக்களின் போது எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டவையும் அல்ல. தவிர, இது சிறி லங்கா அரசாங்கத்துக்குப் பலமான நெருக்குதலைக் கொடுத்து தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வைப் பெற்றுத்தர விழையும் ஒரு காத்திரமான ஆயதமும் அல்ல.

ஆனாலும் சிறி லங்கா அரசாங்கம் இந்தத் தீர்மானத்துக்கு அஞ்சியது. தீர்மானம் கொண்டுவரப் படுவதைத் தடுத்துவிடப் பல வழிகளிலும் முயன்றது. ஏனைய நாடுகளில் உள்ள தனது நண்பர்கள் அனைவரதும் ஆதரவைக் கோரியது. பெருந்தொகைப் பணத்தை வாரியிறைத்துப் பல்வேறு பிரசாரங்களையும் மேற்கொண்டது. இவ்வளவு தூரம் அரசாங்கம் அஞ்சக் காரணம் என்ன?

தனது பிடி நாட்டில் தளர்ந்து விடும் என்றோ, தனது இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்றோ மாத்திரம் அல்ல. மாறாக, சிறி லங்காவில் சகல இடங்களிலும் ஆயுதப் படைகளைக் குவித்து வைத்துக் கொண்டும், சட்டத்துக்குப் புறம்பான ஆயுதக் குழுக்களின் உதவியுடன் கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டவாறும், தமிழர் தாயகத்தில் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் மக்களின் விகிதாசாரத்தைக் குறைத்துவிடும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டும், புதிது புதிதாக பௌத்த விகாரைகளை நிர்மாணித்தும் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்த எடுத்துவரும் முயற்சிகள் தடைப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இது. சிறுபான்மை மக்கள் என அரசாங்கத்தினால் விளிக்கப்படுவதற்குக் கூடத் தகுதியற்ற நிலையில் வைத்திருக்க நினைக்கும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதே அரசாங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாடு.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. அதேவேளை, சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான தமது ஐந்து தசாப்த காலத்துக்கும் மேலான போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் தந்த விலைக்கு ஈடாக ஒரு நியாயாமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் திடமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்.

சமரசங்களுக்கு இடமற்ற இத்தகைய கொள்கைகளை வலியுறுத்தியே நாம் அரசாங்கத்துடனோ அன்றி வேறு பன்னாட்டு நிறுவனங்களுடனோ அல்லது உலக நாடுகளுடனோ பேச்சுக்களில் கலந்து கொண்டு வருகின்றோம்.

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாம் கடந்த காலங்களில் முன்வைத்த எத்தகைய கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதாக இல்லை. எமது மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளின் அருகில் கூட அத் தீர்மானம் வரவில்லை.

ஆனாலும் இந்தத் தீர்மானத்தில் வரவேற்கத்தக்க ஒருசில அம்சங்கள் இல்லாமல் இல்லை. முதன்முதலாக ஈழத் தமிழர்களின் அரசியல் விவகாரம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றிருக்கின்றது. இந்த விவகாரம் உலக மன்றங்களில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பல காலமாக நாம் செய்த முயற்சி தற்போதுதான் நிறைவேறி இருக்கின்றது. தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் அநீதி இழைக்கப் பட்டிருக்கின்றது.  அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் குரல்தரும் யாவரும் ஓர் அடிப்படையாகக் கொள்ளக்கூடிய ஒரு ஆவணமாக இந்தத் தீர்மானம் விளங்குகின்றது.

அது மாத்திரமன்றி இலங்கைத் தீவில் நடைபெற்ற யுத்தத்தில் மனித நேயத்;துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் இத் தீர்மானம் கூறுகிறது.

தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள தேவைக்கும் அதிகமான இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் இறுதிப் போரின்போது உறவினர்களால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான எமது உறவுகளின் விடுதலை தொடர்பாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.

மேற்படி விடயங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சாதகமாகத் தென்பட்டாலும் கூட அடிப்படையில் கபடத் தனமானவை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்குச் சமாதிகட்டிவிடக் கூடியவை. தமிழ் மக்களின் உரிமைக்கான அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தைப் பற்றி எதுவும் இந்த அறிக்கையில் கூறப்படவில்லை. தமிழர்கள் இலங்கைத் தீவில் தனியான தேசிய இனம் என்றோ, அவர்களுக்கான ஒரு மரபுவழித் தாயகம் உண்டு என்பதைப் பற்றியோ, அந்த மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளானமைக்கு இன ரீதியான ஒடுக்குமுறையே காரணம் என்றோ, அவர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தப் பட்டுள்ளது என்றோ  இந்த அறிக்கை ஒரு இடத்திலேனும் குறிப்பிடவில்லை.

ஆகவே, நாம் இந்த அறிக்கையை மனப்பூர்வமாக வரவேற்க முடியாது. ஆனாலும் இந்த அறிக்கையை நிறைவேற்றியதன் ஊடாக உலக நாடுகள் தெரிவித்துள்ள நல்லெண்ணத்தையும் முற்றாக உதாசீனம் செய்துவிட முடியாது. இதுவே எமது நிலைப்பாடு. இதுதான் சாணக்கியமான முடிவும் கூட. ஏனெனில் எமது கோரிக்கைகளை வென்றெடுக்க எமக்கு ஏனைய நாடுகளின் அனுசரணை மிகவும் அவசியம். இன்று தட்டிக் கழித்து விட்டால் பிற்காலத்தில் எமக்குத் தேவைப்படும்போது இந்த ஆதரவைப் பெறுவதற்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டி ஏற்படும்.

ஆனால், எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் பலர் எம்மையும், எமது கட்சியையும் வாய்க்கு வந்தபடி விமர்சித்து வருகின்றார்கள். அவர்களை நினைக்கும்போது பாவமாக உள்ளது.

அதேவேளை, எம்மை அழித்துவிட நினைக்கும் எமது எதிரிகளுக்கு அது ஆனந்தத்தையும் தருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்துடன் ஒழிந்து போய்விடும் என அவர்கள் மனப்பால் குடிக்கின்றார்கள். இத்தகைய எண்ணம் கொண்டொருக்கு நான் ஒன்றை ஆணித்தரமாகக் கூறி வைக்க விரும்புகிறேன். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்று தரும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளோ ஒரு போதும் பின்வாங்க மாட்டாது: சோரம் போகவோ, எம்மை நம்பியிருக்கும் மக்களுக்குத் துரோகம் செய்யவோ மாட்டாது என்பதையும் ஆணித்தரமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இதேவேளை இந்தத் தீர்மானம் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் நடைபெற்று வருகின்றன. சாதகமாகவும் பாதகமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. மறுபுறம் தமிழ் மக்களிடையே ஒருவித உற்சாகம் ஏற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

அதீத நம்பிக்கை வைத்தல் எதற்குமே நல்லதல்ல. இன்றைய சூழலையும் அவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும். அதீத நம்பிக்கை கொள்வதால் நாம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும் அபாயம் உள்ளது. அவ்வாறான ஒரு நிலையில், சென்றடைய வேண்டிய இலக்கை அடைவதில் சிரமம் ஏற்படும்.

தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டே ஐ.நா. மனித உரிமைச் சபையில் உலக நாடுகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என யாராவது நினைத்துக் கொண்டால் அவர்களது அரசியல் அறிவை நினைத்து எம்மால்  அனுதாபப்படவே முடியும்.

தீர்மானத்தின் பின்னான காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறி லங்கா அரசாங்கம் திறந்த மனத்துடன் பேச்சுக்களை நடாத்துவதன் ஊடாக மாத்திரமே தமிழ் மக்களுக்கான ஒரு அரசியற் தீர்வு சாத்தியம் என்ற உலக நாடுகளின் எண்ணம் மேலும் வலுப் பெற்றிருக்கின்றது. இது தொடர்பான கருத்துப் பகிர்வுகளை அவை எம்மோடு நடாத்தியிருக்கின்றன.

தொடர்ந்தும் தனது கபடத் தனமான போக்கிலேயே சென்று தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம்: தீர்வு எதனையும் வழங்காது அவர்களை வஞ்சித்து விடலாம் என சிறி லங்கா அரசாங்கம் நினைக்குமானால் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலக நாடுகளின் அழுத்தத்தையும், விமர்சனங்களையும், கண்டனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படக் கூடும்.

சிறி லங்கா அரசாங்கம் தொடர்ந்தும் விடாப்பிடியான போக்கிலேயே செயற்படுமானால் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கோரிவரும் தமிழ் மக்கள்; வெளியக சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கும் நிலையை உலக நாடுகள் ஏற்படுத்தித் தர முன்வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஆனால், இத்தகைய நிலையைத் தோற்றுவிக்க நாம் இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டும். இன்றைய நிலையில் எம்மிடையே உள்ள பேதங்களை மறந்து ஒன்றுபடுதலே எம்முன்னே உள்ள ஒரேயொரு தெரிவு. ஆனால், ஒன்றுபடுதல் என்பது இலேசான விடயமல்ல.

போரின் இறுதி நாட்களில் வன்னியிலும், கடைசியாக முள்ளிவாய்க்காலிலும் எமது மக்கள் அனுபவித்த உயிரிழப்புக்கள், துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. என்றென்றும் மறக்க முடியாதவை. நாம் மறந்து விடவும் கூடாதவை. அன்று நடைபெற்ற அவலங்களை நாம் ஆத்மார்த்தமாகச் சிந்தித்தோமேயானால், எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பது ஒன்றே எமது நோக்கம் என எண்ணிச் செயற்படுவோம்.

எம்மிடையே உள்ள பேதங்கள் அடிப்படையில் கொள்கை ரீதியிலானதல்ல. மாறாக, நான் பெரிதா, நீ பெரிதா என்பதை அடிப்படையாகக் கொண்டவையே. இத்தகைய முரண்பாடுகள் எமது மக்களுக்கு நன்மை எதனையும் விளைவிக்காது. மாறாக எதிரிக்கே அது உவப்பான விடயம். இன்று நாம் ஒற்றுமைப்படத் தவறினோமானால் எமது மக்களின் விடுதலையைப் பின் தள்ளியவர்கள் என்ற வரலாற்றுப் பிழையை இழைத்தவர்கள் ஆவோம்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியற் போராட்டம் இன்று மூன்று தளங்களில் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. தமிழர் தாயகத்தில் எமது மக்களும், புலம்பெயர் நாடுகளில் எமது உறவுகளும், தாய்த் தமிழகத்தில் எமது தொப்புள் கொடி உறவுகளும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் இணைந்த வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகின்றது. இந்த மூன்று மகா சக்திகள் இடையே உருவாகக் கூடிய பரஸ்பர புரிந்துணர்வே தமிழ் மக்களின் இலட்சியத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமையும். இந்தச் செயற்பாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு நல்ல தளமாகக் கொள்ளப்பட முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது எமது கரங்களிலேயே உள்ளது.

ஐ.நா. அறிக்கையைச் சரியாக மதிப்பிடாமல் அது தமிழர்களுக்கு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்கும் என நினைத்துச் செயற்படாமல் இருந்தோமேயானால் எமது மக்களின் இலட்சியப் போராட்டம் வெல்லப் படுவதற்கு இன்னமும் காலம் எடுக்கும் என்பதே யதார்த்தம்.

எனவே, புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் உங்களால் முடிந்தவரை நீங்கள் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஐனநாயக ரீதியிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு எமது மக்களின் இலட்சியத்தை வென்றெடுக்க உழைக்க வேண்டும் என்பதே எனது வேண்;டுகோள். அதேவேளை தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படும் உங்கள் சகோதரர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் நிதியாதாரங்களை வழங்கி அவர்கள் தமது வாழ்வில் முன்பிருந்த சுபீட்ச நிலையை அடையக் கரங் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments: